தாயும் உறவும்

மிஸ்ஜா

புழுதி மணல்
மண்வாசனை
களிமண் குடிசை
முற்றத்து நிலாச்சோறு
வீட்டுத் தோட்டத்தின் குளிர்ந்த நிழல்
பசும் புற்களின் வாசம் வீசும்
பலவர்ணங்கொண்ட பண்பாய்கள்
குத்தரிசி
அரைத்தமிளகாய்
விருந்தோம்பல்
விளக்கு வெளிச்சம்…..
நான் மழலை மொழிபேசுகையில் என் உம்மா கூறக் கேட்ட வார்த்தைகள் இவை.

பத்துமாதங்கள் சுமந்தவள்.
எனக்கென்று ஏதுமானால் பதறியடித்து துடிப்பாள்.
துன்பங்களை துச்சமாய் மதித்ததால்
இன்பங்கொண்ட கருவரையில் என்னை அவள் சுமந்தாள்.

பாசமாய் முத்தமிடுவாள்.
பாயசம் ஊட்டுவாள்.
தாலாட்டு பாடுவாள்
கதைகளும் கூறி கட்டியணைப்பாள்.
சுகங்கள்தான் எத்தனை!

அ-எழுதிக் காட்டுவாள்.
ஒன்று – என விரலை நீட்டிக் காட்டுவாள்.
அலிப்- என்று ஓதிக்காட்டுவாள்.
அல்லாஹ்வை வணங்கச் சொல்வாள்.

சினுங்கினால் செல்லமாக அடிப்பாள்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அரத்தம் கூறுவாள்.
உறவுகளிடம் கூட்டிச் சென்று
உறவாட வைத்தாள்.
சொந்தபந்தங்களை மதிக்கச் செய்தாள்.
ஆனால்….

இன்றைய உலகில் நானும் ஒரு தாய்!
மழலை வார்த்தைகள் என் குழுந்தையின் உதடுகளில் உதிக்கின்றன.
தாலாட்டுப்பாட நேரமேது?
உறவுகளை அறிமுகம் செய்ய உறவுகள் இல்லை!
ஊர் வேறு…மார்க்கம் வேறு!
கட்சிவேறு…கொள்கை வேறு!
போட்டியும் பொறாமையும் ….

உயரந்த வீடுகளும் உயர்ந்த மதில்களும்
அயல்வீடுகளைத் துண்டித்துச் செல்கிறது.
இரத்த உறவுகள் முடக்கப்படுகிறது.
என் உம்மா எனக்குக் கற்றுத் தந்தவை
அழகான இன்பமான மொழிகள் அவை.
இன்றும் என் அடிமனதில் குடி இருந்தாலும்
செயல்படுத்த முடியாத ஓர் ஊணமாய் என்தாய்மை
என் குழுந்தையோடு இன்று நகர்கிறது.

Published by

Leave a comment