பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதை முற்று முழுதாக ஒழித்துக்கட்டப்படும்

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தேர்வுசெய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில்களை கொமர்ஷல் வங்கி வழங்கியுள்ளது. ஆறாவது வருடமாக இவ்வருடமும் தேர்வுசெய்யப்பட்ட முகாமைத்துவ மற்றும் மருத்துவபீடங்களைச் சேர்ந்த 25 பேருக்கு நேற்று புலமைப் பரிசில் வழங்கப்பட் டது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் கொமர்ஷல் வங்கியின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் இப்புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தனர். இம்மாணவர்களுக்கு மடிக்கணனிகளும் கொமர்ஷல் வங்கியால் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வு கொழும்பு 2ல் உள்ள கொமர்ஷல் வங்கியின் கேட்போர்கூடத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது.

இந்தப் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தி புலமைப்பரிசிலின் முழுப்பலனையும் அடையவேண்டும் என இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், பல்கலைக்கழகத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட மாணவர்களே தெரிவுசெய்யப்படுகின்றனர். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் கல்விகளையும் குழப்புவதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பல சங்கங்களை உருவாக்கி அவற்றுக்கிடையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி மாணவர்களின் கல்விகளைக் குழுப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இந்தத் தரப்பினரே தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் எதிர்ப்புத்தெரிவித்து மாணவர்களை வீதிக்கு இறக்குகின்றனர்.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு அரசியலமைப்பிலும் இடமுண்டு. அனுமதிபெறும் தனியார் பல்கலைக்கழகங்கள் 25 வீதமான உள்ளூர் மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கவேண்டும். இதற்கு ஏற்கனவே இணக்கம்காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்டத்திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிலைமைகளை மாற்றுவதற்கு நாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். பல்கலைக்கழகங்களில் காணப்பட்ட பகிடிவதை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், பேராதனை பல்கலைக்கழத்தின் சில பீடங்களில் இன்னும் பகிடிவதை காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் பகிடிவதைகள் முற்றாக நீக்கப்பட்டுவிடும்.

பல்கலைக்கழக மாணவர்கள் எந்தவிதமான பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் இன்றி பல்கலைக்கழகங்களில் சுதந்திரமான கல்வியை கற்கவேண்டும். இதற்கான சூழ்நிலைகள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

-தினகரன்

Published by

Leave a comment