சமூகத்தை காப்பாற்ற வேண்டி மு.கா தலைவர் ஹக்கீம், அவசரமாக ஹாபிஸ் நஸீரின் வாய்க்கு பூட்டு போட முன்வரவேண்டும்

நூருல் ஹுதா உமர்

“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவில்லை வெறும் ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிந்தன” என்ற சர்ச்சைக்குரிய அறிக்கையை ஹாபிஸ் நசீர் வெளியிட்டு இருப்பதானது இந்த முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதரம் பாதாளத்தில் தள்ளி விடுமோ என்ற ஐயம் குடிகொண்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீரின் சமீபத்தைய அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேசத்தின் இறுகிய பிடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையில் கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கும் விவகாரம் முடிவுக்கு வந்தது . இலங்கையில் கொரோனா  ஜனாஸாக்களை அடக்குவதற்கு கேட்டுப்போராடிய எந்த ஜனநாயக போராட்டத்திலும் 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் எம்.பீ க்கள் கலந்து கொண்டதை கண்ணாரக்காண முடிந்திருக்கவில்லை. ஆனால் மறைமுகமாக அவர்களுடைய பங்களிப்பு இருப்பதனை மறுக்க முடியாமலும் இல்லை. 

இருப்பினும் ஹாபிஸ் நசீர் போன்றவர்கள் ஜனாஸா அடக்க அனுமதி கிடைத்த நாளிலிருந்து  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகங்களில் தன்னாலேயே அவை முடிந்ததாக எண்ணி தமது செய்திகளை பதிவேற்றி வந்தனர். அதன் இறுதி அங்கமாக “முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவில்லை வெறும் ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிந்தன” என்ற சர்ச்சைக்குரிய அறிக்கையை ஹாபிஸ் நசீர் வெளியிட்டு இருப்பதானது இந்த முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதரம் பாதாளத்தில் தள்ளி விடுமோ என்ற ஐயம் குடிகொண்டுள்ளது. 

பௌத்த தேரர்கள் இவ்வாறான அறிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும், “ஹாபீஸ் நசீர் குறிப்பிடும் இந்த அறிக்கையானது உண்மையாயின்  நாட்டு சட்டத்திற்கு ஒருபோதும் எவரும் கட்டுப்படக் கூடாது ” என்று அழுத்தி கூறியிருக்கிறார்கள். இவ்வாறு உச்சாப்பில் சமூகத்தின் எதிர்கால நலன்களில் கருத்தின்றி செயற்பட்டு அறிக்கைவிடும் அரசியல்வாதிகளை அவர் சார்ந்த  கட்சியோ, கட்சித் தலைமையோ, முஸ்லிம் சிவில் சமூகங்களோ கட்டுப்படுத்துவதற்கு இயலாத நிலையில் உள்ளது எமது சமூகத்தின் சாபக்கேடாகும்.

இருப்பினும் கட்சி தலைவர் றவூப் ஹக்கீம் “ஹாபிஸ் நசீர் அவர்களின் கருத்து முட்டாள் தனமானது” என்று கூறியுள்ளார். அவர் அத்துடன் தனது கடமை முடிந்தது என்று இருக்காமல், தனது கட்சி உறுப்பினரின் வாய்க்கு பூட்டு போடும் வேலையை விரைவாக செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. 

ஹாபிஸ் நசீர் அவர்கள் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவது தனது முயற்சியால் தான் என்பதை முஸ்லிம் சமூகம் ஏற்கும் வரை இன்னும் என்னென்ன சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைக்கப்போகின்றாரோ? என்ற அச்சம் சமூகத்தில் எழ ஆரம்பித்துள்ளது. குற்றபுலனாய்வுக்கு சென்ற தேரர்கள் நாளை என்ன சதி செய்வார்கள் என்று யாராலும் ஊகிக்க முடியாதுள்ளது. அது ஜனாஸா அடக்கம் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்துமானால், முழு முஸ்லிம் சமூகத்தையுமே பாதிக்கும். ஆகவேதான் ஹாபிஸ் நசீர் என்ற மரங்கொத்தி வாழை மரத்தில் கொத்தி கொண்டது மாத்திரமன்றி, முழு சமூகத்தையுமே வாழை மரத்தில் கொத்த வைத்த கதையாக மாற்றிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s