கொரோனா வைரஸினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு, நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் முயல்வதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எம்.சுபைர் தெரிவித்தார்.

ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (21) கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டதாகவும், அதற்குள் மறைவான விடயங்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
ஜனாஸா பெட்டிகள் மாத்திரம் எரிக்கப்பட்டிருந்தால், அந்த ஜனாஸாக்களுக்கு என்ன நடந்தது என்பதனை அவர் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
ஹாபிஸ் நஸீரின் அண்மைக்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பி வருகிறது. அவற்றை சமாளிப்பதற்காகவே, அவர் இவ்வாறான கருத்துக்களைக்கூறி வருகிறார்.
முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் நெருப்பில் எரிந்த போது, முஸ்லிம் சமூகம் பட்ட துன்பங்கள் வேதனைகள் ஏராளம். ஜனாஸா அடக்கத்தின் பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது சற்று ஆறுதல் அடைந்துள்ள நிலையில், சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைகளை விட்டு, பெரும்பான்மை சமூகத்தை தூண்டிவிடுகிறார்.
நாட்டையும் மக்களையும் குழப்புகின்ற இவ்வாறான செயற்பாடுகளை அவர் கைவிட வேண்டும்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இனவாதிகளாக காட்டி, மிக மோசமாக பிரசாரம் செய்து வாக்குகளை சூறையாடிய ஹாபிஸ் நஸீர், இப்போது ராஜபக்ஷக்களை புகழ்பாடுவது பதவிகளுக்காகவேயன்றி வேறெதுவுமில்லை.
ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டதாகவும், அதற்குள் மறைவான விடயங்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்த கருத்தினால் இனவாதிகள் நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றார்.