ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜம்இய்யத்துல் உலமாவின் கோரிக்கை

உழ்ஹிய்யா குறித்து சபை விசேட அறிவுறுத்தல்

உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் பொருத்தமாக அமைந்தால் அதனை நிறைவேற்றும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் கட்டாயம் கடைபிடிக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இவ்வருடம் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் பொருத்தமாக அமைந்தால் அதனை நிறைவேற்றும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் கட்டாயம் கடைபிடிக்குமாறு ஜம்இய்யா சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.

பிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமைகள் வித்தியாசப்படுவதனால் தத்தமது பிரதேசங்களில் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியுமா என்பதை குறித்த பிரதேச ஜம்இய்யத்துல் உலமா மஸ்ஜித் நிர்வாகம் ஏனைய முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்து பொருத்தமான முடிவொன்றை எடுத்துக் கொள்ளுமாறும் அம்முடிவிற்கு ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

உழ்ஹிய்யாக் கொடுப்பது சிரமம் எனக் காணப்படும் பிரதேசங்களில் உள்ளவர்கள் அதனை நிறைவேற்ற உறுதி கொண்டால் பொருத்தமான வேறு பிரதேசங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

1. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும் தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

2. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும் இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

3. ஓர் ஒட்டகம் அல்லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் மாத்திரமே கூட்டுச்சேர முடியும். ஏழு நபர்கள் இணைந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவதை விட தனித்தனியாக ஒவ்வொருவரும் ஓர் ஆட்டை அல்லது ஒரு மாட்டை அவரவர் வசதிக்கேற்ப உழ்ஹிய்யா கொடுப்பது ஏற்றமானதாகும். இச்சிறப்பினை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் தனது சக்திக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.

4. எப்பிரதேசங்களில் மாடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவது சிரமமாக உள்ளதோ அப்பிரதேசங்களில் ஆடுகளை உழ்ஹிய்யாவாக நிறைவேற்றிக் கொள்ளவும்.

5. பலர் ஒன்றுசேர்ந்து கூட்டாக உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் போது பேணப்பட வேண்டிய ஒழுங்குகள் பற்றிய ஜம்இய்யாவின் வழிகாட்டல் இவ்விணைப்பில் காணப்படுகின்றது. அவற்றை சரிவர பின்பற்றி செயற்படல் வேண்டும்.

6. நம் நாட்டின் சட்டத்தை கவனத்திற் கொண்டு மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

7. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

8. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்தில் கிருமி நாசினிகளைத் தெளித்து சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.

9. சமூக இடைவெளிப் பேணுதல் , முகக்கவசம் அணிதல் போன்ற கொவிட் 19 சம்பந்தமாக அரசாங்கம் வழங்கும் வழிகாட்டல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

10. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.

10. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று உழ்ஹிய்யா நிறைவேற்றுவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்வதோடு, ஏனைய நாட்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளல்.

11. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துகொள்ள வேண்டும்.

பள்ளிவாயல் இமாம்கள் , கதீப்மார்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும் அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s