கைநழுவிப்போன CB கிண்ணம்

ஒரு மாத காலத்துக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த முக்கோண CB கிண்ணப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்று, தொடர் முடிவடைந்திருக்கின்றது.  உலகின் அதிகமான கிரிக்கட் இரசிகர்கள் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த பின்னர் அதாவது அவுஸ்திரேலியாவை இறுதிப் போட்டிகளுக்கு முன்னர் தோற்கடித்ததைத் தொடர்ந்து,

இலங்கைதான் கிண்ணத்தை வெல்லும் என நினைத்திருந்தனர். இணையத்தள வாக்கெடுப்புக்களும் ஊடகங்களும் இலங்கையை எதிர்வு கூறியிருந்த நிலையில் கிண்ணம் தவறி அவுஸ்திரேலிய மக்கள் எதிர்பாரத்திருந்தது போல் அவுஸ்திரேலியாவின் கைக்கு மகிழ்ச்சிகரமான ஓர் இரவுப் பொழுதில் நழுவிச் சென்றது.

முன்னூறு ஓட்டங்களை விரட்டி வெற்றியீட்டிய போட்டிக்கும் இன்றைய போட்டிக்கும் என்ன வித்தியாசம் இருந்தது என்பதை இந்தப் போட்டியை இரசித்துப் பார்த்தவர்களுக்கு ஓரளவாவது தெரிந்திருக்கும். இந்தியாவுடனான முதற் சுற்று போட்டி ஒன்றில் முந்நூறு ஓட்டங்களைத் தாண்டி இந்தியாவுக்கு வெற்றி இலக்கு வழங்கப்படும் முன்னரே தாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற நினைப்பிலேயே களத்தடுப்பில் ஈடுபட்டனர். ஆனால் கள நிலமை எப்படி மாறி இருந்தது என்பதை விளையாட்டு இரசிகர்கள் மறந்திருக்கமாட்டோம்.

அப்படி ஒரு இலக்குத்தான் இன்றும். 231 ஓட்டங்கள் ஓர் இலகுவான இலக்கு என்ற என்னத்திலேயே இலங்கை அணியினர் துடுப்பெடுத்தாடினர். 300 ஓட்டங்களை இந்தியா 36 ஓவர்களில் பெற்று வெற்றி ஈட்டியது போல் இந்த 231 ஓட்ட இலக்கை 30 ஓவருக்குள் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு ஓர் பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்ப வீரர்கள் முதல் 4 விக்கட்டுக்கள் இழக்கும் வரை இருந்தது. பின்னர் துடுப்பெடுத்தாடிய தரங்கவின் நிதானமான துடுப்பாட்டம் எவ்வாறு போட்டியை மாற்றி இருந்தது என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்க.

இவ்வளவு இஸ்திரமான ஓர் துடுப்பாட்ட வரிசையைக் கொண்டு களம் இறங்கிய இலங்கை அணியும், அணியின் தலைவரும் இன்று பிரகாசிக்கத் தவறிவிட்டனர். அதேபோன்று பந்து வீச்சில் மலிங்கவும் அண்மைக் காலமாக பிரகாசிக்கத் தவறுவது அவருக்கு நீண்ட ஓய்வு தேவை என்பதை விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.

இதற்கிடையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆசியக் கிண்ணப் போட்டி பங்களாதேசில் ஆரம்பமாகிறது. சரிந்து கிடக்கும் இலங்கை அணிக்கும் குழம்பிப் போய் இருக்கும் இந்திய அணிக்கும் ஓர் சவாலாக இச்சுற்றுப் போட்டி நிச்சயமாக இருக்கப் போகிறது. இதே போல் கடந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் முதன் முதலாக இந்தியா – பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டியும் இத்தொடரில் மற்றுமொரு சிறப்பம்சமாக இருக்கப்போகிறது என்பதும் கிரிக்கட் இரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைகிறது.

-YourKattankudy/Sports.

Published by

Leave a comment