கொழும்பு: இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என, வெளிவிவகார அமைச்சர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இது ஒரு முன்மொழிவு மாத்திரமே எனவும் தெரிவித்துள்ள அவர், இவ்விடயம் கலந்துரையாடல்களின் கீழ் மாத்திரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த முன்மொழிவு, தேசியப் பாதுகாப்பு தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையிலானது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், அரசாங்கம் விரிவான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதோடு, அதற்கு அவசியமான ஆலோசனைகளை நடாத்துதல் மற்றும் உடன்பாட்டை எட்டுதல் தொடர்பில் போதியளவான நேரம் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.