போர்க்கள ஆய்வு

ஒரு நாட்டை கைப்பற்றுவதென்றால், அந்நாட்டின் இராணுவ கட்டளை மையங்கள், கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை முதலில் கைப்பற்ற வேண்டும். அல்லது செயலிழக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஏனைய பிரதேசங்கள் இலகுவாக வீழ்ந்துவிடும்.

ஆனால் தலிபான்களின் போர் வியூகம் அவ்வாறு இருக்கவில்லை. அதாவது முதலில் ஒவ்வொரு கிராமம் கிராமமாக கைப்பற்றிய பின்புதான் மாவட்டங்களினதும் மாகாணங்களினதும் தலைநகர்களை கைப்பற்றி அகலக்கால் விரித்த நிலையில், இறுதியாக ஆப்கானின் தலைநகரை கைப்பற்றினார்கள்.

இது மிகவும் ஆபத்தான போர் தந்திரோபாயமாகும். இதற்கு பெருமளவில் படை பலம் தேவை. அவ்வாறு பெருமளவில் படை பலம் இருந்தால் மட்டுமே இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட இடங்களை தக்கவைத்துக் கொள்வதன் மூலம் மீண்டும் இராணுவத்தினர் கைப்பற்றிவிடாமல் பாதுகாக்க முடியும். 

ஆனால் ஆப்கான் இராணுவத்தினர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பகுதி எண்ணிக்கையை கொண்ட தலிபான் போராளிகள் தங்களது போராளிகளை நாடு முழுவதும் அகலக்கால் விரித்திருந்தனர். 

அத்துடன் ஆப்கான் இராணுவத்தினர்களிடம் இருந்த அமெரிக்காவின் நவீன போர் தளபாடங்களும், ஆயுதங்களும், போர் விமானங்களும் தலிபான்களிடம் இருக்கவில்லை. அவர்கள் மரபு போர்முறையிலேயே போர் செய்தனர். இதனால் தலிபான்களை இலகுவாக தோற்கடித்திருக்க முடியும்.  

இலங்கை வரலாற்றில் இறுதிப் போருக்கு முன்பு மிக நீண்ட இராணுவ நடவடிக்கையாக “ஜெயசிக்குறு” நடவடிக்கை கருதப்படுகிறது. இது 1997.05.13 தொடக்கம் 1999 இறுதி வரைக்கும் நடைபெற்றது. இது வவுனியா வடக்கே முகமாலை முன்னரங்கிலிருந்து ஆனையிறவு வரைக்குமான A9 நெடுஞ்சாலையை கைப்பற்றுவதே நோக்கமாகும். 

இந்த நடவடிக்கையில் 1998 ஆரம்பத்தில் மாங்குளத்தையும், அதே ஆண்டு டிசம்பரில் ஒட்டுசுட்டானையும், பின்பு 1999 ஒக்டோபர் இறுதியில் A9 நெடுஞ்சாலைக்குக் கிழக்கே உள்ள அம்பலகாமத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றினர். 

இரண்டரை வருடங்கள் நீடித்த இந்த இராணுவ நடவடிக்கையில் வன்னி பெருநில பரப்புக்குள் அகலக்கால் விரித்திருந்த இராணுவத்தினர் “அம்பலகாமம்” வரும் வரைக்கும் புலிகள் காத்திருந்தனர். பின்பு 1999 நவம்பர் முதலாம் திகதி நள்ளிரவு ‘ஓயாத அலைகள் மூன்று’ இராணுவ முறியடிப்பு சமர் புலிகளால் தொடங்கப்பட்டது.

இரண்டரை வருட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் இழந்த இடங்களை மூன்று நாட்களுக்குள் புலிகள் மீண்டும் கைப்பற்றியதுடன், இராணுவத்தினர்களை முகமாலை முன்னரங்கு வரைக்கும் பின்வாங்க செய்தனர். 

புலிகளின் போர் வியூகமும், இராணுவத்தினர்கள் கைப்பற்றிய இடங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு போதிய படை பலம் இல்லாமல் அகலக்கால் விரித்ததுவே இராணுவத்தினரின் இந்த பின்னடைவுக்கு காரணமாகும். .  

அதுபோல் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் நாசிப்படைகள் தொடர் வெற்றிகளை அடைந்தனர். அந்தவகையில் பிரான்சை முழுமையாக கைப்பற்றியதுடன், சோவியத் யூனியனின் முக்கிய நிலப்பரப்புக்களையும் கைப்பற்றினர். 

அத்துடன் நிறுத்தாமல், தொடர்ந்து சோவியத்தின் அகன்ற தேசத்துக்குள் ஊடுருவி பெரும் நிலப்பரப்புக்களை தொடர்ந்து கைப்பற்றி அகலக்கால் விரித்ததன் காரணமாகவே இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஜேர்மன் தோல்வியடைந்தது.

ஆப்கானிலும் தலிபான்கள் அகலக்கால் விரித்திருந்த நிலையில் ஆப்கான் இராணுவத்தினர் மூர்க்கத்துடன் போர் செய்திருந்தால் தாலிபான்களை தோற்கடித்திருக்கலாம். தாலிபான்கள் மூர்க்கத்துடன் இலட்சியத்துக்காக போர் செய்த அதேநேரம், ஆப்கான் இராணுவத்தினர் பணத்துக்காக போர் செய்தனர். பணத்தை விரும்புகின்றவர்களிடம் மூர்க்கமும், ஓர்மமும், இலட்சியமும் இருப்பதில்லை.  

அத்துடன் ஒவ்வொரு கிராமம் கிராமமாக தலிபான்கள் முன்னேறிக்கொண்டு வந்ததுடன், நேட்டோ படையினர் விட்டுச்சென்ற பிரதேசங்களை தாலிபான்கள் கைப்பற்றியதானது ஆப்கான் இராணுவத்தினருக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இருபது வருடங்கள் அமெரிக்காவை முழுமையாக நம்பியிருந்ததனால், தனித்து நின்று போர் புரியும் ஆற்றல் ஆப்கான் படைகளிடமும், அதன் தளபதிகளிடமும் இருக்கவில்லை. 

அத்துடன் ஆப்கான் இராணுவ முகாம்களை தலிபான்கள் சுற்றிவளைத்து தாக்குகின்றபோது உதவிக்கு போர் விமானங்கள் செல்லவில்லை. விமான ஓட்டிகள் விடுமுறைக்காக வெளியே சென்றதும் அவர்கள் ஒவ்வொருவராக இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதே இதற்கு காரணமாகும். 

அவ்வாறு விமானப்படைகளின் உதவி கிடைக்காததன் காரணமாக ஆரம்ப கட்டத்தில் பல ஆப்கான் இராணுவ முகாம்கள் தலிபான்களிடம் வீழ்ந்ததுடன், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அவர்கள் கைப்பற்றினர். 

எனவே ஆபத்தான போர்வியூகத்துடன் முன்னேறிய தலிபான்கள் 652,860 km² நிலப்பரப்பினை அதாவது இலங்கை போன்று பத்து மடங்கு பெரிய நிலப்பரப்பினை கைப்பற்றியதானது போரியல் வரலாற்றில் ஓர் அபூர்வமான வெற்றியாகும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s