கொழும்பு: சமூக வலைத்தளங்கள் ஊடாக கடும்போக்குவாத மற்றும் ஸஹ்ரான் ஹாஷிமின் கொள்கைகளை பரப்பியமை தொடர்பில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரும், திஹாரியைச் சேர்ந்த 32 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் பணி புரிந்த குறித்த இருவரும், இலங்கையர்களை உள்ளடக்கிய ‘வன் உம்மாஹ்’ எனும் வட்ஸ்அப் குழுமம் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஸஹ்ரானின் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு கடும்போக்குவாத மற்றும் வஹாபிஸ கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் இலங்கையிலிருந்து உரிய அதிகாரிகளால், கட்டார் அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து TID யினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவரும் நேற்றையதினம் (31) கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்களில் ஒருவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து ஒரு சில மணித்தியாலங்களுக்கு பின்னர், ஸஹ்ரான் ஹாஷிம் தனது குழுவினருடன் ‘பைய்யத்’ (சத்தியப்பிரமாணம்) செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், அது தவிர பல்வேறு கடும்போக்குவாத கருத்துகளைக் கொண்ட வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளதாகவும், அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, குறித்த சந்தேகநபர்கள், பயங்கராவாத தடுப்பு சட்டத்தின் கீழ் TIDயில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
அது தவிர, நேற்றையதினம் (31) மூதூர் பிரதேசத்தில் வைத்து மேலும் இரு சந்தேகநபர்கள் TID இனால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூரைச் சேர்ந்த 37, 38 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்த அஜித் ரோஹண, கடந்த 2018 இல் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவர்களுக்கு, ஸஹ்ரானை பின்பற்றும் இருவருக்கு பல்வேறு வகுப்புகளை நடாத்த வசதிகளை வழங்கியதாக குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்கள் கொழும்பிலுள்ள TID அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.