வண்ண நிறங்களில் அமெரிக்க நிறுவனத்திலிருந்து உப்புத்தூள் வந்திறங்கியது. இதே போன்று, குடிநீர் பற்றி பேசிப் பேசி இன்று சுடவைத்த குடிநீர் என்பதற்கு மாறாக விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டனர். வாழ்க்கை யின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஒரு பயத்தை எழுப்பி, அதன் முன் உங்கள் குழந்தையை நிறுத்தி, எனவே ஆரோக்கிய வாழ்விற்கு வாங்குவீர் இதுதான் இன்றைய சேவை.
அன்பினாலும், இரைச்சல் களாலும் நிறைந்து கிடந்த நமது தெருக்கள் இப்போது வெறிச்சோடிக் கிடக் கின்றன. வண்ணங்களும், கனவு களுமாய் விரிந்து கொண்டேயிருந்த உலகம் இப்போது சுருங்கி வருகிறது. எல்லைகளில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்த மழலைகளின் இசை, இன்று சுவர்களுக்குள் அடைபடுவதால் சுவடு தெரியாமல் நடந்து செல்கிறது வரலாறு.
பின் மாலைப் பொழுதில், முற்றத்தில் நின்று கொண்டு விரல் நீட்டி நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவர்கள், இருட்டு அறையில் ஸ்டிக்கர் நட்சத்திரங்கள் மின்னுவதை பார்க்க காத்திருக்கி றார்கள். கற்பனைத் தோரணங் களால் மின்னிக்கொண்டிருந்த அவர்களின் உலகம் மின் காந்த அலைகளால் நிரப்பப்படுகிறது.
என்னைப் பாருங்கள், என்னிலிரு ந்து கற்றுக்கொள்ளுங்கள், என்னோடு மட்டுமே பேசுங்கள் என தன்னைத் தானே சுற்றிக் கொண்டே நம்மையும் சுற்றி வந்து கொண்டிருந்த பிரபஞ்சம் இப்போது நின்ற இடத்திலேயே இயக்கம் இல்லாமல் நின்று விடும் போலிருக்கிறது. ஆம்…. காட்சி ஊடகங்களால் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
குழந்தைகளின் உலகிற்கு மலட்டுத்தனமான பொய்களை தேசமெங்கும் விதைத்து மொட்டை மரமென நுகர்வு ஆசைகளை வளர்த்து இலாபம் மட்டுமே அறுவடை செய்யும் காட்சி ஊடகங்களின் விளம்பரங்களால் குழந்தையெனும் விளை நிலங்கள் பாலைகளாக மாறி வருகின்றன. விளம்பரங்களில் பொய்களை பயன்படுத்த வரம்புகளில்லா அனுமதியும், அளவில்லாத அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கும் இந்நாட்டின் எதிர்காலம் பொய்யர்களின் பெயரால் தீர்மானிக்கப்படும் அவலம் மெல்லத் தொடங்கி இருக்கிறது.
என்ன பேசுவது, என்ன உடை உடுத்துவது எதை சாப்பிடுவது ஆண் எதை விரும்ப வேண்டும், பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கும் காட்சி ஊடகங்கள், குழந்தைகள் அ, ஆவன்னா கற்றுக்கொள்ளும் முன்பே தாங்கள் தீர்மானித்ததை சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றன.
பேசப்பழகும் குழந்தை தொலைக்காட்சியில் இருந்துதான் அதிகமான வார்த்தைகளை காதில் கேட்கின்றன. கேட்கும் திறன் அறியத்தொடங்கும் குழந்தைகள் தொலைக்காட்சியின் இசை கேட்டே திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றன. இந்த நாடகத் தொடர் பாடல் கேட்டால் போதும் எங்க இருந்தாலும் திரும்பிப் பார்ப்பான் என பெருமையோடு பேசும் தாய்க்கு அதன் விளைவுகள் அறிந்திருக்க நியாயம் இல்லை.
முதல் மூன்று வயதுக்குள்ளேயே தொலைக்காட்சி ரிமோட் மூலம் விளையாடத் தொடங்கும் குழந்தைகள், பின்னர் தொலைக் காட்சியை தன் முதல் நண்பனாக உணரத் தொடங்கி இறுதியில் வழிகாட்டியாய் வாழத் தொடங்கி விடுகிறது. சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய கதைகள் காணாமல் போய்விட்டன. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, தூங்குவது என ஒரு புதிய வாழ்க்கை முறை பழக்கமாக் கப்படுகிறது.
வீட்டினுள் எந்த தொந்தரவும் இல்லை என தொடக்கத்தில் அனுமதிக்கும் பெற்றோர்கள் குழந்தை வீட்டுப் பாடம் செய்ய மறுக்கும் பருவத்தில் தான் தொலைக்காட்சி நம் குழந்தையின் வாழ்வில் மறுக்க முடியாத அங்கீகாரம் பெற்றுள்ளது என உணரத் தொடங்குகின்றனர். ஆனாலும் தொலைக்காட்சி இல்லாத வீட்டை கற்பனை செய்வது பெற்றோர்களுக்கும் சாத்தியமில்லை என்பதால் மறுக்க முடியாமல் உடன்படுகின்றனர் அனைவரும்.
செய்திகள் தருவது என்ற சமூகத் தளத்தில் இருந்து பொழுது போக்கு என்ற தளத்திற்கு தாங்களாகவே மாறிக்கொண்ட காட்சி ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் கட்டியமைக்க விரும்பும் உலகை சிருஷ்டிப்பது கூட்டு நிறு வனங்கள் தான். அந்த உலகின் ஒரே மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டுமென்பது தான் அவர்களின் விருப்பம்.
தொலைக்காட்சியில் பார்ப்பதை நம்புவது, வாங்குவது, அதன் வழியே வாழ்வை தீர்மானிப்பது என்று மட்டுமே வாழ்க்கை முறை அமைந்தால்தான் வியாபாரம் பெருகிக் கொண்டே யிருக்கும், அவர்களுக்கு கூட்டு நிறுவனங்கள் தரும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாய் வருமானமீட்டும் காட்சி ஊடகங்கள், தங்கள் இலக்கை குறிவைத்து மகளிர், குழந்தை என தனித்தனி நேரம் ஒதுக்கிய காலம் மாறிவிட்டது. இப்போது அவர்களின் முதல் இலக்கு குழந்தைகள் தான்.
குழந்தைகளுக்கு என தனி அலைவரிசை இன்று 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கிறது. இதில் அதிகம் தமிழ் அலைவரிசைகள் தான். ஆங்கில நிகழ்ச்சிகளை தமிழாக்கம் செய்து ஒளிபரப்புவதும் மிகத் தாராளமாக நடைபெறுகின்றன.
குழந்தைகளிடையே மிகப் பிரபலமான ஆங்கில – தமிழ் மொழியாக்க நிகழ்ச்சிகளும் பல உண்டு. ஆக, ஒரு குழந்தை தொலைக்காட்சிக்கும் தனக்குமான உறவை மிக நெருக்கமாக்கிக்கொள்ள வாய்ப்புகள் இங்கு மிக அதிகம். எந்தவொரு நாட்டிலும் இத்தனை குழந்தைகள் அலைவரிசை இருக்குமா என்றால் இல்லை என அழுத்தமாய் பதில் சொல்லிவிடலாம்.
எப்போதும் குழந்தை கேட்கும் அனைத்தையும் வாங்கித் தரும் விளம்பர பெற்றோர்கள் 100 பேர் இயல்பிற்கு புறம்பான சாகசங்கள் செய்யும் கதாபாத்திரங்கள், கேடு செய்யும் மந்திரவாதிகள், பேய், ஆவிகளின் பழிவாங்கும் செயல்கள், பேசும் பாம்பு போன்ற மூட நம்பிக்கைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள், பெண்ணை கேலி செய்தல், அப்பா – அம்மாவை இழிவு செய்தல், நண்பர்களோடு சேர்ந்து வம்புகள் செய்தல், பொய் சொல்லுதல், பிறரை துன்புறுத்தல் போன்றவை அடங்கிய நகைச்சுவைக் காட்சிகள் பணக்காரர் ஆவதற்காக எதையும் செய்யும் கதாபாத்திரங்கள் போன்றவைதான் எப்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன.
திரைப்படங்களை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கையில் மட்டுமே அன்பு பெருகி வீடெங்கும் ஓடுவதாக எண்ணும் நம்மவர்கள் எந்தக் காட்சியையும் குழந்தையின் கண்களில் இருந்து மறைக்க இயலாது.
மறைத்து விடலாம் என நாம் ரிமோட்டை தேடுகை யில் குழந்தை நம்மைப் பார்த்து உதட்டோரம் சிரிக்குமே அதன் அர்த்தம் என்ன தெரியுமா? இத் தனை விளைவுகளுக்கும் காரண மான திரைப்படங்களை எந்த தடையும் இல்லாமல் தொலைக் காட்சியில் ஒளிபரப்பு அனுமதிப் பது மிக அபாயகரமான ஒன்றாகும்.
அடுத்து விளம்பரங்கள் உருவாக் கும் உலகில் நடக்கும் அநீதிகளை பேசுவோம். ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 200 தடவை விளம்பரங்களைப் பார்க்கின்றன. இதில் 20 முதல் 30 வகையான விளம்பரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. ஊட்டச்சத்து பாணங்கள், சொக்லட், பிஸ்கட், நூடுல்ஸ், கோக், பெப்சி, சிப்ஸ், மிண்ட் போன்ற விளம்பரங்களே இதில் மிக அதிகம். விளம்பரத்தில் வரும் காட்சியில் மிக முக்கியமாக குழந்தைகள் மனதில் பதிவது இதை வாங்கித் தருவோரே சிறந்த பெற்றோர் என்பதுதான்.
சொக்லட் பற்சொத்தையை உருவாக்கும் எனத் தெரியாத பெற்றோர் யாரும் இருக்க முடியாது. ஆனாலும் ஏன் வாங்கித் தருகிறார்கள்? ஒரு பற்பசைகள் தரும் நம்பிக்கையோ என்னவோ. அதை விடவும் உண்மையானது. என்னவெனில் என் குழந்தைக்கு தொலைக்காட்சியில் வரும் அனைத்தையும் வாங்கித்தரும் அப்பா, அம்மாவாக நான் இருப்பேன் எனப் பலர் சபதம் போட்டுத் திரிவதுதான்.
என்ன வகை (கிranனீ) வேண்டும் என குழந்தைகள் கேட்பதை பலர் இரசிக்கிறார்கள். பலர் என்னவோ குழந்தை அறிவார்ந்து ஒன்றைக் கேட்பது போல் நினைந்து நெஞ்சுருகிப் போகும் பெற்றோர்கள் அதன் எதிர்கால விளைவை யோசிப்பதில்லை.
இரண்டாவதாக முட்டை உருவத்திலான வடிவத்தை சொக்லட் பக்கெட்டிற்கு பயன்படுத்துவது மூன்றாவது, கல்சியம் உள்ளதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதென ஒரு வாசகம். இது போதாதா வியாபாரம் சூடுபிடிப்பதற்கு.
தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் குழந்தைகளிடம் விற்பனை செய்வதற்காக கையாளும் விளம்பர முறைகள் அனைத்தும் குழந்தைகளிடம் அறிவியல் பூர்வமற்ற பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிப்படையவே செய்கின்றன.
பெற்றோர்களின் அன்பு, குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைகளுக்காக பரிசு வாங்கித்தருவது, மற்ற குழந்தைகளிட மிருந்து நம் குழந்தை தாழ்ந்து தனிமைப்பட்டு போய்விடக்கூடாது என்ற பெற்றோர்களின் பாசத்தை மையமாக வைத்துத்தான் பெரும்பாலான பொருட்களின் விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சுத்தம் சுத்தம், ஆரோக்கியம் என எத்தனையெத்தனை விளம்பரங்கள். திடீரென ஒரு நாள் பள்ளி சென்ற குழந்தைகளி டம் உங்கள் வீட்டில் பயன்படுத் தும் உப்பில் அயடின் உள்ளதா என பரிசோதிக்க ஒரு கொத்து உப்பை கொடுத்து விடுங்கள் என ஒரு சுற்றறிக்கை கொடுத்து அனுப்பினார்கள்.
அயடின் இல்லையெனில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிக்குமென விளம்பரமும் அதேநேரம் தொலைக்காட்சியில் வந்தது. விளைவு, கடைக்கு வெளியே மூட்டையாக திறந்தே வைக்கப் பட்டிருந்த உப்பு காணாமல் போனது.
வண்ண நிறங்களில் அமெரிக்க நிறுவனத்திலிருந்து உப்புத்தூள் வந்திறங்கியது. இதே போன்று, குடிநீர் பற்றி பேசிப் பேசி இன்று சுடவைத்த குடிநீர் என்பதற்கு மாறாக விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டனர். வாழ்க்கை யின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஒரு பயத்தை எழுப்பி, அதன் முன் உங்கள் குழந்தையை நிறுத்தி, எனவே ஆரோக்கிய வாழ்விற்கு வாங்குவீர் இதுதான் இன்றைய சேவை.
இவை மாறவேண்டும். எத்தனை குழந்தைகள் இப்போது சிறு வயதிலேயே மூக்குக் கண்ணாடி பாவிக்கிறார்கள். எத்தனை சிறுவர்கள் அவர்களுடைய வயதைவிட உடல் பெருத்து காணப்படுகின்றனர்.
தொலைக் காட்சிதான் பொழுது போக்கு என்று மாறிவிட்டது. இதுவும் குழந்தைகளின் அல்லது சிறுவர்களின் இப்பிரச்சினைக்கு காரணமாகிறது. பெற்றோர் பிள்ளைகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். பிள்ளைகளின் முன்னுதாரணங்கள் முதலில் வீடுதான். தொலைக் காட்சி வழிநடத்தக்கூடாது. தொலைக்காட்சிகளில் நல்ல விடயங்களும் உள்ளன. அவற்றைப் பிரித்தறிந்து பிள்ளைகளை வழிநடத்துதல் அவசியம்.
-தினகரன்.
Leave a comment