ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் காணி அவர்கள் பதவியை துறந்து நாட்டைவிட்டு தப்பிச்சென்றபோது ஏராளமான பண மூட்டைகளை எடுத்துச்சென்றதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

அதாவது ஹெலிக்கொப்டரில் அஸ்ரப் காணி ஏறும்போது மூட்டைகள் ஏற்றப்பட்ட வாகனங்கள் வந்ததாகவும், அந்த மூட்டைகள் அனைத்தையும் ஹெலியில் ஏற்றியபோது ஹெலி நிரம்பியதாகவும், ஏற்றமுடியாத மீதி மூட்டைகளை அங்கேயே விட்டு சென்றதாகவும், அவ்வாறு விட்டுச்சென்ற மூட்டைகளுள் அமெரிக்க நாணய தாள்கள் இருந்ததாகவுமே அந்த செய்திகள் குறிப்பிடுகின்றது.
அவ்வாறென்றால் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ? ஆப்கானிஸ்தான் மிகவும் வறுமையான நாடு. நீண்டகால யுத்தம் காரணமாக தொழிலின்றி அங்குள்ள மக்கள் அன்றாடம் உணவு உண்பதற்கே கஷ்டப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி மூட்டை மூட்டையாக பணத்துடன் தப்பிச்சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாது, ஜனாதிபதி மாளிகை மிகவும் ஆடம்பரமாகவும், அங்குள்ள கதிரைகள், கட்டில்கள் என அனைத்தும் தங்கத்தினால் செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தான் அரசாங்கம் வெளிநாட்டு நன்கொடைகள் மூலமாகவே ஆட்சி நடாத்தி வந்தது. இதில் அமெரிக்கா மட்டும் ஒவ்வொரு வருடமும் 43 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அந்த தொகைக்கு மேலதிகமாக நேட்டோ அங்கத்தவ நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, துருக்கி, கனடா போன்ற இன்னும் பல நாடுகளும், சவூதி அரேபியா, கட்டார், எமிரேட்ஸ் போன்ற அரபு நாடுகளும் வருடாந்தம் ஏராளமான நிதிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்தது.
இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படுகின்ற நிதிகளில் பாரிய ஊழல்கள் நடைபெறுவதாக ஆப்கான் அரசுமீது நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்தது.
தலிபான்களை ஓர் கொடூர பயங்கரவாதிகளாக உலகுக்கு காண்பித்துக்கொண்டு ஆப்கான் அரசுகள் தாராளமாக ஊழலில் ஈடுபட்டுவந்தன.
எனவேதான் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதானது தங்களது நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்ட நேட்டோ நாடுகளுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றதாக மட்டும் கருதக்கூடாது. ஜனநாயகத்தின் பெயரால் போராளிகளை பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்துகொண்டு நீண்டகாலமாக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுவந்த ஊழல்வாதிகளின் ஆட்சியும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கே ஆக்கிரமிப்பாளர்களையும், ஊழல் அரசாங்கத்தையும் விரட்டியதன் மூலம் தலிபான்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை பறித்துள்ளனர்.
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது