இந்து-சிங்களம், இந்து-இஸ்லாம் காதல் ஜோடிகளுக்கு மெகசின் சிறையில் இன்று திருமணம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் உள்ளிட்ட இருவர் இன்று (05) திருணம பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 35 வருடகால சிறை தண்டனை பெற்றுள்ள வவுனியா பாவற்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இளங்கேஸ்வரன் (34 வயது), வவுனியா நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேன சுதர்ஷினி (32 வயது) என்ற பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இளங்கேஸ்வரனுக்கும் சுதர்ஷினி என்ற சிங்கள பெண்ணுக்கும் இடையில் 15 வருட கால காதல் தொடர்பு இருந்து வந்த நிலையில் இன்று இவர்கள் வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுடைய திருமணத்தை அடுத்து இளங்கேஸ்வரனுக்கு தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை கிடைக்கும் என உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டு கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் புஸ்பராஜா (34 வயது) இன்று தனது காதலியான மொஹமட் ராசிக் பாதிமாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

இந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவ்விருவருக்கும் இடையில் 10 வருட காதல் தொடர்பு இருந்து வந்துள்ள நிலையில் இன்று திருமணம் செய்து காண்டுள்ளனர்.

இந்த திருமண வைபவமும் வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் இடம்பெற்றது.

இன்றைய இரு திருமண நிகழ்வுகளையும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

-adaderana

Published by

Leave a comment