உண்மையை மறைக்க சூபிச லேபலா?

காத்தான்குடி றஊப் மௌலவியின் பிரச்சனை சிறிது சிறிதாக இருந்து வந்ததை, இப்போது அது ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றுவதற்கான பிள்ளையார் சுழி போடப்படுவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது முஸ்லிம்கள் மத்தியில் றஊப் மௌலவியின் விவகாரத்தை வைத்து ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்குவதற்கு அல்லது முஸ்லிம் சமூகத்தை எந்த நேரமும் ஒரு கொதிநிலையில் வைத்திருப்பதற்காக அரசாங்கத்தைக் கொண்டே இதனை செய்விப்பதற்கான ஒரு சதித்திட்டம் அரங்கேறி வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

மவ்லவீ A J அப்துர் ரஊப் (மிஸ்பாஹி)

கலகொட அத்தே ஞானசார ஹாமதுருவின் றஊப் மௌலவியுடைய பள்ளி வாயலுக்கான விஜயம் மற்றும் அதனைத் தொடர்ந்து காத்தான்குடியின் சில சிவில் அமைப்புக்களுக் கெதிரான ஞானசார ஹாமதுருவின் அறிக்கை, பேராசியரும், இராஜாங்க அமைச்சருமான சன்ன ஜயசுமன ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணிக்கு றஊப் மௌலவியின் விவகாரம் தொடர்பாக செய்திருக்கின்ற முறைப்பாடு போன்றவற்றைப் பார்க்கின்ற போது, மீண்டும் ஒரு முறை முஸ்லிம் சமூகத்தை கொதிநிலைக்குத் தள்ளுவதற்கான கருமேகங்கள் சூழ்ந்துவருவதைக் காணமுடிகின்றது. ஞானசார ஹாமதுருவுக்கும், பேராசிரியர் சன்ன ஜயசுமனவிற்கும் றஊப் மௌலவியின் விவகாரம் கிடைத்திருப்பது பெருச்சாளிக்கு பெரிய கருவாடு கிடைத்தால் எவ்வாறு மகிழ்சியடையுமோ அவ்வாறான ஒரு மகிழ்ச்சியை இவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்.

1979ம் ஆண்டு றஊப் மௌலவி சொன்ன சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் காரணமாக அவருக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் ‘முர்த்தத்’ அதாவது மதம் மாறியவர் என்ற ‘பத்வா’ வழங்கப்பட்டது. ‘முர்த்தத்’ என்ற பத்வா வழங்குவதற்கு றஊப் மௌலவி கூறிய கருத்துதான் என்ன?

‘றசூல் (ஸல்) அவர்களின் தோற்றத்தில் வந்தது அல்லாஹ்தான். நரிக் குறவன் நரியைப் பிடிப்பதற்கு நரிவேடம் போடுவானே அதேபோல் மக்களைத் திருத்துவதற்காக முகம்மது என்ற வேடத்தில் அல்லாஹ் உலகுக்கு வந்தான். முதல் முதலாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹியை எடுத்துக் கொண்டு ‘ஹிறா’ குகைக்கு வந்தபோது தன்னிடம் வஹியைத் தந்த அல்லாஹ்தான் ‘ஹிறாக்’ குகையில் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு, ஜிப்ரீல் (அலை) ஆச்சரியப்பட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கு முகம்மதைக் காணவில்லை. அல்லாஹ்வைத்தான் கண்டார்கள். அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. அல்லாஹ் ஆணும் தான், பெண்ணும் தான். அல்லாஹ் காப்பும், தண்டையும் போட்ட மீசை முளைக்காத 07வயது இளைஞனாக காட்சியளித்தான். உலகிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வின் வெளிப்பாடே அதாவது ‘ஹம்மவோஸ்த்’ – (எல்லாம் அவனே)

இவ்வாறான கருத்துகளுக்குத்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் பத்வா வழங்கப்பட்டது. இந்த பத்வா எகிப்திலுள்ள பல்கலைக்கழத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த பத்வா தென் ஆபிரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமும் அங்கீகரித்துள்ளது. இந்தியாவிலுள் லக்னோவிலுள்ள ‘நதுவதுல் உலமா’ பல்கலைக் கழகமும் அங்கீகரித்துள்ளது. றஊப் மௌலவி கூறுவது போல் இங்குள்ள அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்வின் காரணமாக வழங்கப்பட்ட பத்வா அல்ல இது மேலும் இப்பத்வாவை அக் காலத்திலிருந்த சூபி உலமாக்களே எழுதியிருந்தார்கள். 1979ம் ஆண்டு என்பது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்குள் வஹாபிகள் நுழையாத கால கட்டமாகும். அதாவது அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது றஊப் மௌலவி கூறுவது போன்ற சூபி முஸ்லிம்களாலும், ஞானசார ஹாமதுரு கூறுவது போன்ற பாரம்பாரிய முஸ்லிம்களாலும் சூழப்பட்டிருந்த காலகட்டமாகும். ஏன், றஊப் மௌலவியின் ஆசிரியர்களான (உஸ்தாதுமார்களான) உஸ்தாத் அப்துல் சமது, உஸ்தாத் அஜ்வத் போன்றவர்களும் இந்த பத்வாவை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவை முஸ்லிம் சமய கலாசார திணைக்களமே உலக நாடுகளிலுள்ள முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி அங்கீகாரத்தை எடுத்தது. பின்னர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களமே உத்தியோகபூர்வமாக இந்த பத்வாவை வெளியிட்டது. எனவே இன்று சூபி உலமாக்களின் கருத்துக்களையே றஊப் மௌலவி சவாலுக்கு உட்படுத்துவதற்காக ஞானசார ஹாமதுருவை நாடியிருக்கின்றார்.

அல்லாஹ்தான், தனது படைப்புக்களின் உருவத்தில் வெளியாகியிருக்கின்றான். என்ற றஊப் மௌலவியின் இஸ்லாத்தில் இல்லாத கருத்தை காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்கள் மாத்திரமல்ல, இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மாத்திரமில்ல, உலகத்திலுள்ள எந்த முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இலங்கையிலுள்ள சூபி முஸ்லிம்களோ, பாரம்ரிய முஸ்லிம்களோ இக் கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அல்லது சூபிச உலமாக்கள் றஊப் மௌலவியின் அத்வைதக் கருத்து சம்பந்தமாக தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

றஊப் மௌலவியின் பிரச்சனை வேறு. சூபி முஸ்லிம்களின் பிரச்சனை வேறு. றஊப் மௌலவி தன்னுடைய பிரச்சனையை இது சூபி முஸ்லிம்களின் பிரச்சனை ஏன் பொதுமைப்படுத்துகின்றாரோ தெரியவில்லை. றஊப் மௌலவி சியாரங்களை தரிசிப் பதற்காகவோ அல்லது மௌலீதுகளை ஓதுவதற்காகவோ இப் பத்வா வழங்கப்பவில்லை. இதனை இலங்கையிலுள்ள ஏனைய சூபி முஸ்லிம்களோ, தரீக்காவாதிகளோ இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ‘எல்லாம் அவனே’ என்ற கருத்து இஸ்லாத்தில் இல்லை. எவராவது அவ்hறு கூறுவார்களாயின் அவர்கள் இஸ்லாத்தை விட்டுவெளியேறிச் சென்றவர்கள் என கருதப்படுவார்கள் என்று அந்தப் பத்வாவில் தெளிவாக குறிப் பிடப்படட்டுள்ளது.

நாட்டில் ஏனைய பகுதியிலுள்ள சூபி முஸ்லிம்கள் மத்தியில் றஊப் மௌலவி அல்லாஹ் நரிக் குறவன் போல் வேடம் போட்டான்;, எல்லாம் அவனே என்ற கொள்கையைப் பேசுவதில்லை. பேருவளையிலே, காலியிலே, தெவட்டகஹ பள்ளியிலே, கடற்கரைப் பள்ளியிலே இவரால் இக்கருத்துக்களை பேச முடியுமா? இவ்வாறான இடங்களிலெ;லாம் றஊப் மௌலவி அவுலியாக்களைப் பற்றியும், மௌலூதுகளைப் பற்றியும் கந்தூரி பற்றி மட்டுமே பேசுவார். காத்தான்குடியில்தான் ஞானக் கருத்துக்களைப் பேசுவார். நாட்டின் ஏனைய பகுதியில் வேறு முகமும், காத்தான்குடியில் வேறு முகமும் காட்டுவார். இதனை சூபி முஸ்லிம்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சூபி முஸ்லிம்களுக்கு திருமணம் முடித்துக்கொடுப்பதிலேயோ, பாடசாலைகளில் கல்வி பயிலும்போது பாகுபாடு காட்டப்படுவதில்லை. றஊப் மௌலவி கந்தூரி கொடுப் பதற்காவோ, மௌலீது ஓதுவதற்காகவோ, சியாரங்களை தரிசிப்பதற்காகவோ இந்த பத்வா வழங்கப்படவில்லை என்பதை நாட்டிலுள்ள ஏனைய சூபி முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

றஊப் மௌலவியைப் பின்பற்றுபவர்களுக்கு உண்மையிலே பிரச்சனை இருக்கின்றது. அவர்கள் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகமாகப் பாவிக்கப்படுவதாகக் கூறி அழுகின்றார்கள். மற்றைய முஸ்லிம்களைப் போல தாம் விரும்பியோ விரும்பாமலோ குடும்பங்களோடு திருமணப் பந்தத்தில் இணைய முடியாமல் உள்ளது. அங்கும் இந்த மார்க்கப் பிரச்சனை தலை தூக்குகின்றது. முஸ்லிம் பாடசாலைகளில் கூட கல்வி கற்கும் இடங்களில் மற்றைய மாணவர்களால் தாங்கள் இரண்டாம் தர பிரஜையாக நோக்கப்படுவது தங்களுக்கு பெருஞ் சங்கடங்களை தோற்றுவிப்பதாகவும் கூறுகி;றார்கள். இது உண்மையிலே அவர்களுக்கு பாரதூரமான விடயம். இவ்வாறான நிலைமைகளிலிருந்து அவர்கள் விடுதலை பெறவே விரும்புகின்றார்கள். விடுதலை கிடைக்கவும் வேண்டும்.

உலமாக்களைப் பொறுத்தவரை இஸ்லாத்தில் இல்லாதவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இஸ்லாம் என்பது குர்ஆன், ஹதீஸினால் ஆளப்படுவது. வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்திலும் தெளிவாக வரையறுத்துள்ளதுடன் அந்த வரையறைகளை மீராதளவு இறுக்கமான மார்க்கம் தான் இஸ்லாம். இஸ்லாத்தை பின்பற்றுபவன் முஸ்லிம். எங்களுக்கு முஸ்லிம் என்ற பெயர் வேறு யாராலும் சூட்டப்படவில்லை. முஸ்லிம் என்ற பெயரை அல்லாஹ்தான் எங்களுக்கு சூட்டினான். எனவே இஸ்லாமிய வரையறைக்குள் இல்லாதவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாகத்தான் கொள்ளப்படுவார்கள்.

றஊப் மௌலவிக்கும், உலமாக்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு கடந்த 43வருடங்களுக்குள் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஒருமுறை இந்த ஒற்றுமை பலமாக ஏற்பட்டு காத்தான்குடியின் மத்தியஸ்தமான மெத்தைப் பள்ளிவாயலில் றஊப் மௌலவியும், அவரின் ஆதரவாளர்களும் ஜும்ஆவில் கலந்து கொண்டு றஊப் மௌலவி உறையும் ஆற்றினார். அந்தளவுக்கு சுமுகமாக இருந்த நிலைமை பின்னர் றஊப் மௌலவி ‘எல்லாம் அவனே’ என்ற அத்வைத கருத்துக்களை கூறத் தொடங்கியதும் மீண்டும் ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டது. மீண்டும் ஏன் ஒற்றுமைக்கு உலை வைத்தீர்கள் என றஊப் மௌலவியிடன் கேட்ட போது ‘ஏனோ தெரியவில்லை உரையாற்ற எழுந்தால் அத்வைதம்தான் பேச வருகின்றது’ என்றார். றஊப் மௌலவியிலும் பிழையில்லை. 40 வருடங்களாக ஒரே நாக்கில் உச்சரிக்கப்பட்ட விடயத்தை இரவோடிரவாக மாற்ற முடியாது. இரவோடிரவாக மாற்றாவிட்டாலும் படிப்படியாக இக் கருத்துக்களை மாற்ற வேண்டும். தன்னை நம்பியிருக்கின்ற, தன்னைப் பின்பற்றி வருகின்ற மக்களுக்காக அவர்களுடைய சந்ததிக்காக தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும்.

ஏனென்றால் இஸ்லாத்தில் இல்லாதவற்றை இஸ்லாம்தான் என்று அங்கீகரித்து அல்லது அதுவும் இஸ்லாம்தான், இதுவும் இஸ்லாம்தான் என்று சொல்லி இரண்டு கொள்கைகளையும் சேர்த்துக் கொண்டு செல்ல, எந்தளவு உலமாக்கல் முன்வருவார்கள் என்பது கேள்விக்குறிதான். இவ்வாறு இரண்டு கொள்கைகளும் ஒன்று சேர்த்து இஸ்லாத்தை குழப்பாமல் றஊப் மௌலவியைச் சேர்ந்தவர்கள் ஒரு சமுதாயமாக இருக்கட்டும் என்றே உலமாக்கல் கூறுகின்றார்கள். ஏனென்றால் இப்படி ஒரு கூட்டம் யுகநாள் முடியுமட்டும் இருந்தாலும் அல்லாஹ்வுக்கு எந்த நட்ட முமில்லை.

ஆகவே றஊப் மௌலவி மெத்தைப் பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுதுவிட்டு அங்கேயே மார்க்க பயான் செய்கின்ற அளவிற்கு இறங்கிவந்து விட்டு பின்னர் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல் பழைய கருத்துக்களை மீண்டும் கூறியதால் அந்த ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டது.

இப்போது மீண்டும் அந்த ஒற்றுமையைக் கொண்டுவர றஊப் மௌலவி ஞானசார ஹாமதுருவையும், சன்ன ஜயசுமனவையும் நாடியிருப்பது சரியா? இவர்கள் முஸ்லிம் மத்தியில் எவ்வளவு பிளவையும், அழிவையும் ஏற்படுத்தியவர்கள் என்பது உங்களுக்கு தெரியாததல்ல.

பேராசிரியர் சன்ன ஜயசுமன அப்போது ரஜரட்ட பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கும் பேராசிரியர். அவர் தனது ஏதிர்கால அரசியல் இலக்கை எய்வதற்காக அவருடன் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதுமற்ற டாக்டர் ஷாபியின் வாழ்க்கையுடனும், அவரின் குடும்பம் மற்றும் ஒட்டு மொத்த முஸ்லிம் மருத்துவர்களின் வாழ்க்கையுடன் விளையாடியவர். ஊடகவியளாளர்களை சந்தித்து சன்ன ஜயசுமன சிங்கள இனவிருத்தியை அழிப்பதாகக் கூறி டாக்டர் ஷாபிக்கு எதிராக பாரிய பிரச்சாரத்தை மேற்கொண்டவர். எட்டாயிரம் சிங்களப் பெண்களுக்கு டாக்டர் ஷாபி சிசேரியன் செய்தார் என பிரச்சாரப்படுத்தப்பட்டது. இன்று எந்தவிதமான குற்றமற்றவர் என்று டாக்டர் ஷாபி வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சன்ன ஜயசுமனவிடம் தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக றஊப் மௌலவி முறையிட்டுள்ளார். இதிலே பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தியதன் மூலம் றஊப் மௌலவியே அம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார். எந்த மதக் கொள்கைகள், கோட்பாட்டிற்கும் பாதகமாக அல்லது திரிவு படுத்திய கருத்துக்களை யாராவது கூறும் போது அந்த மத அமைப்புக்கள் அதற்கான தீர்ப்பினையும், மறுப்பினையும் கண்டனத்தையும் வெளியிடுவது யதார்த்தமானதாகும். பௌத்த மதத்தின் இலட்சனையான தர்ம சக்கரத்தின் வடிவில் ஆடை அணிந்திருந்த மஹியங்கனையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக கடந்த வருடம் சட்டநடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டதும் இந்த அடிப்படையிலேயே.

பின்னர் தர்ம சக்கரமில்லை கப்பலின் சுக்காண்ட படம் என்பதை அறிந்து அப் பெண் விடுவிக்கப்பட்டார். அது தர்ம சக்கரமில்லை, சுக்காண்ட படம்தான் என்பதை கண்டு பிடிக்க இலங்கை பொலிஸுக்கு 03 மாதம் எடுத்தது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் வளாகத்தினுள் பாதணியுடன் பாதுகாப்பு படையினர் சென்றதால் அதற்காக கிளர்ந்தெழுந்தது இந்து அமைப்புக்கள். இப்படி மதம் சார்ந்த விழுமியங்கள், கொள்கைகள், கோட்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் போது அது சார்ந்த அமைப்புக்கள் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதை அடிப்படை உரிமை மீறல் எனக் கொள்ள முடியாது. யாரும் எந்த மார்க்கத்தையும், கொள்கைகளையும் பின்பற்றலாம். ஆனால் பெரும்பாண்மை மக்கள் பின்பற்றி வாழும் நம்பிக்கை கோட்பாட்டில் களங்கத்தை ஏற்படுத்துவதை எந்த மதமும் சகித்துக் கொள்ளாது. அந்த வகையில் ஜம்இய்யதுல் உலமா இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக பசியாலை றிழ்வான் மாஸ்டர், ஹாதியானிகள், பாயில்வானிசம் போன்றவற்றுக் கெதிராக விழிப்புணர்வுக் கருத்தரங்குகiளையும், தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளது. அந்த வரிசையில் அப்துல் றஊப் மௌலவியும் அடங்குவார்.

இஸ்லாமிய கொள்கையை தனது மனோ இச்சைப்படி திரிவுபடுத்தி அதன் தனித்துவத்தை மாசுபடுத்தி தவறான விளக்கம் கொடுப்பவர்கள் அல்லது இஸ்லாத்திலுள்ள ஒரு அடிப்படையான வணக்க வழிபாட்டினை மறுப்பவர்கள் அம் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள். அவர்களது செயல் ‘றித்தத்தை’ உண்டு பண்ணிவிடும். 1995ம் ஆண்டு காலப்பகுதியில் மர்ஹூம் ஆர்ஆ. அஷ்ரப் அவர்களை தீகவாபியவில் மலர் தட்டு ஏந்தி வழிபட்ட செயல் ‘றித்தத்தை’ ஏற்படுத்தி விட்டதாக அப்போதைய ஜம்இய்யத்துல் உலமா பத்வா வெளியிட்டு அவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஜம்இய்யத்துல் உலமா அமைச்சர் என்றும் பார்க்கவில்லை தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தில் கொலைக்கு கொலை, விபச்சாரத்திற்கு 100 கசையடி அல்லது கல்லெறிந்து கொல்லுதல், களவிற்கு கை வெட்டுதல், மதுபானம் அவதூறு போன்றவற்றிற்கு கசையடி என்பது போல ‘முர்த்தத்’ மதமாறினால் மரண தண்டனை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது ஜம்இய்யத்துல் உலமாவின் தீர்ப்பு அல்ல. மாற்றமாக இது இஸ்லாத்தின் தீர்ப்பு. இத்தீர்வை ஒரு தனி மனிதனோ, ஒரு குழுவோ, ஒரு நிறுவனமோ கையிலெடுக்க முடியாது. 100மூ இஸ்லாமிய ஆட்சியும் ஷரீஆ சட்டமும் நடைபெறும் பூமியில் மட்டுமே இது நடைமுறை சாத்தியம். இதனை பிழையான கண்ணோட்டத்தில் இன்று ஏனைய மதத்தினருக்கு விளங்கப்படுத்தப்பட்டு இஸ்லாத்தின்பாலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்பாலும் வீணான களங்கம் ஏற்படுத்தப் படுகின்றது.

இஸ்லாத்தை விட்டு சென்றவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்ற இஸ்லாமியக் கோட்பாடு றஊப் மௌலவிட ஆட்களுக்கு சங்கடமாக இருக்கிறது போல இருக்கு. இது மாத்திரம் இஸ்லாமியக் கோட்பாடில்லை. கொலை செய்தவருக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிக்காதவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை. விபச்சாரம் செய்தவருக்கு 100கசையடி அல்லது கல்லறிந்து கொள்ளப்பட வேண்டும். களவு செய்தவருக்கு கை வெட்டுதல். மதுபானம், அவதூறு என்பனவற்றுக்கு கசையடி. இதிலே முர்த்ததுக்கு மரண தன்டனை என்ற கோட்பாட்டை றஊப் மௌலவியின் ஆட்கள் எதிர்ப்பதை அனுமதித்தால் நாளைக்கு திருடர்கள் திருடினால் கை வெட்டபட வேண்டும் என்ற கோட்பாட்டை திருடர்கள் எதிர்ப்பார்கள். விபச்சாரிகள் கல்லெறிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை விபச்சாரிகள் எதிர்ப்பார்கள்.

இப்படி குற்றங்களுக்கு தண்டனை சொல்லப்பட்டுள்ளது என்பதற்காக தனிநபர்கள் ஒருபோதும் கையிலெடுக்க முடியாது. நூறுவீதம் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் இடங்களில் அவ் அரசினாலேயே நிறைவேற்றப்பட வேண்டும். முர்த்தத் கொல்லப்பட வேண்டுமென்ற விடயத்தின் பாரதூரத்தை விளக்குவதற்காகவே தண்டனை சுட்டிக்காட்டப்படுகின்றது. இலங்கையிலே இதற்கு தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை. அதே போல் அரபு நாடுகளில் இதற்கு தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை. றசூல் (ஸல்) அவர்களின் காலத்திலேயும் இதற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக எந்த சம்பவமும் இல்லை.

43வருடமாக அமைதியாக இருந்த றஊப் மௌலவி தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பாதுகாப்பு வேண்டும் என்று பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் முறையிட்டிருப்பது வியப்பைத் தருகின்றது. அப்படியொரு ஆபத்து அவருக்கு இருக்கிறதா? சல்மான் றுஸ்தியின் தலையைக் கொண்டு வந்தால் பரிசாக 100கோடி ரூபாய் தருவோம் என்று ஒரு அமைப்பு பிரகடனப்படுத்தி இருந்தது. அவ்வாறு உலகில் சிலருடைய தலைகளுக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் றஊப் மௌலவிக்கு யாரும் அவ்வாறு பரிசுத் தொகையை அறிவிக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கிய வம்பன் சஹ்ரான் கூட றஊப் மௌலவியின் உயிருக்கு உலை வைக்க எண்ணவில்லை. 03 கிருஸ்தவ தேவாலயங்கள், 03 நட்சத்திர ஹோட்டல் என மொத்தம் 08 இடங்களுக்கு மனிதக் குண்டுகளை அனுப்பிய சஹ்ரானுக்கு, றஊப் மௌலவிக்கு மனிதக் குண்டுடை அனுப்புவது ஒரு விடயமாக இருந்திருக்காது. பத்தோடு பதினொன்றாக அனுப்பியிருப்பான். அந்த வம்பன் சஹ்ரானுடைய குறுக்கு மூளைக்குக் கூட இதனை செய்ய வேண்டுமென்று தோன்றவில்லை. அல்ஹம்துலில்லாஹ். றஊப் மௌலவியை கருத்தியலினாலேயே வெல்ல வேண்டும் என்று நினைத்தான். ஏன் என்றால் சஹ்ரான் றஊப் மௌலவியோடு முட்டி மோதித்தான் இறுதியாக ஊரை விட்டு தலைமறைவாகினான்.

எனவே றஊப் மௌலவி திடீரென தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது மேலும் ஒரு பிரச்சனையை உருவாக்க அரசாங்கத்தை தூண்டு வதற்கான ஒரு சதியாகவே பார்க்க வேண்டும். இந்த நடவடிக்கையெல்லாம் இறுதியில் தனக்கு வினையாகவரும் என்பதை றஊப் மௌலவி உணர்ந்து செயற்பட வேண்டும். புலிகளை அழிக்கும் வரை முஸ்லிம்கள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாக இருந்தார்கள். 2009ம் ஆண்டு புலிகள் அழிக்கப்பட்ட உடனே முஸ்லிம்கள் மீது கைவைக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களை அழிக்கும் வரை றஊப் மௌலவியை அரச செல்லப்பிள்ளையாக வைத்திருப்பார்கள். முஸ்லிம்களின் பலத்தை அழித்த பின் றஊப் மௌலவியை கந்தல் பார்க்கத் தொடங்கி விடுவார்கள். சிங்களப் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் கடைகளை சூறையாடும் போது றஊப் மௌலவி யுடைய ஆட்களுடைய கடை முஸ்லிம்களுடைய கடை என பாகுபாடு பார்க்காமல் சூறையாடுவார்கள் என்பதை றஊப் மௌலவி உணரவேண்டும்.

ஜம்இய்யதுல்; உலமாவினால் ‘பத்வா’ வாபஸ் வாங்கப்படாவிட்டால் ஞானசார ஹாமதுரு ‘திலாவத்’ எனும் வாள் கொண்டு பத்வாவை கிழித்தெறிவார் என்று றஊப் மௌலவியின் ஆட்கள் சமூக வலைத்தளத்தில் எழுதுகின்றார்கள்.

ஜம்இய்யதுல் உலமா பத்வாவை வாபஸ் வாங்காவிட்டால் ஞானசார ஹாமதுருவினால் ‘திலாவத்’ எனும் வாள் கொண்டு பத்வாவை பலாத்காரமாக வாபஸ் வாங்க வைக்க முடியும் என்று கருத முடியாது. அவ்வாறு பலாத்காரமாக பத்வா வாபஸ் வாங்கப்பட்டாலும் அது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தாக்கத்தையும் செலுத்தாது. றஊப் மௌலவியின் ஆட்கள் எதிர்பார்கின்ற சமூக விடுதலை கிடைக்காது. ஏற்கனவே ஒரு சமாதானம் ஏற்பட்டு றஊப் மௌலவி மெத்தைப் பள்ளில் ஜும்ஆ தொழுததுடன் பயானும் செய்தார் அல்லவா. அப்படி இருந்த சுமூக நிலை பின்னர் றஊப் மௌலவிதான் குளப்பினார். மீண்டும் அவ்வாறான குறைந்த பட்ச நிபந்தனைகளோடு றஊப் மௌலவி சமாதான நிலைமைக்கு வந்து மெத்தைப் பள்யிலே ஜும்ஆ தொழுவதுடன் பயானும் செய்கின்ற நிலைமை வந்தால் மாத்திரமே றஊப் மௌலவியின் ஆட்கள் எதிர்பார்க்கின்ற சமூக விடுதலை கிடைக்கும். இதைவிடடுவிட்டு ஞானசார ஹாமதுருவினால் பலாத்காரமாக பத்வா கிழிக்கப்பட்டால் எந்தவொரு பிரயோசனமுமில்லை. றஊப் மௌலவியின் ஆதரவாளர் ஒருவர் இந்தப் பக்கத்திலே பெண் எடுப்பதற்கு மீண்டும் ஞானசார ஹாமதுருவோடு வரவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு திருமணத்திற்கும் ஞானசார ஹாமதுரு ‘திலாவத்’ என்னும் வாளோடு வருவது சாத்தியமில்லை. உதாரணமாக பயில்வானுக்கு என்ன நடந்தது என்பதை யாவரும் அறிவார்கள். பயில்வானுக்கு ‘பத்வா’ வழங்கப்பட்டு, பின்னர் வாபஸ் வாங்கப்பட்டது. ‘பத்வா’ வாபஸ் வாங்கப்பட்டதனால் முஸ்லிம்கள் மத்தியில் பயில்வான் சம்பந்தப்பட்ட பார்வையில் எத்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்தும் ‘முர்த்தத்’தாகவே அவர்களை நோக்கினார்கள்.

‘முர்த்தத்’ என்று றஊப் மௌலவியின் ஆட்களை அழைப்பதானது, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தினால் அவர்கள் தங்களை வேறு பெயர் கொண்டு அழைக்கலாம். உதாரணமாக ‘றஊப் மௌலவிசம்’ என்ற பெயரை தங்கள் சமூகத்திற்கு சூட்டிக் கொள்ளலாம் அல்லது வேறு எந்தப் பெயரையும் சூட்டிக் கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்கள் என்று மட்டும் அழைக்க முடியாது.

என்னுடைய கட்டுரையின் ஆரம்பத்தில் றஊப் மௌலவின் 07 கூற்றுக்கு எதிராக பத்வா வழங்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தேன். இடைக் காலத்தில் றஊப் மௌலவி பத்வா வழங்குவதற்கு காரணமான தனது 06கூற்றுக்களை பகிரங்கமாக பேசுவதைத் தவிர்த்தார். ‘எல்லாம் அவனே’ என்ற கூற்றை மாத்திரமே பிரச்சாரம் செய்து வந்தார். மற்ற 06 கூற்றுக்கழும் பிழைஎன்று உணர்ந்து தான் அக் கூற்றுக்களை பேசுவதைத் தவிர்த்தாரா என்பதை றஊப் மௌலவி பகிரங்கப்படுத்த வேண்டும். அந்த 06 கூற்றுக்களும் பிழையென்று உணர்ந்திருந்தால் 07வது கூற்றான ‘எல்லாம் அவனே’ என்ற கூற்றையும் கைவிலாம் அல்லது பகிரங்கமாகப் பேசுவதைத் தவிர்த்து முஸ்லிம்களோடு சேர்ந்து வாழலாம். தற்போது றஊப் மௌலவிக்கு வயதாகி விட்டது. இன்னும் வாழப்போகும் காலம் கொஞ்சமே. எனவே றஊப் மௌலவிக்காக இல்லாவிட்டாலும் றஊப் மௌலவியைப் பின்பற்றும் அடுத்த தலைமுறைக்காவது அவர்கள் விரும்புகின்ற விடுதலை கிடைப்பதற்கு றஊப் மௌலவி விட்டுக் கொடுப்புக்களைச் செய்து முஸ்லிம்களோடு சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

சஹ்ரான் அந்நிய சக்திகளின் கைக்கூலியாக மாறி முஸ்லிம் சமூகத்தின் அழிவுக்கு காரணமானான். ஆனால் றஊப் மௌலவி அவருடைய அறிவும், அனுபவத்தின் அடிப்படையிலும் அந்நிய சக்திகளின் கைக்கூலியாக மாறி முஸ்லிம் சமூகத்தின் அழிவுக்கு காரணமாகமாட்டார் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும்.

ப்ரியத்துடன்

  • மர்சூக் அகமட் லெப்பை
    17.01.2022
  • முகப்புத்தகப் பதிவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s