எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்த நாடுகள், தற்போது அதன் பாதிப்பைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளன. அந்நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெருமளவானோருக்குத் தடுப்பூசி ஏற்றியதனாலேயே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சில நாடுகளால் அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்பட்டாலும், இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் தமது மக்களுக்காகப் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகளும் உள்ளன.
இலங்கைக்குத் தடுப்பூசியைக் கொண்டுவருவது தொடர்பில், கடந்த காலத்தில் நான் விஷேட கவனம் செலுத்தியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன், தனிப்பட்ட முறையில் உரையாடினேன். கடிதத் தொடர்புகள் மூலமும், கோரிக்கை விடுத்திருந்தேன். எமது வெளிநாட்டு அமைச்சின் ஊடாகவும் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடினோம். எமது அதிகாரிகள், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே, இம்முயற்சிகளின் நோக்கமாகும்.
இந்த முயற்சிகளின் பயனாக, ஒவ்வொரு மாதமும் எமக்குத் தேவையான பெருமளவு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.
தற்போது வரையில், 12 இலட்சத்து 64, ஆயிரம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள்,
31 இலட்சம் சைனோஃபாம் தடுப்பூசிகள்,
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் உள்ளடங்களாக, 44 இலட்சத்து 94 ஆயிரம் தடுப்பூசிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன.
தற்போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் மொத்தச் சனத்தொகையில், சுமார் 3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில், 4 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 இலட்சம் சைனோவெக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. அதேபோன்று, இரண்டு மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஓகஸ்ட் மாதமளவில் 5 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 மில்லியன் சைனோவெக் தடுப்பூசிகளும், 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் 3 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 இலட்சம் மக்களுக்கான தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும்.
இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய பெரும் எதிர்பார்ப்புடனேயே, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். எத்தகைய பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட மாட்டாது எனக் கருதப்பட்ட எல்டிடிஈ பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று நாம் பொறுப்பேற்றதைப் போன்று, நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்து நாட்டை விடுவித்து, மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துக்காக, நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்.
நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றேன். எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, நாம் கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. அத்துடன், தற்காலத்தைப் பற்றியும் மிகச்சரியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்வது முக்கியமானதாகும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதே, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
அன்று இந்த நாட்டு மக்கள், மத அடிப்படைவாதம் குறித்து பெரும் அச்சம் கொண்டிருந்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன், எமது நாட்டின் பாதுகாப்புப் பொறிமுறை, பெரிதும் பலவீனப்பட்டிருப்பதை மக்கள் விளங்கிக்கொண்டனர்.
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்கள் காரணமாக, எமது புலனாய்வுத்துறை மிகவும் பலவீனப்பட்டிருந்தது. எமது பாதுகாப்புத்துறை, சர்வதேச மட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது. எமது புனிதஸ்தலங்கள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டிருந்தன. தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பகிரங்கமாக அழிவுக்கு உள்ளாக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்ட பயங்கரவாதம், மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் மீண்டும் உருவாகியிருந்தது. தேசிய பாதுகாப்பு தொடர்பில், நாம் தற்போது பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். பொறுப்புக் கூறவேண்டிய பதவிகளுக்கு, பொருத்தமான அதிகாரிகளை நியமித்துள்ளோம். பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பாதுகாப்புத் துறையினரின் மனநிலையை, நாம் மீண்டும் பலப்படுத்தியுள்ளோம். அன்று பலவீனப்பட்டிருந்த புலனாய்வுத் துறையை, மீண்டும் ஒழுங்கமைத்தோம். கடந்த ஆட்சிக் காலத்தில் மறக்கடிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் திட்டங்களை, மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
நாட்டுக்குப் பெரும் சவாலாக மாறியிருந்த பாதாள உலகக் கோஷ்டிகளை, வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் பிரச்சினையை ஒரே தடவையில் தீர்ப்பது கடினம் என்றபோதும், அதனைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளோம். முழுமையாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
எமது பாரம்பரியம், எமது கலாசாரம், தேசியம் என்பவற்றைப் பற்றி கதைப்பது இழிவாக கருதப்பட்டு வந்த யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கிறோம். அனைத்து இனத்தவர்களும் அனைத்து மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து, அடுத்தவருக்குப் பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.
கடந்த காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த, முஹுது விகாரை, கூரகல, தீகவாபி போன்ற கலாசார, மத மரபுரிமைகளை நாம் பாதுகாத்துள்ளோம். இன்று இந்த நாட்டின் ஒருமைப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதேபோன்று, எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு, இந்த அரசாங்கம் எவருக்கும் இடமளிக்க மாட்டாது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே, எமது மற்றமொரு முக்கிய சவாலாக இருந்தது. இதற்கான சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருக்கிறோம். கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில், நாம் முகங்கொடுத்த முக்கிய சவால்கள், அவற்றை நாம் எதிர்கொண்ட விதம் பற்றி மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
2015ஆம் ஆண்டில் உருவான புதிய அரசாங்கத்திடம் இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கையளிக்கும் போது, எம்மிடம் பலமானதொரு பொருளாதாரம் இருந்தது.
சுமார் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன். ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் நாம் இருந்தோம். நாட்டுக்குப் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்டன. ரூபாயின் பெறுமதி ஸ்திரமான நிலையில் இருந்தது. வெளிநாட்டு இருப்பு பலமானதாக இருந்தது. கடன்சுமை தளர்த்தப்பட்டு இருந்ததுடன், முழு நாடுமே ஒரு தொழில் நிலையமாக மாறி, துரித அபிவிருத்திகள் கண்டுவந்தன.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், இந்த நாட்டில் எந்தவோர் இயற்கை அனர்த்தமும் ஏற்படவில்லை. அக்காலப்பகுதியில், கொரோனா போன்ற உலகளாவிய பிரச்சினையும் இருக்கவில்லை. என்றாலும், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக, எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 2019ஆம் ஆண்டாகும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2.1 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அரசுக் கடன் 7,400 பில்லியன் ரூபாவில் இருந்து 13,000 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துக் காணப்பட்டது. மக்கள் மீதான வரிச்சுமை, இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. ரூபாயின் பெறுமதியில் தளம்பல் ஏற்பட்டு, பொருட்களின் விலையும் அதிகளவு அதிகரித்துக் காணப்பட்டது. ஏற்றுமதி வருமானம் குறைந்து, வெளிநாட்டு இருப்பும் பலவீனமடைந்திருந்தது.