ஒரு நாட்டை மட்டும் குறிவைத்து இயங்குவது ஐ.நா. மனித உரிமை பேரவையின் கடமை அல்ல!

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் சோ. டெக்கான் க்ரானிக்கள் பத்திரிகைப் பொறுப்பாசிரியர் பகவான் சிங்குக்கு அளித்த பேட்டி:

கேள்வி: இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கூட உள்ள தமிழர் கட்சிகளும், தமிழர் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கெளன்ஸின் முன்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

சோ: அமெரிக்கத் தீர்மானம் பற்றி இங்கே பத்திரிகைகளும், பல அமைப்புகளின் தலைவர்களும் பேசுவதை வைத்துப் பார்த்தால், அந்தத் தீர்மானம் இலங்கையைப் பெரிதும் கண்டிப்பது போலவும், இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துவது போலவும் ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

ஆனால், உண்மையில் அமெரிக்கா கொண்டுவருகிற தீர்மானம் இப்படி எல்லாம் சொல்லவில்லை. தென் ஆபிரிக்காவில் ட்ரூத் கமிஷன் என்று நியமித்தது போல ஒரு கமிஷனை இலங்கை நியமித்தது அல்லவா?

அந்த கமிஷனின் சிபார்சுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதை அலட்சியப்படுத்தி விடாமல், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகிற வகையில் ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் தான் அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது. தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் இதை இலங்கைக்கு எதிரான மிகப் பெரிய நடவடிக்கையாக எப்படிப் பார்க்கிறார் கள் என்பது எனக்குப் புரியவில்லை.

கேள்வி: இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் கேட்டு வருகிறார்களே?

சோ: போர்க் குற்றங்களைப் பற்றிய அமெரிக்கத் தீர்மானம் பேச வில்லை. மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுகிறது. அந்த மீறல்கள் பற்றி விசாரணையை மனித உரிமைக் கெளன்ஸிலோ, வேறு எந்தச் சர்வதேச அமைப்போ நடத்த வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் கோர வில்லை. இலங்கையே இந்த விசா ரணையைச் செய்ய வேண்டும் என்று தான் அத்தீர்மானம் கூறுகிறது.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழு செய்த சிபார்சுகளை நடை முறைப்படுத்த ஐ.நா. வின் மனித உரிமைக் கமிஷன் உதவ வேண்டும். இலங்கையில் உள்ள மனித உரிமைக் காரர்கள் கூட இந்தத் தீர்மானத்தில் ஒன்றும் இல்லை என்றும், இது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள புலி ஆதரவாளர்கள் இது ஒரு அமெரிக்கத் தீர்மானமாக இருந்தாலும், அது ஐ.நா. சபைக் கெளன்ஸிலுக்கு வருவதாலும், இதை ஏதோ மிகப் பெரிய விஷயம் போல் நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

அவர்கள் அதைப் படித்திருக்கலாம், ஆனால் மக்களிடையே அந்தத் தீர்மானத்தில் உள்ளதை உள்ளபடியே கூறிவிட்டால், சுவாரஸ்யம் இருக்காது என்பதால், அதை ஒரு பெரிய விஷயம் போல் சித்திரிக்கிறார்கள். இங்கே பாராளுமன் றத்திலிருந்து பொது மேடைகள் வரை முழக்கமிடும் அளவுக்கு – அந்தத் தீர்மானத்தில் எதுவும் இல்லை.

இதே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கெளன்ஸில், இஸ்ரேல் செய்த மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசியபோது என்ன நடந்தது? இன்று தீர்மானம் கொண்டு வருகிற அமெரிக்கா அன்று அதை வன்மையாக எதிர்த்தது. இதெல்லாம் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கண்டனம் செய்தது.

உலகமெங்கும் மனித உரிமை மீறல் கள் நடந்து கொண்டிருக்கும் போது, இஸ்ரேலை மட்டும் குறி வைப்பானேன்? என்று அமெரிக்கா கேட்டது, இப்படி ஒரு நாட்டைக் குறி வைத்து மனித உரிமைக் கெளன்ஸில் நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது என்றும் அமெரிக்கா கூறியது. இப்போது இந்தியா அதைத்தான் சொல்கிறது. ஒரு நாட்டை மட்டும் குறி வைத்துப் பேசுவது மனித உரிமைக் கெளன் ஸிலின் வேலை அல்ல என்பது இந்தியாவின் வாதம்.

இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்களைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகக் கூட அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கலாம். பாருங்கள், இஸ்ரேல் மட்டும்தானா? உலகில் பல நாடுகளில் இந்த மாதிரி நடக்கிறது.

அதையெல்லாம் விட்டு விட்டு ஏன் இஸ்ரேல் பக்கம் வருகிaர்கள்? என்று கேட்பதற்காக இம்மாதிரி அமெரிக்கா செய்திருக்கி றதோ? என்னவோ இப்படிப்பட்ட தீர்மானத்தில் இந்தியா ஆர்வம காட்ட வேண்டிய அவசியம் என்ன? இந்த மாதிரிப் பின்னணி கொண்ட இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முன்வராமல் இருப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பது என் கருத்து.

கேள்வி: போர்க் குற்றம்புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கு நீங்கள் கூறும் வழிமுறைதான் என்ன?

சோ: போரே நடக்கவில்லையே, யுத்தம் நடக்கவில்லை. இலங்கையில் நடந்தது – தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை, அவ்வளவு தான். அது ஒரு யுத்தமல்ல. இப்போது இந்தியாவில் நக்ஸலைட்டுகளுக்கும், இந்திய அரசுக்குமிடையே யுத்தம் நடந்துகொண்டிருக்கிறதா? இல்லையே? சில மத அடிப்படை தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுக்கிற நடவடிக்கைகள் எல்லாம் யுத்தங்களா? அவை எல்லாம் யுத்தம் அல்ல. தீவிரவாதம் நடக்கிறது. பயங்கரவாதம் நடக்கிறது. அல்லது உள்நாட்டுக் கலகம் நடக்கிறது. அதை எதிர்த்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு இராணுவம் தேவைப்பட்டால் அதையும் பயன்படுத்துகிறது.

இதை யுத்தம் என்று சொல்லிவிட முடியுமா? இராணுவம் வந்தாலே யுத்தம்தான் என்று அர்த்தமா என்ன? அப்படிப் பார்த்தால் பஞ்சாபில் பொற்கோயிலில் தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப் பட்டது. அப்போது பிந்தரன்வாலே கோஷ்டிக்கும் இந்தியாவுக்குமிடையே யுத்தம் நடந்ததா? அதே போலத்தான் இலங்கையிலும் யுத்தம் நடக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு இரா ணுவம் பயன்படுத்தப்பட்டது.

கேள்வி: யுத்தமோ அல்லது வேறு எதுவோ – அங்கு நடந்த நிகழச்சிகளில் ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு என்ன சொல்கிaர்கள்?

சோ: மீண்டும் சொல்கிறேன். அங்கே நடந்தது. யுத்தம் அல்ல, தீவிரவாதிகளுக்கும், அரசுக்குமிடையே நடந்த மோதல், இதில்தீவிரவாதிகளான விடுதலைப் புலிகள், சாதாரண மக்களை கேடயங்களாகப் பயன்படுத் தினார்கள். சிவிலியன் களிடையே போய் ஒளிந்து கொண் டார்கள். சிறுவர்களைக் கூட கேடயங் களாகத் தங்களுக்கு முன் நிறுத்திக் கொண் டார்கள். அப்போது அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

சரி, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தீவிரவாதிகளை அப்படியே விட்டுவிட வேண்டியதுதான் என்று ஒதுங்கி இருந்துவிட வேண்டுமா? அல்லது தீவிரவாதிகளின் மீதான நடவடிக்கையைத் தொடர வேண்டுமா? இந்த மாதிரி நேரங்களில் சில சிவி லியன்களினது மரணம் நேர்ந்தால், அது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால், அதை வைத்துப் போர்க் குற்றம் நடந்து விட்டது என்று கூற முடியாது.

கேள்வி: தமிழ்த் தேசியம் எல்லா எல்லைகளையும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்று கூறுவீர்களா?

சோ: அது பற்றிச் சந்தேகம் வேறு உண்டா என்ன? பல வருடங்களாக தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பல தவறுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது இலங்கை நிலைமையையே எடுத்துக் கொள் ளுங்கள். மோதலில் இரு தரப்புகள், ஒன்று – தீவிரவாதத் தரப்பு, மற் றொன்று – அரசு தரப்பு. தீவிரவாதத் தரப்புக்கு எந்த விதிமுறையும் கிடையாது.

அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆஸ்பத்திரிகளில் கூடப் போய் நுழைந்து கொண்டு, அங்கிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யலாம். மக்களைக் கேடயமாகப் பயன்படுத் தலாம். தங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்று கூறி, எந்த விசாரணையும் இல்லாமல் அப்பாவி மக்களைத் தூக்கில் போடலாம். குழந்தைகளை அவர் கள் குடும்பங் களிலிருந்து மிரட்டிப் பறித்து வந்து, கேடயங்களாகப் பயன்படுத் தலாம். மிரட்டிப் பணம் வசூல் செய்யலாம். கண்ணி வெடிகளை வைத்து விடலாம். மனித வெடிகுண்டு களைத் தயாரித்து அனுப்பலாம்.

இவர்கள் எப்படி என்ன செய்தாலும், எதிர்தரப்பில் இராணுவத்தினர் சர்வ தேசச் சட்டங்கள், மனித உரிமை விதி முறைகள், யுத்த கால நெறிமுறைகள் என்று எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடித்தாக வேண்டும். நடக்கிற காரியமா இது? இப்படித்தான் தீவிரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றால் எப்படி முடியும்?

கேள்வி: தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அரசு தீவிரவாதத்தில் இறங்கி விடக் கூடாது என்ற வாதத்திற்கு நீங்கள் என்ன சொல்கிaர்கள்?

சோ: ஒருவருடைய சுதந்திரதைப் பறிப்பது குற்றம். ஆனால் குற்றவாளி களைச் சிறையில் அரசாங்கம் அடைக்கும் போது, அவர்களுடைய சுதந்திரத்தை அரசு பறித்து விட்டதாக யாரும் சொல்வதில்லை.

குற்றவாளிகளைச் சிறையில் வைப்பது அரசின் கடமை. ஒருவரைக் கொல்வது குற்றம். ஆனால், பொலிஸாரை அடித்து வீழ்த்தி ஒருவன் தப்பித்து ஓட முய ன்றால், அவனைச் சுடுவது குற்றமா காது. அப்படிச் செய்வது பொலிஸாரின் கடமை. அதேபோல், தீவிரவாதத்தின் மூலம்ஒரு நாட்டின் மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகிற கூட்டத்தை ஒழிப்பது ஒரு அரசின் கடமை. அரசின் அந்தச் செயல் தீவிரவாதமல்ல. அது உறுதியான நடவடிக்கை. அப்படிச் செய்யவில்லை. என்றால், அப்போதுதான் அந்த அரசு பெரும் தவறு செய்த அரசாகிறது.

-Thinakaran

Published by

Leave a comment