காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையின் 46வது கூட்டத்தொடர் 27.01.22 (வியாழக்கிழமை) இன்று நடைபெற்றது. இவ்வமர்வின் போது இவ்வருடம் நகரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.அதில் ஒரு அங்கமாக எதிர்வரும் ஐந்து வருடங்களில் நகரசபையின் நிர்வாகக் கட்டமைப்பினை மக்கள் நேய, வினைத்திறன் மிக்க நிர்வாகமாக கட்டமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட உள்ளது என நகரசபைத் தவிசாளர் சபையில் அறிவித்தார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான திட்டத்தை தயாரிக்கும் இந்தப் பணி நகரசபை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.
இதன்போதே ‘நகரசபையின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பினை வடிவமைப்பதில் நாம் அதிக ஆர்வம் கொண்டுள்ளோம் எனவும் இதற்கான காத்திரமான பங்களிப்பை வழங்குவோம்’ எனவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் உறுதி வழங்கினார். இது தொடர்பான முழுமையான ஆலோசனைகளையும் துறைசார் ஒத்துழைப்புக்களையும் NFGG குறித்த திட்டமிடற் குழுவிற்கு வழங்கிவைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதங்கள் செயலாளரினால் நகரசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும் என இதன்போது தவிசாளர் தெரிவித்தார்.