இலங்கையிலிருந்து 260 க்கும் மேற்பட்டோரை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு டோஹோ மற்றும் மாலிக்கு கொண்டு சென்று கைவிட்ட பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவுக்கு தொழில் வாய்ப்பினைத் பெற்றுத் தருவதாகக் கூறியே சுமார் 269 பேரை ஆபிரிக்க நாடான டோஹோவுக்கும் மாலிக்கும் அனுப்பியுள்ளார். குறித்த நபர் பற்றிய இரகசிய தகவலென்றின் மூலம் சந்தேக நபரைப் பின்தொடர்ந்த புலனாய்வு பிரிவினர் வெள்ளவத்தையிலுள்ள விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த அருணகிரிநாதன் ஜெயரூபன் (24 வயது) என்பவரே இந்த பணமோசடி மற்றும் ஏமாற்று வேலைக்காகக் கைது செய்யப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வவுனியா பிள்ளையார் கோயில் வீதியிலேயே தங்கியிருந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் இவர் கடமையாற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கனடாவுக்கு செல்வதற்கு குறித்த நபரிடம், முஸ்லிம்கள் மூவரும் வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 266பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை பல கட்டணங்களாக கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் முன்னாள் விடுதலைப் புலிகள் எனக் கூறுமாறு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இவர்களை ஆபிரிக்க நாடுகளுக்குகூட்டிச் சென்று, அந்தநாடுகளில் தங்க வைத்து விட்டு பின்னர் விஸா காலாவதியானதால் அந்நாட்டு பொலிஸாரிடம் பிடிபடவைத்து அவர்களை இலங்கைக்கு மீண்டும் நாடு கடத்த வைப்பதுடன் அவர்களிடமிருந்து பெற்ற பல இலட்சம் ரூபாவுடன் வசதியான நாடொன்றுக்குச் சென்று அங்கு தங்கிவிடுவதே இவர்களின் திட்டமாகும்.
சிங்கப்பூரிலுள்ள நண்பன் ஒருவர் பணத்தாசை காட்டியதாலேயே இவர் இந்த மோசடியில் ஈடுபட்டு 269 பேரையும் ஏமாற்றி ஒவ்வொருவரிடமும் பெரும் பாலானோரிடம் 25 இலட்சம் ரூபா வரை பெற்று கோடிக்கணக்கான ரூபா பணத்தை சுருட்டியுள்ளார்.
டோஹோவுக்கும் 209 பேரையும் மாலிக்கும் 60 பேரையும் எதியோப்பியா எயார் லைன்ஸ் மூலமே அனுப்பி வைத்துள்ளார்.
ஒரே நேரத்தில் இந்தளவு பேர் ஆபிரிக்க நாடுகளுக்கும் ஏன் செல்கிறார்களென்ற சந்தேகம் விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஒவ்வொருவரும் தங்கள் கடவுச் சீட்டுகளுக்குள் நூறு டொலரை வைத்து அதிகாரிகளிடம் அவற்றைக் கொடுக்க அவர்களும் அவற்றை எடுத்துக் கொண்டு எதுவித கேள்வியும் கேட்காது அனுப்பி வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்தைப் பெற்றவர்கள் கனடாவுக்கு அனுப்பப்படாவிட்டால் அவர்களுக்கு மீண்டும் பணம் ஒப்படைக்கப்படுமென வெற்று பேப்பர் ஒன்றில் முத்திரை ஒட்டி கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை எவருக்கும் இவர் பணத்தை ஒப்படைக்கவில்லை.
பிரதான சந்தேகநபரைக் கைது செய்துள்ளதால் அடுத்த கட்டமாக சிங்கப்பூரிலுள்ள இவரது நண்பனையும் விரைவில் கைது செய்யவுள்ளதாக குற்றத் தடுப்பப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைவிடப்பட்டு அந் நாட்டில் திறந்தவெளி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 209 இலங்கைத் தமிழர்களில் பத்து பேர் வரை கடந்த இரு வாரங்களில் நாடு திரும்பியுள்ளனர். மிகுதிப் பேர் டோஹோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
-Tamilwin
Doho – (Nigiriya Africa) Mali -(Border of Algeriya, Africa) –
ykk.
Leave a comment