ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடப் போகும் அணி எது?

-MJ

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற இருக்கும் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடப் போகும் அணி எது என்ற கேள்வி விளையாட்டு இரசிகர்களிடையே உள்ள இன்றைய பேச்சாக இருக்கின்றது.

Team M W L NR Pts RR Run For Run Against
Pakistan 3 2 1 0 9 +0.444 780/139.5 759/147.5
India 3 2 1 0 8 +0.310 913/147.5 876/149.2
Bangladesh 2 1 1 0 4 -0.134 534/99.2 551/100.0
Sri Lanka 2 0 2 0 0 -1.068 442/100.0 493/89.5

இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆசியக் கிண்ண மற்றுமொரு லீக் போட்டியில் இந்தியா தனது பலம் வாய்ந்த துடுப்பாட்டத்தின் மூலமாக பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றிவாகை சூடியிருக்கும் இந்நிலையில், இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்பது இந்திய அணிக்கும் அதன் இரசிகர்களுக்கும் கவலை தரும் செய்தியாகவே அமைகின்றது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் 2012 ஆசியக்கிண்ணத்துக்கான இறுதி லீக் போட்டியில் இலங்கையை எதிர்த்து பங்களாதேஷ் விளையாட இருக்கின்றது. இலங்கை இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அன்றைய போட்டியுடன் நாடு திரும்பும். ஆனால் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடும் அணிக்கான துரும்புச் சீட்டாக கருதப்படும் போட்டியே இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இப்போட்டியாகும்.

இப்போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றால் இந்தியா பெற்றுள்ள 8 புள்ளிகளுக்கு பங்களாதேஷ் அணியும் 8 புள்ளிகளுடன் சம நிலையில் இருக்கும். அது இலங்கை பெறும் ஓட்ட வீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும் பங்களாதேஷ் இலங்கையை வெற்றியீட்டும் பட்சத்தில் எதிரணியின் ஓட்ட வீதங்கள் பங்களாதேஷ் அணிக்கு தடையாக இருக்கப் போவதில்லை. எனவே ஒருவேளை இப்போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றால் இந்தியாவும் பங்களாதேசும் சம நிலையில் இருக்கும். இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் இத்தொடரில் நடைபெற்ற லீக் போட்டி கருத்தில் எடுக்கப்படும். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா பங்களாதேசிடம் தோல்வியடைந்திருப்பதால் நேரடியாக பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்குச் செல்லும்.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டி இலங்கை அணிக்கும் அழுத்தம் நிறைந்த ஓர் போட்டியாகவே அமையும். CB கிண்ணத்தில் தோற்று வந்த இலங்கை அணிக்கு ஆசியக்கிண்ணம் ஓர் எதிர்பார்ப்பாகவே அமைந்தது. இலங்கை இரசிகர்களும் பல எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்தனர். நான்கு முறை ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி லீக் போட்டி இரண்டிலும் தோல்வியடைந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் ஒருவேளை பங்களாதேசுடன் தோற்றால் அதைவிட ஒரு அவமானத்தை அதன் இரசிகர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

இதே போல் ஒரு போட்டியிலாவது வென்று தன்மானத்துடன் நாடு போய்ச் சேருவோம் என்ற ரீதியிலேயே இலங்கை அணியின் ஆட்டம் அமையும். இலங்கை அணியின் புதிய அணித்தலைவர் மஹேலவுக்கும் சில தனிப்பட்ட சிக்கல்களையும் இத் தொடரின் வெளியேற்றம் ஏற்படுத்தும்.

மாறாக, சொந்த மண்ணில் பலம் பொருந்திய இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் இறுதிப்போட்டியின் விளிம்பில் காத்திருக்கின்றது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இப் போட்டியில் பங்களாதேஷ் இலங்கையை வெற்றிபெறுவதே இலக்காகக் கொண்டு ஆடவிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் இதைவிட ஒரு அருமையான வாய்ப்பு பங்களாதேசுக்கு கிடைக்குமா என்பதைக் கூறமுடியாது. எனவே இம்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் ஆசியக் கிண்ணப் போட்டியின் ஒவ்வொரு போட்டிகளும் ஒவ்வொரு திருப்பத்தை தருகின்ற போட்டியாக  அமைந்துள்ளமை அடுத்த விஷேட அமசமாக இருக்கின்றது.

எனவே இறுப்போட்டிக்கு பங்களாதேஷ் செல்லுமா அல்லது இந்தியா செல்லுமா என்பதை இரசிகர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஓர் திருப்புமுணை போட்டியில் தெரிந்து கொள்ளமுடியும்.

yourkattankudy/sports

Published by

Leave a comment