கொழும்பு: தனது எம்.பி. பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தான் எம்.பி. பதவியை இழப்பது தொடர்பில் இடைக்கால எழுத்தாணை கட்டளையொன்றை (ரிட் கட்டளை) வழங்குமாறு தெரிவித்து, ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனுவே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த ஜனவரி மாதம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சிறைத் தண்டனைக்கு அமைய, ரஞ்சன் ராமநாயக்க அவரது எம்.பி. பதவியை இழந்துள்ளதாக சட்ட மாஅதிபர், பராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்திருந்தார்.
3 மாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் எம்.பி. பதவி நீக்கப்படும் என்பதற்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவின் 3 மாத கெடு நிறைவடையவுள்ளதாகவும் அதற்கு முன்னர் அவரது எம்.பி. பதவியை பறிப்பதை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு, அவரது சட்டத்தரணி சுரேன் பெனாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதற்கமைய, ரஞ்சன் ராமநாயக்க இன்னும் ஒரிரு தினங்களில் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.