ஒலிம்பிக் போட்டிக்கான பார்வையாளர் விசா விண்ணப்பம்

லண்டனில் இவ்வருட கோடைக்காலத்தில்  (Summer) நடைபெற இருக்கும் ‘ஒலிம்பிக்’ விளையாட்டுப் போட்டிகளையும் ‘பராலிம்பிக்’ (Paralympic) போட்டிகளையும் கண்டு களிப்பதற்குச் செல்லவிருக்கும் ஒலிம்பிக் பார்வையாளர்களுக்கான ஐக்கய இராச்சியத்துக்கான விசா விண்ணப்பங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் உலகின் பல நாடுகளிலும் ஏற்கப்பட்டு வருகின்றன.

ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதியும் ‘ Paralympic’ என அழைக்கப்படும் வலது குறைந்தோருக்கான போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29ம் திகதியும் லண்டனிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நடைபெற உள்ளன.

மேற்படி இப்போட்டிகளைக் கண்டு களிக்கச் செல்பவர்கள் ‘Visitors Visa’ மூலமாக விண்ணப்பிக்கலாம். விருந்தினராக அல்லது பார்வையாளராகச் செல்லவிருக்கும் குறித்த விண்ணப்பதாரிகள் பின்வரும் தகமைகளைக் கொண்டிருப்பதுடன் இங்கு குறிப்பிடப்பட்டுள் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய இராச்சிய எல்லைக்கட்டுப்பாட்டு நிறுவனமான UKBA உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு விருந்தினராக அல்லது பார்வையாளராக விண்ணப்பிப்போருக்கு அதிகபட்சமாக 6 மாதங்கள் ஐக்கய இராச்சியத்தில் இருப்பதற்கான விசா வழங்கப்படும்.

விண்ணப்பதாரி 18வயதுக்கு மேற்பட்டவராய் இருத்தல் வேண்டும். (தனிநபர்).

தன்னைப்பற்றி முழுமையான விபரங்களைத் தெளிவாக வழங்குவதுடன் விண்ணப்பங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து கோரப்பட்ட ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். தனது உத்தியோகம் / தொழில் மற்றும் நிதி சம்பந்தமான அறிக்கைகளை வழங்க வேண்டும்.

விண்ணப்பதாரி தான் ஐக்கிய இராச்சியத்தில் குறித்த காலத்துக்குத் தங்குவதற்கான செலவுகள், உணவு, போக்குவரத்துச் செலவுகள் மற்றும் வந்து மீண்டும் நாடு திரும்புவதற்கான பயணச் செலவுகள் போன்ற செலவுகளுக்குப் போதுமான நிதியைக் காண்பிக்க வேண்டும். 

மேற்படி செலவுகள் அனைத்தும் தனது சொந்த நிதியில் இருந்து செலவு செய்யப்பட வேண்டும். வேலை செய்ய முடியாது. மேற்படி செலவுகள் அங்கு வேலை செய்து அல்லது பொது நிதியின் உதவியுடன் செலவிட முடியாது.

ஆறு மாதத்துக்குள் ஐக்கிய இராச்சியத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

இக்காலப் பகுதியில் அதிகலவான உத்தியோகத்தர்களும் விசேட சேவைகளும் துரிதமாக வழங்கப்பட இருப்தாகவும் மேலும் அறிவித்துள்ளது. விசா பெற்று ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைபவர்கள், எல்லையில் (At Airport) எமது உத்தியோகத்தர்களால் விசாரிக்கப்படும் போது விசா விண்ணப்பிப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட சகல ஆவணங்களையும் கையளிக்க வேண்டிய தேவை ஏற்பட நேரிடும் என்பதால் சகல ஆவணங்களையும் எடுத்து வர வேண்டும் எனவும் கண்டிப்பான அறிவிப்பையும் செய்துள்ளது. கோரப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதவிடத்து அவரது ஐக்கிய இராச்சியத்துக்கான நுழைவு இரத்துச் செய்யப்படும் எனவும் UKBA தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment