புதிய தகவல்கள் அம்பலம்
சனல் 4 வீடியோ தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரின் மனைவி இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் என்பது தெரியவந்துள்ளது.
சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய இந்தப் பெண்மணி, சனல் 4 தொலைக்காட்சியின் நிர்வாகப் பணிப்பாளரை மணந்து லண்டனில் வசித்து வருகின்றார். இந்தப் பெண்மணி (சிராணி சுப்பிரமணியம்) சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்களுடனும், புலிகள் அமைப்புகளுடனும் சேர்ந்து செயற்பட்டு வருவது இந்தச் செய்தி மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. சனல் 4 இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிடுவதற்கு இந்தப் பின்னணியே காரணமாக இருக்கிறதென்பது இராஜதந்திரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி நிலையம் இலங்கைக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் புதிய தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சியொன்றை இன்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டம் நடை பெறும் மண்டபத்தில் உள்ள இன்னுமொரு அறையில் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ளும் சகல நாடுகளின் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளுமாறு சனல் 4 அமைப்பு அழைப்பும் விடுத்துள்ளது. இந்த விவரணப் படத்தில் பொதுமக்கள் யுத்த முனையில் கொல்லப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தனது முதலாவது விவரணப் படத்தில் காண்பித்த காட்சிளே இதில் மீண்டும் காட்டப்பட்டு, அதில் மேலும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் விவரங்களும் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-Thinakaran.
Leave a comment