பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சிய படைகளுக்கு சிறப்பு பயிற்சி.
ஈரான் தாக்கினால் பதிலடி கொடுப்பதற்காக பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல் மற்றும் தரைப்படைகளை குவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் நாடு பாதாள அறைகளில் அணு உலை அமைத்து யுரேனியத்தை செறியூட்டி வருகிறது.
இதை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கபூர்வ பணிகளுக்கே பயன்படுத்துவதாக ஈரான் கூறி வருகிறது.
ஆனால் இதை அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஏற்கவில்லை. அணு குண்டு தயாரிப்பதில் ஈரான் ஈடுபடுவதாக குற்றம்சாட்டின.
இந்நிலையில் சர்வதேச அணு சக்தி முகாமை வெளியிட்ட அறிக்கையில் ஈரான் தனது அணு உலையில் மின் உற்பத்தி தேவையை விட அதிக அளவிலான யுரேனியத்தை செறவூட்டி இருப்பதாக தெரிவித்தது. இது அமெரிக்காவுக்கு புதிய சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரான் நாட்டையொட்டியுள்ள பாரசீக வளைகுடா பகுதி வழியாகத்தான் கப்பல்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தேவைப்படும் சுமார் 20 சதவீதம் மசகு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே இதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஈரான் அடிக்கடி இந்த கடல் பகுதியில் போர் ஒத்திகை நடத்துவது மற்றும் அதிவேக படகுகளை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை இருக்கிறது.
தற்போது ஈரானின் அணு உலை பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதனை அடுத்து பாரசீக வளைகுடா பகுதியில் கடல்வழி மற்றும் தரைவழி படைகளை குவிக்க தொடங்கி விட்டது. இந்த தகவலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வோல் ஸ்ரீட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
மேலும் ஈரானின் அதிவேக படகுகள், ஏவுகணை தாங்கி கப்பல் ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் இந்த போர்க்கப்பல்களில் அதி நவீன ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக அதில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி பெர்சிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க இராணுவம், தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதோடு, ஐக்கிய அரபு நாடுகளில் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆபத்துக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன. ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால் அவற்றைத் தாக்கும் விதத்தில் அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் ஐ.நா.வின் சர்வதேச அணு சக்தி முகாமை பிரதிநிதிகள் குழு ஈரானின் அணு சக்தி திட்டங்கள் குறித்து இரு முறை ஆய்வுகள் நடத்திய பின் வெளியிட்ட அறிக்கைகளுக்கு மாறாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு விதமான தகவல்களை அளித்துள்ளன.
அவற்றின்படி அணு ஆயுதங்கள் தயாரிப்பை ஈரான் கைவிட்டு விட்டது. அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
அதேநேரம் யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்திருப்பதில் அமெரிக்கா, இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கு இடையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் யுரேனியச் செறிவூட்டலை அதிகரித்த கையோடு அணு ஆயுதத் தயாரிப்பை மேற்கொள்வது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் அண்டை நாடுகளை ஒருவித பீதியிலேயே வைத்திருப்பதற்காக ஈரான் இது போன்ற தகவல்களைக் கசிய விடுவதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் கருதுகின்றன.
ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் இராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து இதுவரை சர்வதேச அணுசக்தி முகாமை (ஐ.ஏ.இ.ஏ) பிரதிநிதிகள் குழு இரு முறை ஈரானில் ஆய்வுகள் மேற்கொண்டது.
இரு முறையும் கோம் நகரின் போர்டோ பகுதியில் உள்ள அணு சக்தி நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள ஈரான் அக்குழுவை அனுமதிக்கவில்லை என ஐ.ஏ.இ.ஏ. குற்றம்சாட்டியுள்ளது.
அங்குதான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான சில குண்டு வெடிப்புகள் நடந்ததாக ஐ.ஏ.இ.ஏ. ஏற்கனவே கூறியிருந்தது.
-Thinakaran.
Leave a comment