ஸ்டாலினின் வெற்றியின் ரகசியமும், அ.தி.மு.க, சீமானின் தோல்வியும். தமிழக தேர்தல் பெறுபேறுஓர் ஆய்வு

கடந்த 06.04.2021 இல் நடைபெற்று, நேற்று 02.05.2021 வெளியான தமிழ் நாட்டு தேர்தல் பெறுபேறுகளில் தமிழக அரசின் ஆட்சி, மத்திய அரசின் அதிகாரம் மற்றும் பண பலம் ஆகியன இருந்தும் அ.தி.மு.க தோல்வியடைந்துள்ளது.

தமிழக அரசானது மோடியின் பா.ஜ.க வுடன் கூட்டுச்சேர்ந்ததன் காரணமாகவே தோல்வியடைந்துள்ளது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், ஜெயலலிதா போன்றதொரு ஆளுமையினை முதலமைச்சர் எடப்பாடியினால் வழங்கமுடியவில்லை. 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு தங்களது ஆட்சி அதிகாரத்தினை தக்கவைத்துக் கொள்வதற்காக பிரதமர் மோடியின் எடுபிடிகளாகவே தமிழக அரசு செயல்பட்டது. இதனால் பா.ஜ.க எதிர்ப்பாளர்களினதும், முஸ்லிம்களினதும் வாக்குகளை முதலமைச்சர் எடப்பாடியினால் கவரமுடியவில்லை. 

அத்துடன் அ.தி.மு.கவின் பலமான சக்தியாக விளங்கிய தினகரன் தலைமையிலான சிலர் பிரிந்துசென்று “அம்மா முன்னேற்ற கழகம்” என்னும் கட்சி அமைத்து தனியாக களம் இறங்கியதும் அ.தி.மு.கவின் வாக்குவங்கியில் சரிவை ஏற்படுத்தியது. 

தேர்தல் கூட்டணியமைப்பதில் இதர கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பு செய்வதில் பிடிவாதம் காண்பித்ததன் காரணமாக தொகுதி பங்கீட்டில் இழுபறி காணப்பட்டது. இதனால் விஜயகாந்தின் தே.மு.தி.க போன்ற கட்சிகள் கூட்டுச்சேராமல் தனித்து களமிறங்கியது. இது ஸ்டாலினின் தி.மு.கவுக்கு சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தியது.   

கொள்கையின்றி பணத்துக்காகவும், உலர் உணவுப் பொதிகளுக்காகவும், அதிகாரத்திற்காகவும் வாக்களிக்கின்ற மக்கள் எல்லா இடங்களிலும் உள்ளார்கள். ஆனால் இன்று தி.மு.க கூட்டணியின் பெரும் வெற்றியானது இவைகள் அனைத்தையும் கடந்ததொரு சாதனையாகும். 

அத்துடன் தி.மு.க தலைமையில் பலமான கூட்டணி அமைப்பதற்காக ஏனைய தோழமை கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்ததில் முரண்டுபிடிக்காமல் விட்டுக்கொடுப்புடன் செயல்பட்டதானது அதன் தலைவர் ஸ்டாலின் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினை காண்பித்துள்ளது.  

அன்றுதொட்டு தி.மு.க ஒரு குடும்ப கட்சியென்ற பலமான விமர்சனம் இருந்தாலும், அவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியில் தனது வாரிசுகளை அடுத்த தலைமைக்கு தயார் செய்வதில் கலைஞர் கருணாநிதி பல தடைகளை தகர்த்தெறிந்தார். 

தி.மு.கவின் போர்வாள் என்று கலைஞரால் புகழாரம் சூட்டப்பட்டவரும், கலைஞருக்கு பின்பு அடுத்த தலைவராக அறியப்பட்டவருமான வை.கோவை கட்சியிலிருந்து ஓரம்கட்டுவதற்கு பல வியூகங்களை வகுத்து அதில் கருணாநிதி வெற்றிபெற்றார்.      

குடும்ப அரசியலுக்கு தடையாக இருந்த வைக்கோவை ஓரம்கட்டியபின்பும் தனது வாரிசுகளுக்கிடையில் பாரிய இழுபறி இருந்தது. அந்தவகையில் கருணாநிதியின் புதல்வர்களான அழகிரி, ஸ்டாலின் ஆகியோர்களுக்கிடையில் அடுத்த தலைவர் யார் என்பதில் கடும் பனிப்போர் நிலவியது. அதிலும் இளையமகன் ஸ்டாலினை ஓர் ஆளுமையுள்ள தலைவராக கலைஞர் கருணாநிதி இனங்கண்டார்.  

ஈழத் தமிழர்களுக்காக பலமாக குரல்கொடுக்கின்ற கட்சிகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தாலும், நாம் தமிழர் கட்சி சொந்த காலில் தனித்தே போட்டியிட்டது. 

பழம்பெரும் திராவிட கட்சிகளுக்கிடையில் தனித்துநின்று போட்டியிட்டு வெற்றிபெறுவதில் உள்ள சவால்கள் பற்றி அறிந்திருந்தும், சீமான் அவர்கள் தனது கொள்கையில் விட்டுக்கொடுப்பு செய்யாமல் தனித்து களமிறங்கியதானது துணிச்சலான விடயமாகும். 

சீமான் அவர்கள் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இந்த தேர்தலில் அதிகமான வாக்குளை பெற்றுள்ளார். மனம் தளராது தொடர்ந்து இதே வேகத்துடன் பயணித்தால் அடுத்த தேர்தலில் பலமான சக்தியாக தமிழக தேர்தலில் சீமானால் வெற்றிபெற முடியும். இல்லாவிட்டால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட நிலைதான் உருவாகும். 

எனவே இன்றைய வெற்றியானது ஸ்டாலினின் தனிப்பட்ட வெற்றியோ அல்லது தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றியோ அல்ல. மாறாக எடப்பாடியின் அ.தி.மு.கவின் பலயீனமான அரசியல் வியூகத்தாலும், தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட பலமான தோழமை கட்சிகளின் உதவியுடனுமே இந்த வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s