மும்பை: போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திரைப்பட உலகில் மீண்டும் போதை மருந்துகள் கலாசாரம் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை எந்த பிரபல நட்சத்திரமும் போதை மருந்து விவகார்ததில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனாலும் பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரமாக அறியப்படும் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் பெயர் சமீபத்திய சிக்கலில் தொடர்புபடுத்தப்பட்டு அவர் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.
கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையினர் மும்பையில் ஒரு சொகுசு கப்பலில் சோதனை நடத்தியது. அப்போது அதில் இருந்த ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை அதிகாரிகள் பிடித்தனர். அதைத்தொடர்ந்து இதில் ஆரியன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஒரு நாள் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
கப்பலில் போதைப்பொருள் இருந்ததாகவும் அதை பறிமுதல் செய்ததாகவும் கூறிய அதிகாரிகள், சம்பவ நேரத்தில் ஆர்யன் தரப்பில் இருந்து போதைப்பொருளை பறிமுதல் செய்யவில்லை என்றும் கூறினர். ஆனால், அதற்காக அவரை இந்த வழக்கில் இருந்து ஒதுக்கிவிட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பிபிசி மராத்தி செய்தியாளர் மயங்க் பாகவத், ஆர்யன் கானின் வழக்கறிஞர் பேசியபோது, அவரும் ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.
மும்பை ‘குரூஸ் பார்ட்டி’ வழக்கில் ஆர்யன் கான் ஜாமீனில் தன்னை விடுதலை செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், ஆர்யன் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்ற சில உரையாடல்கள் அவருக்கும் போதைப்பொருள் பயன்படுத்தும் கும்பலுக்கும் இடையிலான தொடர்புக்கு ஆதாரம் என்று தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை கூறுகிறது. ஆனால், வெளிநாட்டில் படித்தவரான ஆர்யன் எந்த வகையிலும் போதைப்பொருள் பயன்பாடு அல்லது விநியோகத்தில் தொடர்பு கொண்டவர் அல்ல என்று கூறுகிறார். இந்த விவகாரத்தில் ஆர்யனின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு உத்தரவிடப்படும்வரை அவர் தொடர்புடைய எந்தவொரு வாட்ஸ் அப் செயலி உரையாடல்களும் வெளியிடப்படக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்றும் ஆர்யனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, ஆர்யன் கைதுசெய்யப்பட்டபோது, அவருடன் இருந்த அர்பாஸ், மும்முன் தமேச்சா ,ஆர்யன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரது விசாரணை காவலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்யனுக்கு முன் பாலிவுட்டை உலுக்கிய போதைப்பொருட்கள் சர்ச்சை
திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணை, போதைப்பொருளின் இருண்ட உலகத்தை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அந்த வழக்கில், முதலில் ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் பின்னர் ரியாவும் அடுத்தடுத்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதே வழக்கில் போதைப்பொருள் தடுப்புத்துறை மேலும் ஆறு பேரை கைது செய்தது. சிபிஐ விசாரணையில் உள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், ரியா சக்ரவர்த்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுஷாந்த் ராஜ்புத் மரணம் அடைந்த சில மாதங்களுக்கு என்சிபியின் விசாரணையுடன், திரைப்படத் துறையிலும் இந்த விஷயத்தைப் பற்றி நிறைய விவாதங்கள் நடந்தன.
நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி எம்.பி எழுப்பிய குரல்
மாநிலங்களவையில் பேசிய முன்னாள் திரைப்பட நடிகையான ஜெயா பச்சன், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களை களங்கப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி ரவி கிஷண் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் 90சதவீதம் இருப்பதாக திரைப்பட நடிகை ஒருவரே கூறுவதை பார்த்து நான் வெட்கப்படுகிறேன்,,” என்று பேசினார்.
மறுபுறம் கங்கனா ரனாவத்தின் சர்ச்சை கருத்துக்கு எதிர்வினையாற்றிய நடிகை ரவீனா டாண்டன், பொதுவான கருத்தாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையதல்ல என்று கூறினார்.

– BBC