ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணி.நான்கு முஸ்லிம் உறுப்பினர்களின் பரிதாபமான நிலை ? இது யாருக்காக ?

ஜனாதிபதி அவர்கள் கடந்த 10.10.2021 அன்று ருவன்வெலிசாயவுக்கு சென்றபோது “ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதாக கூறினீர்களே அதனை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளோம்” என்று இளம் பௌத்த பிக்கு ஒருவர் கூறியதாகவும், இந்த வருடத்துக்குள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றும், அதுபோல் புதிய அரசமைப்பு ஒன்றை அடுத்த வருடம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும், மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்குவேன் என்றும் கடந்த11.10.2021 அன்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

 

ஜனாதிபதியின் அன்றைய அறிவிப்புக்கு அமைவாக கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர்கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று 26.10.2021 திகதிய விசேட வர்த்தமானி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நாட்டில் என்றுமில்லாதவாறு பொருட்களின் விலை அதிகரிப்பினால் இனவாதத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமானது இன்று சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்துள்ளதுடன், இன்றைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு உழைத்த தென்னிலங்கை இனவாதிகள் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

தேர்தல் ஒன்று வருமானால் தாங்கள் தோல்வியடைந்துவிடுவோம் என்று அச்சப்படுகின்ற நிலையில், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு பதிலாக மீண்டும் இனவாதிகளை திருப்திப்படுத்தி சிங்கள மக்களை உசுப்பேற்றிய பின்பு தேர்தல் ஒன்றுக்கு செல்லும் நோக்கில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற மந்திரத்தை ஆட்சியாளர்கள் கையிலெடுத்துள்ளனர்.

 

இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்பு ஒற்றுமையாக இருந்த சிங்கள முஸ்லிம் மக்களை பிரிப்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோத போக்கினை விதைத்து முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை தோற்றுவித்த பௌத்த பிக்குவை இந்த செயலணிக்கு தலைவராக நியமித்ததன் மூலம் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தியதுடன், இதில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களை நியமித்து முஸ்லிம்களையும், சர்வதேசத்தையும்  ஏமாற்ற எண்ணியுள்ளனர். 

 

இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்பு “கிழக்கில் தொல்லியல் இடங்களை காப்பதற்கான செயலணி” உட்பட ஜனாதிபதியினால் பல செயலணிகளும், குழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தும் அதில் எந்தவொரு முஸ்லிமும் உள்வாங்கப்படாத நிலையில், சர்ச்சைக்குரிய இந்த செயலணியில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதுதான் பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.  

 

எமது நாட்டு முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் உயிருக்கு பயந்த கோழைகள் அல்லது பிற்போக்குவாதிகள். அத்துடன் பதவி, பணம், அதிகாரங்களுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்து எந்தவொரு இழிவான செயலுக்கும் செல்லக்கூடியவர்கள். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே எமது அரசியல் பிரதிநிதிகளினதும், தலைவர்களினதும் கடந்தகால செயல்பாடுகள் உள்ளன.  

 

ஞானசார தேரர் ஒரு பௌத்த பிக்கு என்பதற்கு அப்பால் ஓர் ரௌடி அல்லது காடையன் அல்லது தெரு சண்டியன் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக செயல்பட்டுவருகின்ற நிலையில், எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைமையும், அல்லது பிரதிநிதிகளும் அவருக்கு எதிராக பெயரை குறிப்பிட்டு அழுத்தம் திருத்தமாக கண்டித்ததில்லை. மாறாக அவரை தாஜா பண்ணும் விதமாக “சங்கைக்குரிய” என்ற சொல்லை அடிக்கடி பாவித்தவாறு கண்டித்து முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்தியவாறு அறிக்கை விட்டனர்.  

 

தேர்தல் மேடைகளில் வீர முழக்கம் பேசுகின்ற முஸ்லிம்களின் தலைவர்களே இவ்வாறு ஞானசாரவுக்கு பயப்படுகின்ற நிலையில், இங்கே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நான்கு அப்பாவி முஸ்லிம் உறுப்பினர்களும் துணிச்சலுடன் சமூகத்தின் பக்கம் நின்று ஞானசார தேரரை எதிர்த்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

 

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணிக்கு தன்னை தலைவராக நியமித்தமைக்கு மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள ஞானசார தேரர் அவர்கள் சிங்கள மக்களுக்கு அவர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் தான் எதை விரும்புகின்றாரோ அதனை அடைவதற்கு முயற்சிப்பார். இறுதியில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களின் சம்மதத்துடனேயே நாங்கள் இதனை நிறைவேற்றி உள்ளோம் என்று சர்வதேசத்தை நம்பவைக்கும் அறிக்கைகளை விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s