பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு பகல் போசனத்துடன் முட்டை ஒன்றையும் வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு கட்டுப்பாட்டு குழுவின் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போதே ஜனாதிபதி குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
தற்போது சந்தையில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை நிவர்த்திக்கும் பொருட்டும் பிள்ளைகளின் சத்துணவுப் பிரச்சினைகளை போக்கும் விதத்திலும் இத்திட்டத்தை அமுல்படுத்துமாறும் யுனெஸ்கோவின் உதவியை பெறுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
இக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தின் போது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் காய்கறி வகைகளுக்காக செலவு செய்யும் தொகை சரிபாதியாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு அரசின் திவி நெகும திட்டமே காரணம் என ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
-தினகரன்
Leave a comment