13வது திருத்தத்தை நிபந்தனையுடன் அமுல்படுத்துவதா? அல்லது தலைவரின் சரணாகதி அரசியலா ?

யாழ்ப்பாணம்: அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று (02.11.2021) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற இன்றைய ஆட்சியாளர்களின் கோட்பாட்டை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியானது இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து பற்றி எச்சரித்ததுடன், அதனை திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்தனர். இது வரவேற்கத்தக்க விடையமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சி கலந்துகொள்ளாத நிலையில், ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இன்னும் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகின்றது.

இங்கே முதலில் நாங்கள் கவனிக்க வேண்டிய விடையம் என்னவென்றால், தமிழ் கட்சிகளுக்கிடையிலும், தமிழ் தலைவர்களுக்கிடையிலும் என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், இறுதியில் தங்களது சமூக விடையங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தலைவர் என்பதற்காக ஒரு தனி மனிதனின் தலையில் சுமத்தாமல் அல்லது தனி ஒரு மனிதனால் சர்வாதிகார போக்கில் செயல்படாமல் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். இதனால் இவர்களது செயல்பாடுகள் தோல்வியடைகின்றபோது அது தலைவரின் தோல்வியாக கருதப்படுவதில்லை.

ஆனால் முஸ்லிம்களின் விவகாரம் அப்படியல்ல. முஸ்லிம் அரசியலில் ஏனையவர்கள் தலைவராக வளர்ந்துவிடுவார்களோ என்ற அச்சத்தினால், தலைவர் ஒருவர் மட்டுமே அனைத்து விடையங்களிலும் தனி ஒரு மனிதனாக தனது அரசியலை முன்னெடுக்கின்றார். இதில் தோல்வியடைகின்றபோது தலைவர் பலயீனமானவராக பார்க்கப்படுகின்றது.

 

நேற்று யாழ்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் மக்கள் சார்பாக பல தலைவர்கள் அமர்ந்திருக்கையில், முஸ்லிம் மக்கள் சார்பாக வழமைபோன்று ஒரே ஒருவர் மாத்திரம் அமர்ந்திருந்தார். குறிப்பாக பிரச்சினைக்குரிய வட-கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவரேனும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இது ஆரோக்கியமானதல்ல மாறாக முஸ்லிம்களின் அரசியலை குழிதோண்டி புதைக்கும் செயல்பாடாகும்.  

 

அவைகள் ஒருபுறமிருக்க, பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வலியுறுத்தும் தலைவர் ரவுப் ஹக்கீமின் கோரிக்கையானது எந்த அடிப்படையிலானது ? அவ்வாறு அமுல்படுத்துவதனால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் சாதகம் பற்றி தலைவரால் விபரிக்கப்பட்டதா ? 

 

அவ்வாறு முழுமையாக அமுல்படுத்தப்படும் பட்சத்தில் வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதா ? அதற்காக ஏதாவது நிபந்தனை விதிக்கப்பட்டதா ? ஆகக்குறைந்தது கல்முனை பிரச்சினைக்கே தீர்வினை காணமுடியாத நிலையில், ஏனைய பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது பற்றி தலைவர் வடகிழக்கு முஸ்லிம் மக்களுக்கு விபரிப்பாரா ?  

 

தமிழர்களுக்கு அதிகபட்ச அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர்களது நீண்டகால போராட்டத்துக்கும், தியாகத்துக்கும் அது ஈடாகாது.  

 

ஆனால் இதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றித்தான் எமது தலைவர்களிடம் கேட்கிறோம்.  இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்கும் உரிமை வழங்கப்படும் என்று தமிழ் தரப்பு நீண்டகாலமாக கூறிவருகிறது. முஸ்லிம்களின் உரிமையினை அங்கீகரித்து 1988 இல் முஸ்லிம் தரப்போடு புலிகள் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தனர்.  

 

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையை இதயசுத்தியோடு வரவேற்கிறோம். ஆனால் வெளிப்படைத்தன்மை பேணப்படல் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த இருபது வருடங்களில் ஏராளமான விடையங்களில் முஸ்லிம் தலைவர்களினால் முஸ்லிம் மக்கள் ஏமாந்துள்ளார்கள் என்பதனால் உண்டான முன்னெச்சரிக்கையே இதுவாகும். 

 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s