2000.09.16 அன்று சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு சோவியத் தயாரிப்பான எம்.ஐ 17 ரக உலங்கு வானூர்தியில் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து தலைவர் அஸ்ரப் மற்றும் விமான ஓட்டிகள் உட்பட 13 பேர்களுடன் அம்பாறையை நோக்கி பயணித்தனர்.
தாங்கள் 1500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருப்பதாகவும், காலநிலை சீராக உள்ளதாகவும் இன்னும் 40 நிமிடங்களில் அம்பாறையை சென்றடைந்துவிடலாம் என்றும் 9.22 மணிக்கு விமானியினால் கட்டுப்பட்டுத் தளத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்பு 9.25 மணிக்கு விமான கட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. அம்பாறையில் உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட வேண்டிய நேரம் தாண்டியும் அங்கு தரையிரக்கப்படாத நிலையில், விமானப்படை அதிகாரிகள் அம்பாறை உட்பட அனைத்து இடங்களிலும் விசாரித்தனர். ஆனால் எங்கேயும் விமானம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இறுதியில் கேகாலை பொலிஸ் நிலையத்தில் விசாரித்தபோதுதான் அரநாயக்க பகுதியில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து 20 பேர்கொண்ட விமானப்படைகளுடன் இன்னுமொரு உலங்கு வானூர்தி தேடுதலுக்காக அப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டது.
பின்பு அரநாயக்கா பகுதியின் “ஊரகந்த” என்னும் மலை பகுதிக்கு மேலால் பறந்துகொண்டிருக்கும்போது 9.30மணியளவில் உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியதுடன் அதன் தீப்பிழம்புகள் கரடுமுரடான மலைப்பாங்கான காட்டுப் பகுதிக்குள் விழுந்து அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தன.
அப்பிரதேச கிராமவாசிகள் கூறுகையில் பலத்த சத்தத்துடன் வானில் விமானம் வெடித்தது. பின்பு ஐந்துமுறை வெடிக்கும் சத்தம் கேட்டதுடன், தீப்பிழம்புகளுடன் கீழே விழுவதைக் கண்டோம் என்று தெரிவித்தனர்.
இது ஒரு விபத்து அல்ல. திட்டமிட்ட சதி. அமைச்சருடன் செல்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதனால் எவரும் சோதனைக்குட்படுத்தப்படவுமில்லை, அவர்கள் பற்றிய விபரங்களை விமானப்படையினர் பெற்றிருக்கவுமில்லை.
தலைவர் அம்பாறையை நோக்கி விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான செய்தி நாடு முழுவதும் பரவியது. அதனை எங்களால் நம்ப முடியவில்லை.
அன்றைய சாய்ந்தமருது அமைப்பாளர் புர்கான் அவர்களும், நானும் இன்னும் சிலரும் உடனடியாக ஸ்தலத்தை நோக்கி விரைந்து சென்றோம். பின்பு கொழும்பையடைந்தோம்.
தலைவரின் மரணம் பற்றி விரிவாக விசாரணை செய்யும்பொருட்டு நான்கு பேர்கள் கொண்ட விசாரணை ஆணைக்குழு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களினால் நியமிக்கப்பட்டது.
அதன் பின்பு மறைந்த தலைவரின் வாரிசுகளான இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம், மனைவி பேரியல் அஸ்ரப், அதாஉல்லாஹ் ஆகியோர் பல ஆண்டுகள் அமைச்சர்களாக பதவி வகித்தார்கள். ஆனால் இந்த விசாரணை அறிக்கை மர்மமாகவே உள்ளது. அது பற்றிய உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவுமில்லை, இவர்களும் இது பற்றி அலட்டிக்கொள்ளவுமில்லை.
இன்னும் அது புரியாத புதிராகவே உள்ளது.
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது