மாளிகைக்காடு நிருபர்
நாட்டிலே அண்மைக்காலமாக மொட்டு அரசு உட்கட்சி மோதல்களின் உக்கிரத்தினால் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. அதனை சமப்படுத்தும் நோக்கத்துக்காகவே தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையின் எந்த மூலையிலேனும் ஈஸ்டர் தின தாக்குதல்தாரிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணினார், அல்லது அந்த சம்பவத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோனார் என்று தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது எந்த குற்றச்சாட்டுகளும் எங்கும் பதிவானதாக தெரியவில்லை. ஆகவே இதனை மிகப் பெரும் அரசியல் பழிவாங்கலாகவே நோக்க வேண்டியுள்ளது என கல்முனை மாநகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான உறுப்பினர் பீ.எம். ஷிபான் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், அவர் மீண்டும் ஜனநாயகத்துக்கு விரோதமாக கைதாணையை காண்பிக்காமலும், கைதுக்கான காரணங்களை தெளிவுபடுத்தாமலும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறி நடுநிசியில், அதிகார உச்சத்தில் மனிதாபிமானமின்றி கைது செய்யப்பட்டு இருப்பதனை வன்மையாக கண்டிக்கிறேன். வேண்டுமென்றே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் வரிசையிலே தலைவர் றிசாட் பதியுதீனும் அவருடைய தம்பி றியாஜ் பதியுதீனும் இணைக்கப்பட்டுள்ளமை ரமழானுடைய மாதத்திலே இந்த நாட்டு முஸ்லிம் மக்களை வேதனையில் வாட்டுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.