எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை கிரிக்கட் அணிக்கும் அதன் இரசிகர்களுக்கும் இலங்கையின் வெற்றியே குறிக்கோள் என்ற வாசகத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது!
இந்தியாவா? இலங்கையா? எனும் நிகழ்தகவில் அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் CB (Commonwealth Bank) கிண்ண முக்கோணத் தொடரின் ஆரம்பச் சுற்றின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 19 புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கும் அவுஸ்திரேலியாவுடன் 15 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை அணி சவாலைச் சந்திக்கவிருக்கின்றது.
இந்நிலையில் இந்தியாவும் 15 புள்ளிகளுடன் இருப்பதும் இங்கு ஞாபகப்படுத்தப்பட வேண்டியதாகும். இப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகும். அப்போது இந்தியா தொடரிலிருந்து வெளியேறிவிடும்.
இருந்தும் இப்போட்டி சம நிலையில் முடிவடைந்தாலும் அல்லது இயற்கைக் காரணிகளால் தடைப்பட்டாலும் இலங்கை அணி இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகும்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் அவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் இரு அணிகளும் மீண்டும் சம நிலையில் இருக்கும். இந்நிலையில் இத்தொடரின் விதிமுறைகள் பின்வருமாறு கையாளப்படும்.
1. இரு அணிகள் பெற்ற மொத்தப் புள்ளிகள் கருத்திற் கொள்ளப்படும்.
2. இரு அணிகளினதும் வெற்றிகள் கணக்கிலெடுக்கப்படும்.
3. இரு அணிகளுக்கு மிடையேயான இப்போட்டிகளில் எந்த அணி கூடுதல் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது கருத்திற் கொள்ளப்படும்
| Teams | Mat | Won | Lost | Tied | N/R | Pts | Net RR |
|---|---|---|---|---|---|---|---|
| Australia | 7 | 4 | 3 | 0 | 0 | 19 | +0.553 |
| Sri Lanka | 7 | 3 | 3 | 1 | 0 | 15 | +0.162 |
| India | 8 | 3 | 4 | 1 | 0 | 15 | -0.593 |
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இவ்விரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற இம் முக்கோணத் தொடர் போட்டியில் இந்தியா இரண்டு வெற்றிகளையும் இலங்கை ஒரு வெற்றியையும் பெற்றுள்ளதால் இலங்கை அவுஸ்திரேலியாவிடம் தோற்கும் பட்சத்தில் இந்தியாவுக்கே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு செல்லும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Leave a comment