இலங்கையில் நடைபெற இருக்கும் T20 உலகக் கிண்ணப் போட்டிகள்

நான்காவது T20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் இம்முறை இலங்கையில் நடைபெற இருப்பது இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியாக அமைகிறது. சென்ற வருடம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடாத்திய மூன்று ஆசிய நாடுகளுள் இலங்கையும் இருந்ததால் இலங்கையின் கிரிக்கட் இரசிகர்கள் போட்டிகளை நேரடியாகக் கண்டு மகிழும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இதேபோல்தான் மற்றுமொரு உலகக் கிண்ண போட்டிகளை நேரடியாக பார்த்து மகிழும் சந்தர்ப்பம் எம் நாட்டின் கிரிக்கட் இரசிகர்களுக்குக் கிடைக்கிறது. இப்போட்டிகள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 18ம் திகதி ஆரம்பமாகின்றது. இருபத்தி ஏழு T20 போட்டிகளைக் கொண்ட ஒரு பெரும் தொடராகவே இப்போட்டிகள்  அமைய இருக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

முதல் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றன. கடந்த போட்டிகள் 2010 ஆம் ஆண்டு  மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்றன. T20 உலகக் கிண்ணங்களை 2007 – இந்தியா, 2009 – பாகிஸ்தான், 2010 இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே வெற்றி பெற்றிருக்கின்றன. இவ் உலகக் கிண்ண போட்டிகளில் துடுப்பாட்டத்தில் மஹில ஜயவர்தன 627 ஓட்டங்களைப் பெற்றும்,  பந்து வீச்சில் 27 விக்கட்டுக்களை வீழ்த்தி சஹிட் அப்ரிடியும் முன்னணியில் திகழ்கின்றனர்.

முதலாவது போட்டி இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்குமிடையில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 07:30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஆரம்பச் சுற்று, சுப்பர்8 சுற்று, அரை இறுதி, இறுதிப் போட்டி என்ற ஒழுங்கில் இவ் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அனைத்துப் போட்டிகளுமே இரவு பகல் ஆட்டமாகவே நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும்.

2014 போட்டிகள் பங்களாதேசிலும் 2016 போட்டிகள் இந்தியாவிலும் நடைபெற இருக்கின்றன.

மேலதிக விபரங்களை எமது விளையாட்டு பக்கத்தில் காணலாம்.

Your kattankudy Sports.

Published by

Leave a comment