மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்க அரசு மீண்டும் அறிவுறுத்தல்

மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை மின்சார பாவனைக் குறைப்பு அவசியம்

இலங்கையில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரையில் மின்சார பாவனைக்காக 2000 மெகாவாற் சக்தி மின்சாரம் செலவிடப்படுகின்றது. இந்த மின்சாரம் அதிகமாக விரயமாகும் 3 மணித்தியாலங்களின் போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மின்குமிழை அனைத்துவிட்டால் அதன் மூலம் 250 மெகாவாற் மின்சார சக்தியை சேமிக்க முடியும்.

இந்த மூன்று மணித்தியாலங்களில் ஒரு அலகு மின்சாரத்தை தயாரிப்பதற்கு 60ரூபா செலவிடப்படுகின்ற போதும், இந்த ஒவ்வொரு அலகையும் பாவனையாளர்களுக்கு மின்சார சபை 16 ரூபாவுக்கு விற்பனை செய்து பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கிறது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க நேற்று தெரிவித்தார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று வருகை தந்த அமைச்சர் சம்பிக்க, அதன் தலைவர் பந்துல பத்மகுமார, ஆசிரியப் பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், பொது முகாமையாளர், அபே அமரதாச, பிரதி பொது முகாமையா ளர் உட்பட சகல பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை சந்தித்து கலந்துரை யாடினார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், பாவனையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை எடுத்துவரும் பிரசாரப் பணிகளுக்கு லேக்ஹவுஸ் பத்திரிகைகள் பூரண ஒத்துழை ப்பை அளிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.

அனல் மின்சார நிலையங்கள் மூலம் ஒரு அலகு மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கு 115ரூபா செலவாகின்ற போதிலும் ஒவ்வொரு அலகு மின்சாரத்தை பாவனையாளர்களுக்கு தாங்கள் 16ரூபாவுக்கே வழங்குகின்றோம் என்று கூறினார். இன்றைய உலகில் எரிபொருளின் விலை குறைவதற்கான சாத்தியம் இல்லையென்று தெரிவித்த அமைச்சர், 2020ம் ஆண்டில் ஒரு பீப்பா மசகு எண்ணெயின் விலை 500 அமெரிக்க டொலராக உயர்ந்துவிடும் என்று கூறினார்.

சென்னை மாநகரில் தற்போது நாள் ஒன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறதென்றும், அங்குள்ள தொழிற்சாலைகள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் செயல் இழக்க ப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தியாவின் தலைநகரைத் தவிர ஏனைய நகரங்களில் 5 முதல் 10 மணிநேர மின்சார வெட்டு அமுலாக்கப்படுகிறதென்று கூறினார்.

நாடெங்கிலும் உள்ள பாவனையாளர்கள் மாலை 6 மணிமுதல் இரவு 9.30 மணி வரை வீடுகளில் ஓரிரு மின்குமிழ்களை மாத்திரம் ஒளிரச் செய்து, தொலைக்காட்சி பெட்டிகளை மாத்திரம் செயற்படுத்தினால் பெருமளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கூறினார்.

ஜப்பானில் அணு மின்சக்தி நிலையங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, ஜப்பானில் பெருமளவில் மின்சக்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதென்று சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜப்பானிய மக்கள் மிகவும் நாட்டுப்பற்றுடன் மின்சார பாவனையை சேமித்ததன் மூலம் இந்த மின்சார தட்டுப்பாட்டை கூடியவிரைவில் தீர்த்துவிட்டனர் என்று கூறினார். ஜப்பானில் உள்ள குளிரூட்டி இயந்தி ரங்கள் ஒரு மணித்தியாலயத்திற்கு 15 நிமிடங்கள் அணைக்கப்பட்டதன் மூலம் இந்த மின்சார தட்டுப்பாடு வெற்றிகரமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டது என்று அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 6000 பாரிய மின்பாவனையில் தங்கியிருக்கும் நிறுவன ங்கள் இருக்கின்றன. அவையும் இந்த மூன்று மணித்தியாலங்களில் தங்கள் பாவனையை கணிசமான அளவில் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் நாலு இலட்சம் குடும்பங் களுக்கு நாம் மின்சார இணைப்பை கொடுத்துவிட்டோம். மேலும் நாலு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்று தெரிவித்த அமைச்சர், இந்நாட்டு மக்களில் 45 சதவீதமானோர் விறகையே எரிசக்தியாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இவ்விதம் செய்யாதிருந்தால் நாம் மின்சாரத் தேவையை தாக்குபிடித்திருக்க முடியா தென்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இப்போது 95 சதவீதமானோருக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர் 32 மெகாவாற் மின்சார உற்பத்தியை பயன் படுத்திய யாழ்ப்பாண மக்கள் இப்போது 43 மெகாவாற் மின்சார உற்பத்தியை பயன்படுத்துகிறார்கள். யாழ்ப்பாணம் தேசிய மின்விநியோக வலையமைப்பில் இதுவரை யில் இணைக்கப்படாத காரணத் தினால் அங்கு அனல் மின்சாரத்தையே மக்களுக்கு மின்சார சபை விநியோகிக்கிறது.

டீசல் மூலம் இயக்கப்படும் இந்த அனல் மின்சார நிலையங்கள் ஒரு அலகு மின் சக்தியை உற்பத்தி செய்வதற்கு 100 ரூபாவை செலவிடுகின்ற போதிலும் அது யாழ்ப்பாண மக்களுக்கு 22 ரூபாவுக்கே மின்சாரம் விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்து மின்சார பாவனையாளர் களில் 96சதவீதமானோர் சீ.எப்.எல். பல்பை பயன்படுத்துகிறார்கள் என்றும் அதன் மூலம் கணிசமான அளவில் மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் கொக்கி போட்டு மின்சார திருட்டுகள் இடம்பெறாத போதிலும் வன்னிப் பிரதேசத்திலும், புத்தளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் கொக்கி போட்டு மின்சாரத்தை திருடுகிறார்கள் என்றும் கூறினார்.

மாலை 6.30 முதல் 9.30 வரை மின் அழுத்திகளையும், சலவை இயந்திரங் களையும் பயன்படுத்தலாகாது என்றும், இந்த நேரத்தில் குளிர்சாதனப் பெட்டிகளை அணைத்துவிட வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.

-தினகரன்.

Published by

Leave a comment