கொழும்பு: இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மானியக் கடனை வழங்க கொரியாவின் எக்ஸிம் (Exim) வங்கியினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோன்ங் (Woonjin Jeong) ஆகியோருக்கிடையில் அது தொடர்பான ஏற்பாடுகளில், இன்று (10) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2020 – 2020 காலப் பகுதியிலான திட்டங்களுக்காக, 0.15% – 0.20% வட்டியுடன் 10 வருட சலுகைக் காலத்துடன் 40 வருடங்களில் செலுத்தும் வகையில் குறித்த கடன் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எக்ஸிம் வங்கியின் (Export Import Bank of Korea-KEximbank) பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF) இலிருந்து குறித்த கடன் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்த, கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கையில் எக்ஸிம் வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகமொன்று நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.