இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல் லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளு வதற்கான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரை நீடிக்கப் பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்காக இம்மாதம் 29 ஆம் திகதி வரையும் ஏற்கனவே காலம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் பரவலாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளைக் கவனத்தில் எடுத்தே ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்கான காலம் மார்ச் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர் களை முன்கூட்டியே பதிவு செய்வதற்கான வேலைத் திட்டமொன்றை இம்முறை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதனூடாக இலங்கை ஹஜ்ஜாஜிகள் எதிர்கொள்ளுகின்ற அசெளகரியங்களைக் குறைக்கவும், தவிர்க்கவும் முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
அதேநேரம் இப்பதிவை அடிப்படையாக வைத்து இம்முறை இவ்வளவு பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுவதற்காகப் பதிவு செய்துள்ளார்கள்.
இவர்களுக்காக ஹஜ் கோட்டா வழங்க வேண்டும் என்று சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சிடம் கோர முடியும். அத்தோடு சவூதி அரபியா இலங்கைக்கு வழங்குகின்ற ஹஜ் கோட்டாவை முகவர் நிலையங்களுக்கு பதிவுக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கவும் முடியும்.
இதேவேளை பதிவு செய்கின்றவர்களுக்கும், முதல் தடவையாக ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர்களுக்குமே இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும். மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றார்.
-Thinakaran
Leave a comment