சஹ்ரான் ஹாசிமின் குழுவினர் 2019 இல் நடாத்திய உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலை பற்றி அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முறனானதாகவே உள்ளது. இதனால் எதனை நம்புவது என்ற குழப்பத்தில் மக்கள் இருந்துவருகின்றனர்.

இந்த குழப்பத்திற்கு இன்னும் வலுச்சேர்க்கும் விதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் கருத்துக்களும் உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஸ்லிம்களுக்கெதிரான வேருவளை வன்முறையும் காரணம் என்றும் அதற்கு உடந்தையாக இருந்த பொதுபலசேனா அமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது.
அதன்பின்பு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் அண்மையில் கருத்து கூறுகையில், “தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இப்ராஹீம் என்பவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்காக ஐம்பது மில்லியன் பணத்தினை செலவிட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை நடாத்தியவர்கள் அந்த பணத்தினை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் இஸ்லாமிய அரசினை உருவாக்குவதற்காகவே இந்த நிதியை அவர்கள் பயன்படுத்தினர்.” என்று அமைச்சர் கூறியிருந்தார்.
தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கருத்து கூறுகையில் “கூலிக்கு அமர்த்தப்பட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயல்பாட்டினால்தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிந்துணர்வும், சகிப்புத் தன்மையும் எம்மிடம் இல்லை” என்று கூறியிருந்தார்.
அதாவது சஹ்ரான் குழு உருவாகுவதற்கு எமது முஸ்லிம் சமூகத்தின் செயல்பாடுகளே காரணம் என்று ரவுப் ஹக்கீம் அவர்கள் தனது சமூகத்தின் மீது பழியை சுமத்தியுள்ளார். இந்த கருத்தினை ஓர் ஆவணமாக சில ஊடகங்கள் பயன்படுத்தியுள்ளதனை காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் பேருவளை சம்பவங்கள் உட்பட சிங்கள அடிப்படைவாதிகளின் முஸ்லிம்களுக்கெதிரான அடக்கு முறைகள்தான் சஹ்ரான் குழு உருவாக்கத்திற்கு காரணம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையிலும்,
தங்களிடம் இருந்த பணத்தினை பயன்படுத்தி உல்லாசமாக வாழ முயற்சிக்காமல் இஸ்லாமிய ஆட்சியினை உருவாக்க சஹ்ரான் குழுவினர் முயன்றாதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறிய நிலையிலும்,
இவைகள் அனைத்திற்கும் மாற்றமான முறையில் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் கருத்தானது முஸ்லிம் சமூகத்தின் மீது பழியை சுமத்துகின்ற இனவாதிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
தலைவரின் கருத்து பற்றி பகுத்தறிவுரீதியாக ஆராய்ந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கல்வி கற்றவர்கள், நன்றாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள் அத்துடன் பண வசதியும் உள்ளவர்கள். இவ்வாறானவர்கள் கூலிக்காக இந்த நாசகார செயலில் ஈடுபட்டிருந்தால், பெறப்படுகின்ற கூலியை எவ்வாறு அனுபவிப்பது ? யார் அனுபவிப்பது ? என்று சிந்திக்க தெரியாதவர்களாக கொலையாளிகள் இருந்திருப்பார்களா ?
அத்துடன் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அப்பாவி முஸ்லிம்களை பந்தாடிவருகின்ற நிலையில் முஸ்லிம்களிடம் சகிப்புத்தன்மை இல்லை என்று தலைவரினால் எவ்வாறு உறுதியாக கூற முடியும்.
எனவே வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று தங்களது அரசியலுக்காக முஸ்லிம் மக்கள்மீது பழிபோட்டு இனவாதிகளின் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்காமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு சட்டரீதியாக தண்டனை பெற்றுக்கொடுப்பதே தலைவர்கள் செய்யவேண்டிய வழிமுறையாகும்.
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது