மக்கள் வீண் அச்சமடைய தேவையில்லை; பொருளாதார தடைகளும் விதிக்க முடியாது

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் மக்களின் நலனுக்கேற்பவே அமுல்

எந்தவித வெளிநாட்டுத் தலையீட்டிற்கும் அரசாங்கம் தலைசாய்க்காது. எமது நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற என்ன தேவையோ அதனையே அரசாங்கம் முன்னெடுக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எமது மக்களின் நலன்களுக்கேற்ற அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கு எதிராக எதுவித பொருளாதாரத் தடையும் விதிக்க முடியாது. இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவை யில்லை எனவும் இதனால் எமது பொருளாதாரம் பாதிக் கப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறித்து விளக்க மளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கை தூதுக் குழுவில் அங்கம் வகித்த அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவை பெறுபேறு குறித்தும் எதிர்கால நடவடிக் கைகள் குறித்தும் விளக்கிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் எத்தகைய பெறுபேறு ஏற்பட்டாலும் அதற்கு தலைசாய்ப்பதில்லையென நாம் முன் கூட்டியே தெளிவாக முடிவு செய்திருந்தோம். இலங்கை தொடர்பில் எத்தனை தீர்மானம் எட்டப்பட்டாலும் அதற்கு இணங்கா திருக்கவும் நாம் முன்னரே தீர்மானித் திருந்தோம்.

எமது இந்தத் தீர்மானத்தை பல நாடுகளும் வரவேற்றிருந்தன.

தேசிய மட்டத்தில் நல்லிணக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக முன்னெடுக்கையில் இவ்வாறு சர்வதேச தலையீடு செய்வதனை ஏற்க முடியாது. எமது மக்களின் அபிலாசைப்படி நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் திடமாக உள்ளது.

30 வருட யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகாண முடியாது. நாம் இதற்கு தீர்வு கண்டு வரும் நிலையில் இந்த தீர்மானத்தினூடாக தேவையற்ற நெருக்கடி ஏற்படும்.

வெளிநாட்டு அழுத்தத்தினாலே நாம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அபிப்பிராயம் ஏற்படும்.

அமெரிக்கா முன்வைத்த பிரேரணை ஒரு மேலதிக வாக்கினாலே நிறைவேறியது. 24 நாடுகள் ஆதரவளித்த போதும் 23 நாடுகள் அதனை நிராகரித்துள்ளன. வாக்களிப்பில் பங்கேற்காத 8 நாடுகள் கூட அமெரிக்காவின் பிரேரணையை எதிர்த்தன. அமெரிக்க சகல மட்டத்திலும் அழுத்தம் பிரயோகித்தும் கூட ஒரு மேலதிக வாக்கினாலேயே யோசனை நிறைவேறியது.

ஆபிரிக்க மற்றும் அரபு நாடுகள் எமக்கு ஆதரவளித்தது பெருமை தரும் விடயமாகும். எத்தகைய அழுத்தம் வந்தபோதும் அவை தமது நிலைப்பாட்டை மாற்றவில்லை.

4 அரபு நாடுகளில் 3 நாடுகள் எமக்கு ஆதரவளித்ததோடு ஒரு நாடு வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த பிரேரணையூடாக மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மை தொடர்பில் பெரும் சந்தேகம் எழுவதாக பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தெரிவித்தன. இந்த செயற்பாடினூடாக மோசமான முன்னுதாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இதனூடாக வேறு நாடுகள் மீது அளவீடுகளோ கொள்கையோ இன்றி பெரிய நாடுகள் தலையீடு செய்யும்.

இந்த பிரேரணையினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாத போதும் சர்வதேச தலையீட்டை விரும்பாததாலே இதனை எதிர்த்தோம். நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாக்கவே நாம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டோம்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதும் மனித உரிமைப் பேரவையுடனான எமது தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும். இலங்கை குறித்து ஆர்வமுள்ள நாடுகளுடன் நாம் தொடர்ந்து பேச்சு நடத்துவோம்

சர்வதேச சமூகம் எமது உள்ளக விடயத்தில் தலையீடு செய்ய இடமளிக்க மாட்டோம். நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனை கருத்திற்கொண்டே நாம் செயற்படுவோம். அது தவிர வேறு எந்த தலையீட்டையோ அழுத்தத்தையோ ஏற்க மாட்டோம்.

இந்த பிரேரணை குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதனூடாக நாட்டிற்கு பாதிப்போ தடையோ ஏற்படாது. இது பாதுகாப்பு சபை தீர்மானமல்ல. இதற்கு முன்னரும் மனித உரிமை பேரவையில் இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

இலங்கையின் ஆதரவுடனே இந்த பிரேரணையை கொண்டு வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையிலே ஜெனீவா மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளரை சந்திப்பதை நான் தவிர்த்தேன். இதனூடாக இலங்கையின் ஒத்துழைப்புடன் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதாக ஏனைய நாடுகள் கருதும் – அது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நான் அமெரிக்க ராஜாங்க செயலாளரை சந்தித்து எமது எதிர்கால திட்டங்களையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் செயற்படுத்துதல் குறித்தும் விளக்குவேன். ஜெனீவாவில் முன்வைத்த அதே விடயங்களை அங்கும் முன்வைப்போம். எம்மிடம் ஒரே நிலைப்பாடே உள்ளது. அது காலத்துக்கு காலம் தி!சி!ஜி என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது,

நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை முன்னெடுக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்கு சட்ட ரீதியான அல்லது யதார்த்தமான தேவை கிடையாது.

நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நூறு வீதம் அமுல்படுத்துமாறு எவருக்கும் கூற முடியாது. இதனை எவ்வாறு அமுல்படுத்துவது என அரசாங்கமே இறுதி முடிவு எடுக்கும். இந்த பரிந்துரைகளில் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் நாமே முடிவு செய்வோம்.

நாட்டின் தனித்துவத்தையும் இறைமை யையும் பாதுகாக்கவே நாம் பாடுபட்டோம். அமெரிக்காவோ வேறு நாடோ சொல்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை முன்னெடுக்க நாம் தயாரில்லை. தேவை என கருதுபவற்றையே எமது அரசு முன்னெடுக்கும். நல்லிணக்க ஆணைக்குழு சில சந்தர்ப்பங்களில் தனது ஆணையை தாண்டி செயற்பட்டுள்ளது குறித்தும் கவனிக்கப்படும் என்றார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியதாவது,

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய வேண்டாமென இந்தப் பிரேரணையை முன்வைத்த நாடுகளுக்கே கூறினேன். சர்வதேச சமூகம் சில நாடுகள் விடயத்தில் இரட்டை வேடம் பூணுகிறது.

மனித உரிமை பேரவையின் வருடாந்த மீளாய்வு கூட்டம் ஒக்டோபரில் நடைபெற உள்ளது. இதில் எமது நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து நாமாக தெளிவுபடுத்துவோம். இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் நாம் எமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தை விளக்கியுள்ளோம்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது,

ஒரு சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது. நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் தேவையற்ற தலையீடு செய்துள்ளது. நல்லிணக்கம் ஏற்படுத்த தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குறைபாடுகள் குறித்து நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியதாவது:

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டை 23 நாடுகள் கொண்டிருந்தன. 30 வருட யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அநேக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இலங்கை குறித்து அவை தமது நம்பிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இலங்கை செயற்படும். எமக்கு ஆதரவாக வாக்களித்த அரபு, ஆபிரிக்க ஆசிய நாடுகளுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது,

நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கைக்கும் ஜெனீவா மாநாட்டிற்கும் முன்பாகவே இலங்கை அரசாங்கம் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. அந்த நடவடிக்கை தொடரும். அதிலுள்ள விடயங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவிலும் அமெரிக்க பிரேரணையிலும் உள்ளது. மக்களை இலக்காகக் கொண்ட எமது கொள்கை தொடரும் என்றார்.

-தினகரன்

Published by

Leave a comment