கடந்த 29.04.2022 வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தில் தலைவர் ரவுப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தலைவரிடம் சிலர் கேள்விகள் கேட்டு திணறடிக்கச் செய்ததனால் அங்கு சலசலப்புக்கள் ஏற்பட்டதாக ஒரு தரப்பினரும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று இன்னுமொரு தரப்பினரும் விவாதிகின்றனர்.
தலைவர் கூறுவதுபோன்று இது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இருந்தால், சத்தமின்றி தனியாகச் சென்று அதில் கலந்துகொண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் எந்த விமர்சனமோ, குழப்பமோ ஏற்பட்டிருக்காது.
ஒரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதென்றால், அந்த ஊர் கட்சி போராளிகளுக்கு முதலில் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் கல்முனையில் உள்ள கட்சி போராளிகளுக்கு அறிவிக்காமல், தூர இடங்களிலிருந்து இளைஞர்களை வரவழைத்து ஆர்பாட்டம் செய்ய முற்பட்டது ஏன் என்பதுதான் அனைவரது கேள்வியாகும்.
இது சம்பந்தமாக கல்முனையை சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள் பலரிடம் தொடர்புகொண்டபோது “”தலைவரின் வருகையின் பின்பு முகநூல் மூலமாகவே அறிந்துகொண்டோம். தலைவர் எங்கு செல்வதென்றாலும் அங்குள்ள தலைவரின் ஒற்றர்கள், கோள் மூட்டுபவர்கள், மாமா வேலை பார்ப்பவர்கள், ரெகோட் பண்ணி தலைவருக்கு அனுப்புபவர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே தலைவர் தனது நிகழ்ச்சி நிரலினை தெரிவிப்பது வழமை. உண்மையான கட்சிக்காரர்களை தலைவர் கணக்கில் எடுப்பதில்லை”” என்று அவர்கள் தெரிவித்தனர்.
“முஸ்லிம்களின் முக வெற்றிலை” என்று அழைக்கப்படுகின்ற கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணையுடன் தலைவர் ரவுப் ஹக்கீமின் தலைமையில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடாத்துவதற்கான திட்டம் தலைவரிடம் இருந்தது.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி செல்கின்ற மக்கள் சக்தியினரின் அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் அனைத்து தலைவர்களும் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள நிலையில், முதல் நாள் மாத்திரமே தலைவர் அதில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து வெளியேறுவதற்கு கல்முனை போராட்டம் ஒரு சாட்டாக இருக்கலாம்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட கல்முனை ஆர்பாட்டத்தினை முன்கூட்டியே தெரியப்படுத்தினால் ஹரீஸ் எம்பியின் ஆதரவாளர்களினால் அது குழப்பப்படலாம் என்ற அச்சம் தலைவரிடம் இருந்திருக்கலாம்.
போராட்டத்தில் கலந்துகொள்ள கல்முனைக்கு வருகைதந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சமனான எண்ணிக்கையில் மு. கா ஆதரவாளர்களை திரட்ட வேண்டிய தேவை இருந்தது. அதனால் வெளி ஊரிலிருந்து கட்சி அடையாளத்துடன் ஆடைகள் அணிந்த அப்பாவி இளைஞர்கள் வாகனத்தின் மூலம் கல்முனை நகருக்கு கொண்டுவரப்பட்டனர். இது அவசர அவசரமாக வரவழைக்கப்படவில்லை. ஏற்கனவே திட்டமிட்டவாறே நடைபெற்றுள்ளது.
இதனை அறிந்துகொண்ட சிலர் ஸ்தளத்துக்கு சென்று தலைவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அதில் “கல்முனையில் பௌத்த தேரர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தபோது பதிலுக்கு முஸ்லிம் தரப்பினரும் பல நாட்கள் எழுட்சிப் போராட்டம் நடாத்தினர். அதன்போது தலைவர் என்றவகையில் பிரச்சினையை தீர்ப்பதற்கு கல்முனை பக்கமே வருகைதராத நீங்கள் இப்போது வந்தது ஏன்?” என்ற கேள்வி சிந்திக்கக்கூடியது.
எது எப்படி இருப்பினும், குறுகிய நேரத்துக்குள் முடிவடைந்த ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு இல்லாமல் இருந்திருந்தால் அது “முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனைந்து நடாத்திய அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டம்” என்று விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும்.
அத்துடன் ஹரீஸ் எம்பி இல்லாமலேயே கல்முனையில் நடாத்திய போராட்டம் பாரிய வெற்றி என்றும், எப்பொழுதும் கல்முனை மக்கள் தலைவர் ரவுப் ஹக்கீமுடன்தான் உள்ளார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும்.
சலசலப்பும், பதட்டமும் ஏற்பட்டதனாலேயே அது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்று முடிவுரை கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சலசலப்பு ஏற்படுகின்றபோது தலைவரின் ஒற்றர்களினால் எதுவும் செய்யமுடியாது என்பது மட்டும் உறுதி.
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது