பாகிஸ்தானுடன் அடுத்த சவாலைச் சந்திக்கும் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ்

-MJ

ஆசியக் கிண்ணம் 2012: இலங்கையும் இந்தியாவும் வெளியே.

இன்று நடைபெற்று முடிந்த 2012ம் ஆண்டிற்கான அசியக் கிண்ணப் போட்டியின் இறுதி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்தியாவை வெளியேற்றி பங்களாதேஷ் அணி தனது கிரிக்கட் வரலாற்றில் சுற்றுப் போட்டி ஒன்றில் முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருக்கின்றது.

பங்களாதேஷ் நகரங்களும் பட்டி, தொட்டி எங்கும் பட்டாசுகளும் பங்காளிக் கொடிகளும் வானைத் தொட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் அலை அலையாய் நகரங்களைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. நேற்றைய பத்திரிகைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பாவிடம் ஒரு பத்திரிகையாளர் வினா எழுப்பினார்.

‘ இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியா தெரிவாகினால்  இந்தியாவுக்கு உங்களின் பதிலடி எவ்வாறு இருக்கும்?’

அதற்கு மிஸ்பா சொன்ன ஒரே வார்த்தை:

 ‘ பங்களாதேசுடன் நாங்கள் விளையாடப் போகும் இறுதிப்போட்டி பற்றியே தாங்கள் வியூகம் அமைத்து வருகிறோம்.’

என நிறுபருக்கு பதிலடி கொடுத்தார். ஏனெனில் பங்களாதேசின் முன்னேற்றம் இவ் ஆசியக் கிண்ணத் தொடரில் ஓர் சிறப்பம்சமாகவே கருதப்பட்டு வருகின்றது. லீக் போட்டியில் பாகிஸ்தான் பங்களாதேஷை வென்றதும் ஓர் நூல் இடையிலேதான் என்பதை பாகிஸ்தான் அணி உணர்ந்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டி ஓர் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டி போன்றே அமையும். தளம்பல் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவுடனான படு தோல்விக்குப் பின்னர் மென் மேலும் அழுத்தங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. இதே போல் தற்போதைய பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் டேவிட் வட்மோருக்கு மென் மேலும் ஓர் சவால் தொடராக இவ் இறுதிப் போட்டி காத்திருக்கின்றது. இவர் முன்னால் பங்களாதேஷ் பயிற்றுவிப்பாளராக இருந்த போது இந்தளவுக்கு பங்களாதேஷ் உலகில் பிரிசித்திருக்கவில்லை. எனவே பங்களாதேசின் வெற்றி இலக்கு உலகுக்கும் வட்மோருக்கும் ஒரு சவாலாக அமையவிருப்பது திண்ணமே.

தனது சொந்த மண்ணில் பலம் பொருந்திய இந்தியா, இலங்கை ஆகிய அணிகளை தனது திறமையால் வென்று தொடரில் இருந்து விரட்டி அடித்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருக்கும் பங்களாதேஷ் அணிக்கு உலகின் அதரவுக் கரங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்பதை செய்தி ஊடகங்கள் நிரூபித்து வருகின்றன.

உலகின் பலம் பொருந்திய எந்தவொரு அணியும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பாட்டத்தையே தேர்வு செய்யும். எனினும் பங்களாதேஷ் வெற்றியீட்டிய நாணயச் சுழற்சிகளில் களத்தடுப்பைத் தேர்வு செய்து எதிர் அணியின் ஓட்ட இலக்கை விரட்டிச் சென்று வெற்றியீட்டும் அளவுக்கு தனது அணியின் துடுப்பாட்டத்தை நம்பியிருந்தமை தனது அணியின் நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றது.

ஒரே ஒரு தடவை ஆசியக் கிண்ணத்தை வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் இம்முறைக்கான கிண்ணத்தை வெல்வது பாகிஸ்தானுக்கு இலகுவானதல்ல. இங்கு நாணயச் சுழற்சியில் வெற்றி பெறுவது பங்களாதேசுக்கு ஒரு தேவை உடையதாக இருக்காது. ஏனெனில் நாணயச் சுழற்சியில் பங்களாதேஷ் வென்றாலும் தோற்றாலும் பாகிஸ்தான் அணியே முதலில் துடுப்பெடுத்தாடும். எனினும் இறுதிப் போட்டியை மாற்றி விளையாட பங்களாதேஷ் நினைக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் ஆசியக் கிண்ணக் கனவு கரைந்து செல்லும். அதிக உற்சாகத்துடனும் கடல் போன்ற இரசிகர்களின் ஆதரவும் சொந்த மண்ணும் பங்களாதேசுக்கு எந்த அளவு கை கொடுக்கப் போகின்றது என்பது நாளை மறு தினம் தெரியும்.

-Yourkattankudy/sports

Published by

Leave a comment