தாய்நாட்டுக்காக குத்பா பிரசங்கம் நிகழ்த்த வேண்டுகோள்

ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கங்களை அமைக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சகல உலமாக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் குறிப்பிடுகையில், இன்று நாட்டில் அமைதி, சமாதானம் நிலவுகின்றது. அச்சம், பீதியின்றி நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. முழு நாட்டிலும் துரித அபிவிருத்தி ஏற்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நாட்டில் சுபீட்சமும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாக இலங்கையர் என்ற அடிப்படையில் வாழுகின்றனர். சுமார் முப்பது வருடங்களுக்கு பின்னர் இந்நாட்டில் இவ்வாறான சிறப்பான சுபீட்ச நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதனைக் குழப்பவே அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் முயற்சி செய் கின்றன.

ஆனால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆப்கானிஸ்தான், ஈராக், பலஸ்தீன் போன்ற நாடுகளில் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு இழைத்துள்ள அநியாயங்களும், கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்நாடுகளையே சீரழித்து விட்டன.

ஆகவே அப்படியான ஒரு நிலைமை எமது நாட்டில் ஏற்படாதிருப்பதற்காக இன்று ஜும்ஆ பிரசங்கங்களை அமைத்துக் கொள்வதோடு துஆ பிரார்த்தனையிலும் நாட்டுப் பற்றுடன் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.

-தினகரன்.

Published by

Leave a comment