சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கெளரவிப்பு

ஊடகத்துறையில் சிறந்த சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 11 பேர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஒலிபரப்புத் துறைசார்ந்த சற்சொரூபவதிநாதன், புர்கான் பீ இப்திகார் ஆகியோர் உட்பட 11பேர் ஜனாதிபதியிடமிருந்து கெளரவம் பெற்றனர்.

ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையம் 374 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் ஊடக நூலகம், நவீன கேட்போர் கூடம், ஆய்வகம் உட்பட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி நவீன வசதிகளைக் கொண்டதாக இந்நிலையம் அமையப்பெற்றுள்ளது.

அமைச்சர்கள் பிரியதர்ஷன யாப்பா, பிரதியமைச்சரும் பதில் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனுஷநாணயக்கார, ஏ.எச்.எம்.அஸ்வர், தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கணேகல உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பணத்தைக் குறிக்கும் இரண்டு சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன.

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறை சார்ந்த கலாநிதி வெஸ்டர் கேம்ஜ் பீரிஸ், திருமதி சிறியா ரத்னாயக, எல்மோ குணரத்ன, எட்வின் ஆரியதாச, ஸ்ரீவால் கொடிக்கார, திஸ்ஸ லியன சூரிய ஸ்ரீதிலகசிறி, சுகதபால செனரத் யாப்பா, டி.எம். காரியகரவன ஆகியோரும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-Thinakaran

Published by

Leave a comment