மண்டேலாவிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கை

ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டது என நாம் கடந்த வாரம் கூறினோம். அமெரிக்க பிரேரணை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்விணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அதற்கு காரணமாகும்.
ஆனால், அதனால் வெளிநாடுகளின் நெருக்குதல் இத்தோடு முடிவடைந்ததாக அர்த்தமாகாது. ஏனெனில் அந்தப் பிரேரணை இலங்கைக்கு சில பொறுப்புக்களையும் வழங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளில் அர்த்தமுள்ள சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அந்த சிபார்சுகளில் எந்தளவு நிறைவேற்றியிருக்கிறது, எதிர்க்காலத்தில் மேலும் என்ன என்ன செய்யவிருக்கிறது என்பதைப் பற்றி கூடிய விரைவில் மனித உரிமை பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுமே அந்த பொறுப்புக்களாகும்.

அத்தோடு இலங்கையின் நடவடிக்கைகளை சர்வதேச ரீதியாக மேற்பார்வை செய்யவும் அந்தப் பிரேரணை வழி வகுத்துள்ளது. அதன் படி ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயமும் பேரவையின் 22ஆவது அமர்வின் போது இலங்கை இந்த விடயத்தில் என்ன செய்திருக்கிறது என்பதைப் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எனவே இத்தோடு கதை முடிந்தது என்று எவராலும் கூற முடியாது.

இலங்கை அரசாங்கத்திற்கு இது ஒரு வகையிலும் பிரச்சினையாக முடியாது. ஏனெனில் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க முடியாது என அரசாங்கம் ஒருபோதும் கூறவில்லை. தாம் ஏற்கெனவே நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க ஆரம்பித்து விட்டோம் என்றும் அப்பணியை பூர்த்தி செய்ய தமக்கு அவகாசம்; வேண்டும் என்றுமே இலங்கையின் அமைச்சர்கள் ஜெனீவாவில் வைத்து வாதிட்டனர். இப்போது அவர்கள் கேட்ட அவகாசம் கிடைத்து இருக்கிறது.

ஆனால், இலங்கை அரசாங்கம் தாம் மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்ததாகவே கருதுகிறது. அல்லது அவ்வாறு காட்டுகிறது. போரின்போது இடம் பெற்றதாக கூறப்படும் குற்றங்களைப் பற்றி சர்வதேச விசாரணையை கோரிய அத்தனை பெரினதும் இணக்கத்துடன் அச்சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டோமே என்ற விடயத்தை அவர்கள் கருத்தில் கொள்வதாக தெரிவதில்லை. மனித உரிமை பேரவையில் நடைபெற்ற வாக்களிப்பின் போது தமக்கு சாதகமாக குறைந்த வாக்குகள் கிடைத்தனது என்ற விடயத்திற்காக இலங்கையின் தலைவர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் குறை கூறுகிறார்கள். அதனால் கிடைத்த அரசியல் இலாபத்தைப் பற்றி அவர்கள் பேசுவதேயில்லை.
அவர்கள் அமெரிக்காவை விடவும் இந்தியாவையே குறை கூறுகிறார்கள். இந்தியா முன்கூட்டியே தமது முடிவை அறிவித்தமையே இலங்கைக்கு ஆதரவாக இருந்த பல நாடுகள் தமது முடிவையும் மாற்றிக் கொண்டன என வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார். அது உண்மைதான். ஆனால் தமது பிரேரணை தோல்வியடையும் என்ற நிலை நிச்சயமாக காணப்பட்டு இருந்தால் அமெரிக்கா வேறு நாடுகள் மீது நெருக்குதலை கொடுத்திருக்கக் கூடும். அதேவேளை அமெரிக்க பிரேரணையின் காரத்தையும் இந்நியா குறைத்து இருக்கிறது என்பதைப் பற்றியும் அரசாங்கத்தின் தலைவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.

எவ்வாறோ அமெரிக்க பிரேரணை இப்போது நிறைவேறி விட்டது. இது கட்டாயம் செயற்படுத்த வேண்டிய பிரேரணையல்ல (non-binding resolution) என பேராசிரியர் பீரிஸ் அண்மையில் ஊடகவியலாளர்களுடன் கூறியிருந்தார். சட்டப்படி அதுவும் உண்மை தான். ஆனால் அப்படியென்றால் இலங்கை அரசாங்கம் பிரேரணையை கொண்டு வராமல் தடுக்க இவ்வளவு பிரயத்தனம் மேற்கொள்ளத் தேவையில்லையே. அதேவேளை இலங்கை அரசாங்கம் பிரேரணையின் படி நடந்து கொள்ள மாட்டாதா என்ற கேள்வியும் அதனால் எழுகிறது.

நல்லிணக்க ஆணைக் குழுவின் சகல சிபாரிகளையும் நிரைவேற்ற முடியாது என ஜெனீவா சென்ற மற்றொரு அமைச்சரான மஹிந்த சமரசிங்க கூறியிருந்தார். ஆணைக் குழுவின் சகல சிபார்களையும் நிரைவேற்ற வெண்டும் என ஜெனீவா பிரேரணையும் இலங்கையை வலியுறுத்தவில்லை. ஆணைக் குழுவின் சிபார்சுகளில் ஆக்கபூர்வமான சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என்றே பிரேரணை கூறுகிறது.

இது இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமையக் கூடிய ஒரு சொற்றொடராகும். சிபார்சுகளில் தமக்கு வசதியானவற்றை மட்டும் நிறைவேற்ற இதனால் தமக்கு வாய்ப்பு இருக்கிறது என இலங்கை அரசாங்கம் நினைக்கலாம். ஆனால் அமெரிக்கா என்ன நொக்கத்தில் பிரேரணையில் இவ்வாறு வார்த்தை பிரயோகம் செய்திருக்கிறது என்பது இப்போதைக்கு விளங்கவில்லை. அது பின்னர் தான் விளங்கும்.

பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கும் இடையிலான போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் விடயத்தில் சம்பந்தப்பட்டோரை பொறுப்புக் கூற வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டது. எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளில் அந்த விடயம் தொடர்பான சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்க்காலத்தில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையை வற்புறுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.

மனித உரிமைகளோடு நேரடியாக சம்பந்தப்படாவிட்டாலும் அதிகாரப் பரவலாக்களையும் அமெரிக்கா பிரேரணையில் சேர்த்துக் கொண்டுள்ளது. எனவே நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் அது சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ள சிபார்சுகளும் எதிர்க் காலத்தில் வலியுறுத்தப்படலாம். இந்தியாவும் அமெரிக்க பிரேரணையைப் பற்றிக் குறிப்பிட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த இரண்டும், அதாவது பொறுப்புக் கூறல் மற்றும் அதிகார பரவலாக்கல் அகிய இரண்டு துறையிலும் முன்னோக்கிச் செல்வதானது இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வளவு இலேசான காரியங்களல்ல. அரசாங்கத்தின் தலைவர்களின் கண்ணோட்டங்களும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் நெரக்குதல்களுமே அதற்குக் காரணமாகும். ஆனால், அந்த இரண்டு துறைகளில் முன்னோக்கிச் செல்லாமையின் காரணமாகவே அமெரிக்க பிரேரணையும் கொண்டு வரப்பட்டது. எனவே எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அந்த இரண்டு துறைகளில் முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் தவரினால் சர்வதேச நெருக்குதல் மேலும் வலுப்பெறும்.

நல்லிணக்க ஆணைக்குழு தமது வரையறைகளுக்கு அப்பால் சென்றுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருக்கிறார். இதற்கு முன்னர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இதனை கூறியிருந்தார். ஆனால் அமைச்சர் டியூ குணசேகர அணைக்குழு அவ்வாறு தமது வரையறைகளுக்கு அப்பால் செல்லவில்லையெனக் கூறுகிறார்.
ஆணைக்குழு தமது வரையறைகளுக்கு அப்பால் சென்றுள்ளது என்பது தவறான கருத்தல்ல. ஆணைக்குழுவே தமது அறிக்கையில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. நல்லிணக்கம் என்ற விடயத்திற்காக 2002 ஆண்டிலிருந்து இது வரை காலத்தை மட்டும் ஆராய்தல் போதுமானதல்ல என்று கூறியிருக்கும் ஆணைக்குழு, அந்த விடயத்திற்காக தாம் தமது வரையறைகளுக்கு அப்பால் சென்றுள்ளதாக ஏற்றுக் கொண்டுள்ளது. அது ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தாகும்.

அரசாங்கம் சர்வதேச ரீதியில் நம்பிக்கையைப் பற்றிய பிரச்சினையை எதிர் நொக்கியிருக்கிறது. அரசாங்கமே நியமித்த ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றவேண்டும் என்று சர்வதேச சமூகம் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டு வருவதற்கு அதுவே காரணமாகும். இந்த நிலையில் அமைச்சர்கள் இவ்வாறு கருத்து வெளியிடுவது பிரச்சினையை மேலும் சிக்கலாக்காதா, இவர்கள் இவ்வாறு கருத்து வெளியிடத் தான் வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் மற்nறூரு பிரேரணை கொண்டு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நெல்சன் மண்டெலா தலைமையிலான பன்னாட்டு உலகத் தலைவர்களைக் கொண்ட ‘மூத்தோர்களின் அமைப்பு’ (Elders Group)  அண்மையில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-Tamilmirror

Published by

Leave a comment