ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கை மீதான பொய் குற்றச்சாட்டுகள்:
இன, மத, அரசியல் பேதமின்றி அழைப்பு
இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற போர்வையில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள அபாண்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து இன்று நாடு முழுவதிலும் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது.
அரசியல் இனம், மதம் என்ற சகல பேதங்களை மறந்து ஒரே நாடு என்ற மகுடத்தின் கீழ் நாட்டை பாதுகாக்கும் இந்த மாபெரும் மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.
கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களான டியூ குணசேகர, வாசுதேவ நாணக்கார, கீதாஞ் சன குணவர்தன, டலஸ் அழகப் பெரும, டிலான் பெரேரா மற்றும் மஹிந்தானந்த அலுத்கம ஆகியோர் இந்த பகிரங்க வேண்டு கோளை விடுத்தனர். இதற்கமைய வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இந்த மக்கள் பேரணி இடம்பெறவுள்ளன.
கொழும்பு உட்பட 150 நகரங் களிலும் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் மக்கள் பேரணி யில் நாட்டின் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற பெயரில் அமெரிக்காவின் பின்னணியில் ஐ. நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை எதிர்த்து தாய் நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வருமாறும் நேற்றை செய்தியாளர் மாநாட்டின்போது வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப் பெரும கருத்து தெரிவிக்கையில்,
இந்த மக்கள் பேரணியானது எதிர்க்கட்சி கூறுவது போன்று ஐ.நா. வுக்கு எதிரானதல்ல மாறாக அதன் கீழுள்ள சில குழுக்களால் முன்வைக்கப்படும் தீர்மானதிற்கு எதிரானதாகும்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், மக்களின் பலத்தை வெளிக்காண்பிப்பதே இதன் நோக்கமாகும்.
இலங்கைக்கு எதிராக இதுபோன்று பல தடவைகள் பல்வேறு அழுத்தங்கள் உபயோகிக்கப்பட்டன. ஆனால் அத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அவரது தலைமையிலான அரசாங்கமும் அவைகள் அனைத்தையும் வெற்றி கண்டது.
பயங்கரவாதத்தை முறியடிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் பல்வேறு கோணங்களில் மேற்கத்திய நாடுகள் அழுத்தங்களை பிரயோகித்தன.
எனினும் அவற்றை ஜனாதிபதி அவர்கள் பொருட்படுத்தவில்லை.
2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதமற்ற நாட்டில் சுமுகமான முறையில் மக்கள் வாழும் நிலைமையை ஏற்படுத்துவேன் என்று கூறினார்.
அந்த வாக்குறுதிகளை நிலைநாட்டும் வகையிலேயே சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாது பயங்கரவாதத்தை முற்றாக முறியடித்தார்.
அதன் எதிரொலியே இந்த குற்றச்சாட்டுகளாகும்.
ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு, நாட்டில் சமாதானமும், ஐக்கியமும் தற்போது காணப்படுகின்றது.
அன்று ஏற்பட்ட காயங்கள் தற்போது தான் சுகமாகி வருகின்றன. இந்நிலையில் அதனை மீண்டும் தோண்டி எடுப்பதற்கு முற்படும் செயல் போன்றதொன்றே இவ்வாறான செயற்பாடுகள் என்றார்.
நல்லிணக்க ஆணைக்குழு
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் எதிர்க்கட்சிகள் உட்பட பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்தும் விடயத்தில் எவரும் எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, சுட்டிக் காண்பிக்கவோ முடியாது.
ஏனெனில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி அவர்கள் எந்த ஒருவரதும் அழுத்தங்கள் இல்லாத நிலையில் தானாகவே நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை நியமித்து 30 வருட யுத்த வரலாற்று பதிவுகள், நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தார்.
எனவே அவரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பில் அமுல்படுத்த எவரது அழுத்தங்களும் தேவையில்லை. பொறுப்பு வாய்ந்தவர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களும், அரசாங்கமும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை அமுல்படுத்தும் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.
இலங்கை- வெளிநாடுகளின் உறவு
இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரையில் நட்பு நாடு, எதிர்ப்பு நாடுகள் என்ற இரு வகைகள் எமக்கு இல்லை. அனைத்து நாடுகளுடனும் எமது தொடர்பு சிறப்பானதாகவே உள்ளது.
இலங்கைக்கும்- வெளிநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் வலுவானதாகவே காணப்படுகின்றன. ஆனால் வெளிநாடுகள் எமக்கு உதவி செய்வதை விட்டு விட்டு காலை வாரும் நடவடிக்கைகளுக்கு உதவ மாட்டார்கள் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சமாதானத்தை முழுமையாக நிலைநாட்டும் நோக்கில் மீண்டும் எழுந்து வரும் எமக்கு வெளிநாடுகள் ஆதரவுகளை வழங்கவேண்டும் என்றும் கொள்கின்றேன்.
அதேபோன்று இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையிலான உறவும் மிகவும் நெருக்கமானது. இந்த அழுத்தமான இலங்கைக்கு மாத்திரமானது அல்ல. இந்த பிராந்தியத்திற்கானது என்பதை சகலரும் அறிவார்கள்.
அதனால் பல தடவைகள் இலங்கைக்கு அதிகூடிய வாக்குகளை வழங்கி வெற்றியடைய செய்ததை போன்று இம்முறையும் உலக நாடுகள் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும். அதன் மூலம் நால்வர் வெற்றி பெறுவது உறுதி என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் சுட்டிக்காட்டினார்.
-Thinakaran.
Leave a comment