முஸ்லிம் சமய திணைக்களத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களை இரத்து செய்தது ஏன்?

கொழும்பு: முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் தகவல்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். சில நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, முஸ்லிம் சமய  மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனங்களின் பதிவுகள் இரத்துச்செய்யப்பட்டிருப்பது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பல தன்னார்வ நலனோம்புகை நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக தொடர்பாக பாதுகாப்பு பிரிவினால் திணைக்களத்திடம் விசாரித்தபோது, அதுதொடர்பான தகவல்கள் திணைக்களத்திடம் இருக்கவில்லை. இது கேள்விக்குறியான விடயமாகும்.

இந்த நிறுவனங்களின் கணக்கு விபரங்கள் திணைக்களத்துக்கு வழங்கப்படாத நிலையில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு திணைக்களத்துக்கு எந்தவித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. அதனால் இதுதொடர்பாக புதிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இவ்வாறான நன்கொடை நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களையும் கம்பனிகள் சட்டத்தின் கீழ் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்யுமாறு வக்பு சபை கடந்த 2019 ஆண்டு எழுத்து மூலம் அந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. இதன்போது சில தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதில்லை என்பது தெரியவந்தது. அதன் பிரகாரம் அந்த நிறுவனங்களின் பதிவு இரத்துச்செய்யப்பட்டிருக்கின்றது.

அத்துடன் வக்பு சபை சட்டத்துக்கமைய பதிவு செய்யப்பட்டிருந்த ஏனைய நிறுவனங்களுக்கு ஒரு வருடகாலம் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் 2020 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவு இலக்கத்தை பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் சில நிறுவனங்கள் வக்பு சபை சட்டத்தின் கீழ் பதிவு செய்யபட்டுள்ளன.ஏனைய நிறுவனங்கள் கம்பனிகள் சட்டம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s