பண்டோரா பேப்பர்ஸில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் பெயர்- இலங்கையில் புதிய சர்ச்சை

உலகிலுள்ள அரசத் தலைவர்கள் உள்ளிட்ட பலரது ரகசிய சொத்துக்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம், இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிருபமா

இலங்கையின் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் குறித்த, தகவல்களும் இந்த ஆவணத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளளது.

திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகிய தம்பதிகள் தொடர்பிலான ரகசிய தகவல்களே, இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் குடும்ப உறுப்பினராவார்.

நிருபமா ராஜபக்ஷ, பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன் என்ற தமிழரை திருமணம் செய்துள்ளார்.

இந்த இருவர் தொடர்பிலான தகவல்கள், தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியான 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நீர்வழங்கல் பிரதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

அமெரிக்கா, சேமோவா, பிரித்தானியாவிற்கு சொந்தமான விர்ஜின் தீவு மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் 8 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளதாக இந்த ரகசிய ஆவணங்களின் ஊடாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிசெகுசு வீடுகளை கொள்வனவு செய்யும் வகையில் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதற்காக பிரித்தானியாவின் லண்டன் நகரிலும், ஆஸ்திரேலியாவின் சிட்டி நகரிலும் திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் அலுவலகங்களை நடத்திச் சென்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனையை வழங்கும் சேவைகள், திருக்குமார் நடேசனுக்கு சொந்தமான நிறுவனமொன்றின்; ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் இந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு காலப் பகுதியில் திருக்குமார் நடேசன் மீது நிதி சலவை குற்றச்சாட்டும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயத்துடன், தற்போதைய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் தொடர்புப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு பசுபிக் கமாடிடிஸ் நிறுவனத்தின் ஊடாக, 31 ஓவியங்கள் மற்றும் வேறு தெற்காசிய கலைப்படைப்புக்கள் வரிகளை செலுத்தாது ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தனக்கு 160 மில்லியன் டாலர் சொத்து காணப்படுகின்றமைக்கான ஆவணங்களை, திருக்குமார் நடேசன், தனது ஆலோசகருக்கு 2011ம் ஆண்டு காலப் பகுதியில் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்ற விடயமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை பெற்றுக்கொள்ள திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகியோரை தொடர்புக் கொண்ட ஐ.சி.ஐ.ஜேக்கு, அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.

எதிர்கட்சி எதிர்ப்பு

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் கூறப்படுகின்ற விடயம், உண்மையாயின், அது பாரிய மோசடி என்பதுடன், அது வரலாற்று ரீதியிலான குற்றம் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைத்து நபர்களும், ஒரே தடவையில் வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.

அத்துடன், இந்த மோசடியானது, இலங்கைக்கு கருப்பு புள்ளி என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகையை விடவும், அதிகளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை இந்த ஆவணத்தின் ஊடாக தெரிகின்றது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.

குடும்ப உறுப்பினரின் பதில்

உறவு முறை வேறு, அரசியல் வேறு என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும், நிருபமா ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நமல் ராஜபக்ச

திருமணம் செய்துள்ள திருக்குமார் நடேசன் ஊடாக கிடைக்கின்ற சொத்துக்கள் குறித்து தமக்கு எதுவும் செய்ய முடியாது என அவர் கூறுகின்றார்.

திருக்குமார் நடேசனின் பதில்

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் தனது பெயரும், மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடி சுயாதீன விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

தாமதமின்றி சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்து, தனது மற்றும் தனது மனைவி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை இல்லாது செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பதில்

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி டபிள்யூ.கே.டி.விஜேரத்னவிற்கு ஜனாதிபதி சட்டப் பிரிவு பணிப்பாளரின் கையெழுத்துடன், அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரஜை அல்லது பிரஜைகள் அதிகளவில் நிதி முதலீடு செய்துள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதென ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து உடனடி விசாரணைகளை நடத்தி, இன்று (அக்டோபர் 6) முதல் ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBC

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s