-சீனன்கோட்டை முர்சித் தாஹா (நளீமி)
தனிமனிதர்களின் கூட்டுச் சேர்க்கையான சமூகக் கட்டமைப்பை மிகச் சரியாக வடிவமைப்பதில் இஸ்லாம் அதீத கவனக்குவிப்பை செய்கின்றது. அவ்வாறே சீரான சமூகக் கட்டமைப்பை பாதிக்கின்ற அனைத்து வழிகளையும் தடுப்பதுடன் வன்மையான அணுகுமுறையையே கையாள்கின்றது.
அந்த வகையில் அயலார் அல்லது அண்டை வீட்டார் குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு அலாதியானதும் தனித்துவமானதாகவும் காணப்படுகின்றது. மட்டுமல்ல, இஸ்லாம் இன, மத வேறுபாடுகளிலிருந்து நீங்கி அண்டை அயலார் தொடர்பான கருத்தியலை மிக விரிந்த பார்வையில் நோக்குகின்றது. எந்த மதத்தை அல்லது எந்த இனத்தை சேர்ந்தவராயினும் அண்டை அயலாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு பணிக்கின்றது.
மேற்கு நாடுகளில் ஒவ்வொருவரும் தான், தனது பிள்ளைகள், தனது குடும்பம், என வாழ்கின்ற சூழலில், அண்டை வீட்டான் யார் என்பது கூட தெரியாத ஒருவகையான வறண்ட உறவுமுறைதான் காணப்படுகின்றது. அதேபோன்று கீழைத்தேய நாடுகளில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல எப்போதும் தனது அண்டை வீட்டானுடன் காணிப் பிரச்சினை, வேலிப் பிரச்சினை என எப்போதும் முரண்பட்டு நீதிமன்றம் வரை செல்கின்ற நிலையினைக் காண்கின்றோம்.
இந்த இரண்டு தீவிர நிலைகளுக்குமிடையே இஸ்லாம் அண்டை வீட்டார் குறித்து நடுநிலையான உன்னதமான கருத்தியலை முன்வைத்திருப்பதனை காணலாம். மட்டுமல்ல உலகமே ஆச்சரியத்தோடு பார்க்குமளவுக்கு உன்னதமான முன்மாதிரிகளையும் உருவாக்கியும் காட்டியது.
“நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு இணை வைக்காதீர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், அவ்வாறே உறவினர், அநாதைகள், ஏழைகள், உறவினரான அண்டை வீட்டார் மற்றும் உறவினரல்லாத அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்” என ஸ¥ரா நிஸாவின் 36 ஆவது வசனம் குறிப்பிடுகின்றது. அண்டை அயலாருடன் நல்லமுறையில் நடந்து கொள்வதனை அடியான் தனக்கு வழிப்பட்டு நடப்பதுடன் இணைத்துப் பேசியிருப்பது அதன் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டப் போதுமான ஆதாரமாகும்.
“அண்டை வீட்டான் பசித்திருக்கின்ற நிலையில் தான் மாத்திரம் வயிறு நிறைய சாப்பிடுகின்றவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டார்கள். இப்படியான ஒரு வழிகாட்டலை வேறு மதங்களில் பார்க்க முடியுமா? அல்லது மேற்கத்தேய கொள்கைளில்தான் காண முடியுமா.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டார்கள், ஓ அபூதர் நீங்கள் சிறிதளவு குழம்பு சமைப்பதாயினும் அதற்கு நீரை மேலதிகமாக சேர்த்து உங்கள் அண்டை வீட்டாருக்கு பரிமாறுங்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.
அவ்வாறே அண்டை அயலாறுடன் நல்ல உறவைப் பேணாது அவர்களுக்கு தீங்கு விளைவிப்பது, அவனுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவது எமது அனைத்து இபாதத்களையும் வீணடித்துவிடும் அளவுக்கு பாரதூரமானது என்பதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்தி நிற்கின்றது.
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில பெண்கள் பற்றி வினவப்பட்டது. அல்லாஹ்வின் தூதரே குறித்த பெண் அதிகம் இரவு நேரத் தொழுகைகளில் ஈடுபடுகின்றார். பகல் பொழுதுகளில் நோன்பு நோற்கின்றார். அதிகம் ஸதகா செய்கின்றார். ஆனால் தனது நாவினால் அண்டை வீட்டாரை அதிகம் இம்சைப்படுத்துகின்றார்” எனக் குறிப்பிடப்பட்டது.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அவளது நன்மைகளுக்கு எந்தப் பயனுமில்லை. அவள் நரகிலே இருப்பாள் என குறிப்பிட்டார்கள். மீண்டும் ஸஹாபாக்கள் கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே “குறித்த ஒரு பெண் அவர் கடமையான தொழுகைகளை மாத்திரமே தொழுகின்றார். எஞ்சிய தயிரை ஸதகா செய்கின்றார். ஆனால் யாருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை” எனக் கூற அப்பெண் சுவர்க்க வாசிகளுடன் இருப்பாள் எனக் குறிப்பிட்டார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது “வல்லாஹி லாயுஃ மின் (அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவனாகக் கருதப்படாமாட்டான்), வல்லாஹி லா யுஃ மின், வல்லாஹி லா யுஃ மின் என மூன்று தடைவைகள் கூறிய போது ஸஹாபாக்கள் யார் என வினவிய போது “யாருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டான் பாதுகாப்புப் பெறவில்லையோ அவன்” எனக் குறிப்பிட்டார்கள்.
எமது அண்டை அயலார் எம்மிலிருந்து பாதுகாப்புப் பெற்றிருக்கின்றனரா? அவர்களது உரிமைகளை மிகச் சரியாக கொடுக்கின்றோமா? எமக்கு விருப்பமான உணவுகளை அவர்களுக்கும் கொடுத்துப் பரிமாறுகின்றோமா? எமது அழுக்குகள், கழிவுகள், அவனுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தாதிருக்கின்றதா? இந்தக் கேள்விகளுக்கு அல்லது இதுபோன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் வருமாயின் அவன் தான் இஸ்லாம் எதிர்பார்க்கின்ற அண்டை வீட்டான்.
எமது அண்டை வீட்டார் ஒரு அந்நியராக, ஏன் ஒரு யூதனாக இருந்தாலும் அவனுடன் நல்ல முறையில் நடக்குமாறு இஸ்லாம் பணிக்கின்றது. மட்டுமல்ல ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்தும் காட்டினார்கள். அவ்வாறே ஸஹாபாத் தோழர்களையும் நெறிப்படுத்தினார்கள்.
பொதுவாக இறத்த உறவுடன் தொடர்புபட்டவர்களே வாரிசுத் சொத்திலே பங்கெடுப்பார்கள். ஒருமுறை ஜிப்ரீல் அலை, நபி (ஸல்) அவர்களிடம் வந்து அண்டை அயலார் தொடர்பில் உபதேசித்தார். வாரிசுத் சொத்திலே பங்கு பெற்று விடுவாரோ என எண்ணுமளவுக்கு ஜிப்ரீல் அலை என்னிடம் வந்து உபதேத்தார் என நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். அந்தளவுக்கு ஒவ்வொருவரும் அண்டை அயலவர்களுக்கு செய்ய வேண்டிய கடப்பாடுகள் அதிகம் என்பதனை இது எடுத்துக் காட்டுகின்றது.
அண்டை வீட்டார் 03 வகையினர் என ஹதீஸ் விளக்குகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டார்கள், அண்டை வீட்டான் 3 வகையினர். ஒரு உரிமையினைக் கொண்ட அண்டை வீட்டான். இவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, உறவினரல்லாதவர். இவர் அண்டை வீட்டான் பெறுகின்ற உரிமையினை அனுபவிப்பார்.
இரண்டு உரிமைகளைக் கொண்டவர் முஸ்லிம் அண்டை வீட்டான். இவர் இஸ்லாமிய சகோதரர் என்ற வகையிலும் அண்டை வீட்டான் என்ற வகையிலும் இரண்டு உரிமைகளை அனுபவிப்பார். மூன்று உரிமைகளைக் கொண்டவர். முஸ்லிமான இரத்த உறவினர். இவர், இஸ்லாமிய சகோதரத்துவம், அண்டை வீட்டான் மற்றும் இரத்த உறவு என 3 உரிமைகளையும் பெற்றுக்கொள்ள உரித்துடையவராவார்.
அயலவர்கள் என்பதன் பரப்பெல்லை பற்றி விளக்குகின்ற போது, இமாம் அவ்ஸாஇ மற்றும் இப்னுசிஹாப் ‘@!}’சி!w விளக்கும் போது வலது, இடது, முன் பின் என ஒவ்வொரு திசையிலும் 40 வீடுகள் அண்டை வீடுகள் என குறிப்பிடுகின்றனர். அவ்வாறே அலி ரலி அவர்கள் குறிப்பிடும் போது பாங்கொலி கேட்கின்ற எல்லைக்குட்பட்ட வீடுகள் அனைத்தும் அண்டை வீடுகள் எனக் குறிப்பிடுகின்றார்.
மற்றும் சில அறிஞர்கள் குறிப்பிடும் போது ஒரு பிரதேசத்தில் அல்லது ஒரு கிராமத்தில் ஒரு மனிதனுடன் சேர்ந்து வாழ்கின்றவர்கள் அண்டை வீட்டார் என குறிப்பிடுகின்றனர். எனவே அண்டை வீட்டார் அல்லது அயலார் என்பதன் பரப்பெல்லை எமது குறுகிய பார்வையை விட மிக விரிந்தது.
இஸ்லாம் உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்க வந்த மார்க்கம். அதற்கான அடித்தளமாக அமைவது சீரான சமூகக் கட்டமைப்பு. சீரான சமூகக் கட்டமைப்பிற்கு சீரான உறவுகள் உருவாக்கப்பட வேண்டும். எனவே தான் ஒன்றாகக் கூடி வாழ்கின்றவர்கள் அண்டை வீட்டார் என்ற வகையில் அவர்களுக்கிடையில் சீரான உறவு பேணப்படாத போது எப்போதும் பிரச்சினைகளாகவும் முரண்பாடுகளாகவும் காணப்படும். எனவே நாமும் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து சீரான சமூகத்தை கட்டமைப்பதில் பங்கெடுப்போம்.
-தினகரன்
Leave a comment