இருபதுக்கு ஆதரவளித்தவர்கள் எதிர்கொள்கின்ற விமர்சனங்களை எவ்வாறு குறைக்கலாம் ?

இருபதாவது திருத்தத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமைக்காக எவ்வாறு விமர்சனங்கள் ஏற்பட்டதோ, அதேபோன்றதொரு விமர்சனம் பிரதமரின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டபோது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திப்பது தவறில்லை. இதுவரையில் அவ்வாறு சந்தித்து எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுத்ததற்கான ஆதாரங்களும் இல்லை. அதனால் மக்களுக்கு இவர்கள்மீது நம்பிக்கையில்லை.  

அப்படியிருந்தும் மக்கள் நலனுக்காக பிரதமரை சந்தித்திருந்தால் பாரதூரமான விமர்சனம் எழுந்திருக்காது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களினால் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டு பல அடக்குமுறைகளும், ஜனநாயகவிரோத செயல்பாடுகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டது கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரை சந்திக்க சென்றவர்கள் அவரின் இப்தார் நிகழ்வினை பக்குவமாக தவிர்த்திருக்கலாம். அவ்வாறு தவிர்த்திருந்தால் பாரதூரமான விமர்சனங்கள் எழுந்திருக்காது. ஆட்சியாளர்கள் தங்களை பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள் என்றும், இந்த இப்தார் நிகழ்வினையும் விளம்பரம் செய்வார்கள் என்றும் முன்கூட்டியே ஊகித்திருக்க வேண்டும்.  

தமிழ் உறுப்பினர்கள் போன்று முஸ்லிம் உறுப்பினர்கள் தமது சமூகத்தின் நலன் கருதி இதயசுத்தியுடன் செயல்படாமல் தங்கள் சுயநலன்களுக்காகவே அரசியல் செய்து வருகின்றார்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

தலைவர் அஷ்ரபின் மரணத்திற்கு பின்பு முஸ்லிம் சமூகத்திற்காக எந்தவொரு அரசியல் சாதனைகளையும் எமது உறுப்பினர்களோ, தலைவர்களோ செய்ததாக வரலாறுகள் இல்லை. மாறாக முஸ்லிம்களை பாதிக்கின்ற சட்டமூலத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்ததன் மூலம் சமூகத்திற்கு துரோகம் செய்த வரலாறுகளே ஏராளம்.  

அந்தவகையில் ஒரு மன்னருக்கு உள்ளது போன்ற அதிகாரமுடைய 18 வது திருத்தத்திற்கு ஆதரவளித்ததுடன், முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கக்கூடிய உள்ளூராட்சிமன்ற திருத்தச்சட்டம், மாகாணசபைகள் திருத்தச்சட்டம், திவிநெகும போன்ற சட்டமூலங்களுக்கு ஆதரவளித்தனர். 

இந்த திருத்தங்கள் அனைத்தும் முஸ்லிம்களை இலக்குவைத்து கொண்டுவரப்பட்டவைகள் என்று நன்றாக தெரிந்திருந்தும், எமது பிரதிநிதிகள் ஆதரவளித்ததன் மூலம் இவர்களை கோடிகள் மூலம் விலைக்கு வாங்கமுடியும் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளனர்.  

அதாவது எமது கைகளைக்கொண்டே எமது கண்களை குத்துகின்ற தந்திரோபாயங்களை சிங்கள ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து அதில் வெற்றிகண்டு வருகின்றனர். 

இருபதாவது திருத்தத்திற்கு எழுந்ததுபோன்ற பாரிய விமர்சனங்கள் குறித்த சட்டமூலங்களுக்கு ஆதரவளித்ததன் காரணமாக அன்று எழவில்லை. தலைவரும், ஏனைய உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து வாக்களித்தமையே இதற்கு காரணமாகும்.

தலைவர்களும், உறுப்பினர்களும் எங்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் என்பதனை புரிந்துகொள்ளாமல், அவர்கள் செய்துவருகின்ற துரோகத்தையும் ஒரு ராஜதந்திரமாக நம்புகின்ற முட்டாள் சமூகமாக நாங்கள் இருக்கும் வரைக்கும் எந்தவொரு அரசியல் விமோசனமும் எங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. 

எனவே முஸ்லிம் பிரதிநிதிகள் குறிப்பிடக்கூடிய எதுவும் செய்ததுமில்லை இனிமேலும் செய்யப்போவதுமில்லை என்ற நபிக்கை முஸ்லிம் மக்களிடம் வலுவாக உள்ளது. அதனால் தலைவர்களும், உறுபினர்களும் ஒவ்வொரு பக்கம் பிரிந்துசெல்லாமல், உங்கள் வர்த்தக அரசியலை அனைவரும் ஒன்றாக சேர்ந்து செய்தால் மட்டுமே அதிகமான விமர்சனங்களை தவிர்க்க முடியும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s