அதிஉயர்பீடத்துக்கு ஆண்மையும், முதுகெலும்பும் உள்ளதா ?

அதிஉயர்பீட கூட்டம் எதிர்வரும் 22.04.2022 இல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானதும், ஏதோ நீதி தவறாத உமர் (ரழி) அவர்களின் அரச சபை போன்றும், அங்கு நீதியும் நியாமும், உண்மையும் பிரஸ்தாபிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சிலர் முகநூல்களில் பதிவிடுகின்றனர்.

அதிஉயர்பீடம் என்பது தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் எடுபிடிகளின் அரங்கம். அவ்வளவுதான். அதாவது தலைவரிடமிருந்து ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்களும், இதுவரைகாலமும் கொட்டிப் பங்கிட்டுக்கொண்டு நன்றாக உல்லாசம் அனுபவிப்பவர்களினதும் கூடாரமாகும். 

சமூக உணர்வுகளோ, சமூகம் பற்றிய தூர நோக்குகளோ, கட்சி பலமடைய வேண்டுமென்று அடிமட்ட போராளிகள் சிந்திப்பது போன்ற எண்ணங்களோ சிறிதளவேனும் இவர்களிடம் இல்லை. சுருக்கமாக கூறினால் வியாபாரிகள். அதாவது அரசியல் வியாபாரிகள். 

எதிர்காலத்தில் எப்படி தேர்தலில் போட்டியிடலாம், அரசியல் பதவிகளை பெறலாம், கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம், அதிகாரத்தை அடையலாம் என்ற சிந்தனையை தவிர வேறு எந்தவித சிந்தனைகளும் இவர்களிடம் உள்ளதாக நான் அறியவில்லை.  

அரசியல் நெருக்கடி நிலவுகின்ற காலங்களில் அதிஉயர்பீட கூட்டம் என்று அறிவித்து முஸ்லிம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்துவார்கள். பின்பு கூடி சாப்பிட்டுவிட்டு கலைந்துவிடுவார்கள். முஸ்லிம் சமூகத்தினால் பாராட்டும் விதமாக தீர்க்கதரிசனமான முடிவுகள் ஏதாவது இந்த அதிஉயர்பீடத்தினால் எடுக்கப்பட்ட வரலாறுகளில்லை.

அத்துடன் அங்கு தலைவரை யார் அதிகமாக புகழ்வதென்ற போட்டி நடைபெறும். இறுதியில் “தலைவரின் முடிவே இறுதி முடிவு. தலைவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம். அல்லாஹ் அக்பர்” என்று கூறியதும் கூட்டம் கலைந்துவிடும். 

இதுக்குத்தானா இத்தனை எதிர்பார்ப்புக்கள் ? இத்தனை மாசாலங்கள் ? பம்மாத்துக்கள் ? 

அதிஉயர்பீடத்துக்கு எவ்வாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள் ? 

தலைவரிடம் அதிகமாக கெஞ்சுகிறவர்களும், காலில் விழுந்து விழுந்து அழுகின்றவர்களும், விடிந்ததும் காலை ஆறு மணிக்கு தலைவரின் இல்லத்துக்கு சென்று அல்லது தொலைபேசி மூலமாக மற்றவர்களை போட்டுக் கொடுக்கின்றவர்கள் அதாவது கோள் கூறுபவர்களும், தலைவருக்கு எதிராக பேசுகின்றவர்கள் பற்றி ஒலிப்பதிவு செய்து அனுப்புகின்றவர்களும், கத்தி கதறி கெஞ்சி, கையேந்தி இறுதியில் கண்களால் இரத்தம் வழிகின்ற தருவாயில் அவர் தனது விசுவாசிதான் என்று தலைவரின் மனம் தீர்மாக்கின்றபோது அவர் அதிஉயர் பீடத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார். 

மாறாக முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற ரோசம் உள்ளவர்கள், கௌரவமானவர்கள், சமூக உணர்வாளர்கள், கட்சி தியாகிகள், அரசியல் அறிவுடையவர்கள், சிந்தனையாளர்கள், முஸ்லிம் கல்விமான்கள் போன்ற எவருக்கும் அதிஉயர்பீடத்தில் இடமில்லை. இவ்வாறானவர்களை இணைத்தால் அது எதிர்காலத்தில் தலைமைத்துவத்துக்கு சவாலாகிவிடும் என்ற காரணத்தினால் அவ்வாறானவர்களுக்கு இடமில்லை.  

சுருக்கமாக கூறப்போனால் தலைவருக்காகவே கட்சி, தலைவருக்காகவே அதிஉயர்பீடம் அதாவது அனைத்தும் தலைவருக்காகவே. இது புனித ரமழான் மாதத்தில் அல்லாஹ் மீது ஆணையிட்டு நான் கூறுகின்ற உண்மையாகும்.      

ஆண்மையும், முதுகெலும்பும் இல்லாதவர்கள் என்று தலைப்பிட்டேன் எதற்கு ? 

இதற்கு ஏராளமான சம்பவங்கள் இருக்கின்றபோதிலும் ஒன்றை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்: 

அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை ராஜினமா செய்திருந்த கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித அமைச்சு பதவிகளையும் எடுப்பதில்லை என்று அதிஉயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டு மூன்றாவது நாள் தலைவர் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார். இது கட்சியின் தீர்மானத்துக்கு முரணானதென்று கூறுவதற்கு ஒரு உறுப்பினருக்கு முதுகெலும்பு இருக்கவில்லை. அல்லது ஆண்மை இருக்கவில்லை. 

எனவே அதிஉயர்பீடம் என்பது தலைவரின் விருப்பங்களை பிரதிபலிக்கும் விதமாக சட்ட அந்தஸ்து வழங்குகின்ற ஓர் கும்பலின் சபையாகும். 

கட்சியை புனரமைப்பதென்றால் இந்த சபை கலைக்கப்பட்டு மறுசீரமைக்கப்படல் வேண்டும் அதாவது சமூக உணர்வாளர்கள், அரசியல் அறிவுள்ளவர்கள், சிந்தனையாளர்கள், கல்விமான்கள் போன்றோர் இணைத்துக்கொள்ளப்படல் வேண்டும் என்பது பலரது நீண்டகால கோரிக்கையாகும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s