அமெரிக்கா வென்றது-அதிகாரம் நீதியை தோற்கடித்தது

இலங்கைக்கு சீனா ஆதரவுஇந்தியா எதிர்ப்பு

ஆதரவு: 24, எதிர்ப்பு: 15,  8 வாக்களிக்கவில்லை.

உலக வல்லரசு என்ற போர்வையில் அமெரிக்கா தனது அதிகாரத்தை சிறு சிறு நாடுகள் மீது பிரயோகித்ததால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருந்த பிரேரணை ஜெனீவா நேரப்படி காலை 19.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு) விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இப்பிரேரணை மீது மாலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பின் படி பிரேரணைக்கு எதிராக 15 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து வாக்களித்தன. அதேநேரம், 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. எனினும் 24 நாடுகள் இப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

அமெரிக்காவின் அழுத்தங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரஷ்யா, சீனா, கியூபா, பங்களாதேசம், மாலைதீவு கொங்கோ, ஈக்குவடோர், இந்தோனேசியா, குவைத், மொரிட்டானியா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா ஆகிய 15 நாடுகளும் இப்பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளித்து வாக்களித்தன. இந்த நாடுகள் இப்பிரேரணையை முழுமையாக நிராகரித்தன.

இதேநேரம் அங்கோலா, பொட்சுவானா, புர்கினா பாகோ, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல், டிஜிபோட்டி ஆகிய எட்டு (08) நாடுகளும் இப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இப்பிரேரணைக்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, நோர்வே, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஒஸ்ரியா, பெல்ஜியம், பெனின், கெமரூன், சிலி, கொஸ்டாரிக்கா, கெளத்தமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஸியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பேரு, போலந்து, மோல்டோவா, ருமேனியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 24 நாடுகளுமே வாக்களித்தன.

இப்பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளித்து சீன பிரதிநிதி இம் மாநாட்டில் உரையாற்றுகையில், பயங்கர வாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டி மீண்டெழும் இலங்கைக்கு சர்வதேசம் உதவி ஒத்துழைப்பு நல்குவது மிக அவசியம். தற்போது இலங்கை பாரிய அபிவிருத்தி பாதையில் முன்னேறி வருகின்றது.

இத்தகைய தருணத்தில் பல்வேறு அழுத்தங்களை கொடுக்கும் போது அந்நாட்டின் அபிவிருத்திக்கு அது தடையாக அமையும். அதனால் சர்வதேசம் இலங்கையின் முன்னேற்றத்திற் குத் தடையாக இருக்கக் கூடாது. இந்தடிப்படையில் இப்பிரேர ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கு ஆதரவு நல்குகின்றோம் என்றார்.

இதேபோல், இப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைக்கு ஆதரவு நல்கிய கியூபாவின் பிரதிநிதி இம்மாநாட்டில் உரையாற்றுகையில், இலங்கையின் இறைமையில் கையடிக்கும் வகையிலும், சர்வதேச மனித உரிமை கவுன்ஸிலின் பிரதான கொள்கையை சிதைத்தும் இப்பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இப்பிரேரணையின் உண்மை நோக்கம் என்ன என்பது குறித்து இச்சபையில் நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

முப்பது வருடகால பயங்கரவாதத்திற்கு இலங்கை இப்போது தான் முடிவு கட்டியுள்ளது. அந்த முப்பது வருடங்களும் இலங்கைக்கு இருண்ட யுகமாகவே இருந்தது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் தான் இலங்கை பாரிய அபிவிருத்தி பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான சூழலில் இலங்கைக்கு எதிராக இப்படியான பிரேரணையை கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது.

தேசிய மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சர்வதேசத்தின் தலையீடானது இலங்கைக்கு மாத்திரமல்லாமல் வளர்முக நாடுகளுக்குப் பாதிப்புகளையே கொண்டு வரும். அதனால் இப்பிரேரணையை நாம் முழுமையாக நிராகரித்து இலங்கைக்கு ஆதரவு நல்குகின்றோம் என்றார்.

இலங்கைக்கு ஆதரவு வழங்கிய 15 நாடுகளும் இலங்கையின் இறைமையையும் சுதந்திரத்தையும் நேரடியாகவே அங்கீகரித்திருக்கின்றன.

-தினகரன்

இலங்கைக்கு சீனா ஆதரவு

Published by

Leave a comment