போராட்டக் களத்தில் முஸ்லிம்கள் மார்க்க கடமைகளை பேணுவது சரியா?

ராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெற்றுவருகின்ற தொடர் போராட்டத்தில் பங்கேற்கின்ற முஸ்லிம்கள் தங்களது மார்க்க கடமைகளை பகிரங்ககமாக மேற்கொள்வது எம்மவர்களாலேயே விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

File picture

ஒன்றை நாங்கள் சிந்திக்க வேண்டும். இது எமது நாடு. நாங்களும், எங்கள் மூதாதயர்களும் இங்குதான் பிறந்தோம், வாழ்கிறோம், இங்கேதான் மரணிக்க உள்ளோம். எமது நாட்டில் எமது முழு உரிமையையும், மார்க்க கடமைகளையும் செய்வதற்கு அச்சப்பட்டால் வேறு எங்கு செல்வது ? இங்கே இல்லாத உரிமை வேறு எங்கு கிடைக்கும் ?   

அதிலும் இது ரமழான் மாதம் என்பதனால் ஏனைய பதினொரு மாதங்களைவிட இந்த மாதத்தில் மார்க்க சடங்குகள் அதிகம் என்பது ஏனைய சமூகத்துக்கும் நன்கு தெரியும்.

ஒரு நாளைக்கு ஐவேளை தொழாதவன் முஹ்மீனாக இருக்க முடியாது. போராட்ட களத்தில் தொடர்ந்து பல மணிநேரம் இருக்கின்றபோது தொழுகை நேரம் வந்தவுடன் அங்கு தொழுவது ஒரு முஹ்மீனின் கடமையாகும். அதைத்தான் எமது சகோதரர்கள் செய்கின்றார்கள்.  

புலிகளுடன் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தென்னிலங்கையில் தமிழர்கள் கடத்தப்படுவதும், காணாமல் போவதும் தொடர்கதையாக இருந்தது. அவ்வாறான சூழ்நிலையிலும் அவர்கள் தங்களை தமிழர்கள் என்ற தனித்துவத்தையும், கலாச்சார அடையாளத்தையும் காண்பிப்பதில் ஒருபோதும் அச்சப்பட்டதில்லை. 

செல்லும் இடங்களிலெல்லாம் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டும், ஆண்கள் வேட்டியும் அணிந்து சென்று தனித்துவத்தை பேணினார்கள். அத்துடன் தவறாமல் கோவில் திருவிழாக்கள், கோவில் சடங்குகளை நடாத்தியதுடன், தேர்திருவிழா, காவடி, கற்பூர சட்டி போன்ற சடங்குகள் தென்னிலங்கையில் செல்லாத வீதிகள் இல்லை. 

அதுபோல் பாலஸ்தீனில் யூதர்களின் துப்பாக்கி முனையிலும், குண்டு வெடிக்கின்ற நிலையிலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் மார்க்க கடைமைகளை நிறைவேற்ற தயங்கியதில்லை. இஸ்லாமிய போராட்ட இயக்கங்கள் போர் முனையில் தொழுகையை பேணுகின்றனர்.

இவைகள் அவர்களது ஈமானில் உள்ள உறுதியையும், தங்களது தனித்துவத்தில் உள்ள வைராக்கியத்தையும் காட்டுகின்றது. ஆனால் சஹ்றான் குழுவினரின் தாக்குதலுக்கு பின்பு இராணுவத்தினர்களின் கெடுபிடி ஏற்பட்டபோது தங்களது வீட்டிலிருந்த அல்-குரான், ஹதீஸ் போன்ற நூல்களை தீயிட்டு எரித்த பல சம்பவங்களை மறக்க முடியாது. இது எமது ஈமானில் உள்ள பலயீனத்தை காட்டுகின்றது.    

நாங்கள் எந்த கோட்டைக்குள் அல்லது குகைக்குள் சென்றாலும் எங்களது தனித்துவத்தினையும், மார்க்க கடமைகளையும் பேணுவதற்கு ஒருபோதும் தயங்கக் கூடாது. அதில் வைராக்கியமும் உறுதிப்பாடும் இருத்தல் வேண்டும். 

இறை அச்சம் உள்ளவர்களுக்கும், ஐவேளை தொழுகின்றவர்களுக்குமே தொழுகையின் அருமை புரியும். பேரினவாதிகள் எங்களை அடிப்படைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் முட்டாள்தனமாக கூறுவார்கள் என்பதற்காக எங்களது கடமைகளை விட்டுவிட முடியாது. அத்துடன் எமது தனித்துவத்தினையும் இழக்க முடியாது. 

அவ்வாறு அச்சப்படுவதானது எமது ஈமானில் உள்ள பலயீனம் மாத்திரமல்ல, நாங்கள் இந்த நாட்டின் இரண்டாம்தர பிரஜை என்பதனை எங்களது செயல்பாடுகள் மூலமாக நாங்களே உறுதிப்படுத்துவதாக அமைகின்றது. 

எனவே எந்த சூழ்நிலையிலும், நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உரிமையை விட்டுக்கொடுக்காமல் வாழ்வதோடு தயக்கமின்றி எந்த இடத்திலும் எமது மார்க்க கடமைகளை ஓர்மத்துடன் பேணுவோம். அந்த இடத்தில் மரணித்தாலும் அது எங்களுக்கு சுகம்தான்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s