முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் யார் ? தலைவர் விரும்புவதும், வெறுப்பதும் யாரை??

மக்களுக்காக கட்சி, கட்சிக்காக தலைவர் என்பது ஜனநாயக மரபு. ஆனால் இவைகள் அனைத்துக்கும் மாற்றமாக தலைவருக்காக கட்சி, தலைவருக்காகவே மக்கள் என்பது முசோலினி, ஹிட்லர் போன்றவர்களின் பாசிசவாத கொள்கையாகும். இங்கே தலைவர் ரவுப் ஹக்கீமின் அரசியல் ஓர் பாசிசவாதமாகும்.

மக்கள் எக்கேடு கெட்டாலும், முஸ்லிம் சமூகம் எதை இழந்தாலும் அதனை அலட்டிக்கொள்ளாமல் அழகான சிரிப்பினை வெளிப்படுத்தியவாறு தனது பாசிசவாத சர்வாதிகார செயல்பாடுகளை யார் நியாயப்படுத்துகிறார்களோ அல்லது தனக்கு யார் கூஜா தூக்குகிரார்களோ அவர்களே முஸ்லிம் காங்கிரசின் பேராளர்கள்.

கடந்த காலங்களில் நாங்கள் தலைவரின் பாசிசவாத சர்வாதிகாரத்துக்கு முட்டுக் கொடுத்ததனாலும், தலைவரின் அத்தனை தவறுகளையும் சரியென்று நியாயப்படுத்தியதனாலும், ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாகவும் உள்ளூரில் உள்ள முஸ்லிம் காங்கிரசின் அரசியல் வியாபாரிகளினால் புறக்கணிக்கப்பட்டோம்.  

அவ்வாறு புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக பேராளர் மாநாட்டுக்கான அழைப்பிதல் விசேடமாக எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது தலைவரின் அத்தனை திருகுதாளங்களையும், மிகச்சிறந்த நடிப்பையும், ஏமாற்று வித்தைகளையும், சமூகம் சார்ந்த எந்தவித திட்டங்களோ, தூர நோக்குகளோ இல்லை என்பதனையும் நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டதன் காரணமாக அதனை பகிரங்கமாக விமர்சித்தோம். 

அவ்வாறு விமர்சித்ததன் காரணமாக இன்றைய பேராளர் மாநாட்டுக்கு நாங்கள் அழைக்கப்படவில்லை. 

அதாவது தலைவர் தொடர்ந்து பிழை செய்கின்றபோது அதனை சமூக அக்கறையுள்ள கட்சித் தொண்டர்கள் என்ற அடிப்படையில் நேரடியாக தவறுகளை சுட்டிக்காட்டினோம். ஆனால் தலைவரின் காதுகளுக்கு அவைகள் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. அதன்பின்புதான் பகிரங்கமாக தலைவரை விமர்சிக்க ஆரம்பித்தோம். 

ஜனநாயக பண்புள்ள தலைவர் என்றால், எங்களது நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டிருப்பார். ஆனால் தலைவர் தனது அந்தஸ்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு செய்கின்ற சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு யார் யார் எதிராக இருக்கின்றார்களோ அவர்களை தலைவர் விரும்பமாட்டார். 

அப்படியென்றால் தலைவர் யாரை விரும்புகிறார் ? 

உள்ளூரில் யார் யார் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஒலிப்பதிவு செய்து தலைவருக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் மற்றவர்களைப்பற்றி கோள் சொல்லுதல், மூட்டிவிடுதல், தலைவர் கூறுகின்ற முட்டாள்தனமான கருத்துக்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு அல்லாஹுஅக்பர் என்று சொல்லுதல், களவெடுத்தல், அதிகமாக ஊழல்களில் ஈடுபடுதல், தொழில் தருவதாக இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுதல், கொந்தராத்து செய்து ஏப்பமிடுதல், அற்ப சலுகைகளுக்காக தலைவரின் காலில் விழுந்து கெஞ்சுதல், கட்சியில் பதவி கேட்டு தலைவரின் வாசப்படியில் அடிக்கடி ஏறி இறங்குதல் போன்றவர்களைத்தான் தலைவருக்கு பிடிக்கும். 

அப்படியென்றால் யாரை தலைவர் வெறுக்கின்றார் ? 

சமூகம் பற்றியும், யதார்த்தம் பற்றியும் அடிக்கடி பேசுபவர்கள், உண்மையாக நடந்துகொள்பவர்கள், நியாயவாதிகள், கிழக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் பற்றியும், வடகிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் பற்றியும் உண்மையாக பேசுபவர்கள், தலைவரின் காலில் விழ தெரியாதவர்கள், பதவிக்காக தன்மானம் இழந்து கெஞ்சாதவர்கள், ஊழல்களில் ஈடுபடாதவர்கள், கௌரவமாக வாழ விரும்புகின்றவர்கள், தலைவரின் ஏமாற்று அரசியலை விமர்சிக்கின்றவர்கள் போன்றவர்களை தலைவருக்கு பிடிக்காது.         

இஸ்லாமிய மார்க்கம் எதனை தடுத்துள்ளதோ, அதனை பின்பற்றுபவர்களை தலைவர் விரும்புவதும், இஸ்லாமியனாக வாழ முற்படுகின்றவர்களை தலைவர் வெறுப்பதனையும் நாங்கள் நேரடியாகவே கண்டுள்ளோம். அப்படியென்றால் தலைவர் யார் ? அவர் எந்த சமயம் ? என்பது பற்றி இன்ஷா அல்லாஹ் விரிவாக ஆராய்வோம். 

எனவேதான் இன்று நடைபெறுகின்ற பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களில் கட்சிக்காக வீதியில் இறங்கி கஷ்டப்பட்டு பல பிரச்சினைகளை எதிர்கொண்டவர்கள் எத்தனை பேர் ? கட்சிக்காக இரவெல்லாம் கண்விழித்து, பொலிஸ் கேஸ் என்று அலைந்தவர்கள், தங்களது சொத்துக்களை இழந்தவர்கள் எத்தனை பேர் ? 

தலைவருக்கு மாத்திரமல்ல உள்ளூர் பிரமுகர்களுக்கும் கூஜா தூக்குகின்றவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான கட்சியல்ல. இது ரவுப் ஹக்கீம் என்ற தனி மனிதனுடைய அந்தஸ்தை பாதுகாப்பதற்கான கட்சி என்பது தலைவரின் கொள்கை. இதனை இன்று புரியாதவர்கள் என்றோ ஒருநாள் புரிந்துகொள்வார்கள். 

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s